Saturday, December 30, 2017

சென்று வா என் செல்லமே

புத்துணர்ச்சியுடன் வரவேற்க புது வருடம் 2018 புதுப்பொலிவுடன் இருக்கும் வேளையில், "AiringSense அறிவும் அனுபவமும்"  வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Happy New Year 2018
இந்த வருடத்தின் இறுதி பதிவாக கவிதை நடையில் ஒரு பதிவு "சென்று வா என் செல்லமே" 

உன் ஓரப்பார்வை படுவதற்கு 
படாதபாடு படுபவர்கள் 
பலர் பயணித்திருக்க 
என் அகம் மகிழ்வாக காட்சிதந்து 
என் புறம் வாடாமல் கட்டியணைத்து 
என்னுடனேயே இருந்துகொண்டாய் 
இத்தனை நாளும் !


என் கவனம் இல்லாமல்  
உன் பெயர் சொல்லும் அளவில் 
மாற்றம் வந்தது என்னில் 
உன்னை பார்க்காமல் விடுபட்ட நாட்கள் 
குழப்பத்தின் உச்சம் தொட்ட நாட்கள் !

உன்மீது,
ஆரம்பத்தில் அதிகம் இல்லா ஆர்வம் 
இடையில் ஒளிந்திருந்தது போலும் 
இறுதியில் வந்து ஒட்டிக்கொண்டது இணக்கமாக !

உன்னை எண்ணி எண்ணி 
நான் கண்ட கனவுகள் ஏராளம் 
ஆனால் அரங்கேற்றியது குறைவுதான் !ஏமாற்றிவிட்டாய்  !

இருந்தாலும்,
கவலைக்கடலில் மூழ்கித் திணறும் 
சமயம் தோறும் சரியாக 'DATE' தந்து 
சிறப்பு செய்தாயே !
எளிதில் மறக்கமுடியுமா இதனை !

அதுமட்டுமா,
வெதுவெதுப்பான முன்பகுதியையும் 
ஜிவ்வென்ற பின்பகுதியையும் 
பாரபட்சமில்லாமல் பரிசளித்தாயே 
மறக்க முடியுமா இதனை மறக்க முடியுமா ? 

இந்நன்றிகள் மறவாமல் அடியேன் இங்கிருக்க 
என் செல்லம் எனைவிட்டு போகிறது பாருங்களேன் !

உனக்கும் எனக்கும் இடையிலான இவ்வூடலினை
உன் 'ஒன்றுவிட்ட' நண்பர் 
தொடர்வாரா இல்லையா 
எனும் சந்தேகம் சாந்தமாக அரும்ப 
உன்னை வழி அனுப்பும் நேரமிது !

ஒவ்வொரு படியாய் நான் உயர 
ஒவ்வொரு நாளாய் இறக்கம் கண்டாய் நீ !
அந்நாட்களின் நினைவுகளுடன் நான் 
அடைந்த வெற்றிகளின் அச்சாரமாக நீ !
சென்று வா என் செல்லமே ( 2017

சென்று வா என் செல்லமே 2017
Follow Me @ FaceBook !

Friday, December 29, 2017

பிறவி சொட்டையன்


பிறவி சொட்டையன்
தலைமுடிதான் காரணமாம் 
என்னிடம் காதல் வருவதற்கு !

பின்னாளில் பிறவி சொட்டையனை 
கரம் பிடித்தாள் !!

Follow Manimaran @ FaceBook 

Friday, August 11, 2017

சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க !

இறக்கை பறப்பதற்கே; தவழ்வதற்கு அல்ல என்ற அப்துல் கலாம் ஐயா அவர்களின் பொன்மொழியை சொல்லி தலைப்பினுக்கு பெருமை சேர்த்தே தொடங்குகிறேன் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
எங்கோ ஆகாய வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளை கண்டு நமக்கும் சிறகுகள் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்கள்தான் நாம் அனைவருமே ! இவ்வாறு பறவைகள் வானளவு பறப்பதற்கு அதன் சிறகுகள் மட்டுமே காரணம் என்று நாம் நினைத்தால் அது சற்றே தவறுதான் ! ஆம் . பறவைகள் அதன் மீதும் அதன் சிறகின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையினால் மட்டுமே உந்தப்பட்டு உயர உயர செல்கின்றன ! சிறகுள்ள பறவைகள் அனைத்தும் நினைத்த உயரத்தை அடைய முடிவது இல்லை ! தன் சிறகின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பறவைகள் மட்டுமே உயர உயர பறந்து நினைத்த உயரத்தை அடைகின்றன ! இதனை நம் வாழ்க்கையுடன் எளிதாக பொருத்தி பார்க்க இயலும் ! சிறகுகளை நல்ல பண்புகளின் அடையாளமாக கருதும் ஒவ்வொரு மனிதனும் எட்டாத உயரத்தை எளிதாக எட்ட முடியும் என்பதே இத்தலைப்பு கொண்டுள்ள மறைமுக விளக்கம் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
உழைப்பு, உண்மை, உதவி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, விவேகம் உள்ளிட்ட அனைத்து சிறந்த பண்புகளுமே மனிதனின் சிறகுகளை வலுவாக்கி அவர்களது இலக்கை நோக்கி பறக்க பயணிக்க உதவுகிறது ! வெற்றி எனும் வசந்த வெளியில் வட்டமிட்டு பறந்திடவே வேண்டும் நமக்கு மேற்கூறிய சிறந்த பண்புச் சிறகுகள் ! சிறகு கொண்ட பறவையிடம் முயற்சி கிடையாது எனில் உயரம் அடையாது. அது போலவே மனிதன் தன் திறமைகளை தன்னுள் மட்டும் வைத்துக்கொண்டு வெளிப்படுத்தாவிடில் வெற்றி கிடையாது ! இவ்வெற்றியினை அடைவதற்கு பல தடைகள் வரலாம் . பல அவமானங்கள் வரலாம் . இந்த தடைகளையும் அவமானங்களையும் கண்டு துவண்டுபோய் சிறகொடிந்த பறவையாக இல்லாமல் துளிர்த்து எழுந்தால் வெற்றி வானில் பறந்து கொண்டே இருக்கலாம் !
சிறகுகள் வேண்டும் உயரப் பறக்க
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் ! இந்த பழமொழியை நான் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன் ! பறந்து விரிந்த வானம் பருந்துகளுக்கு மட்டுமல்ல சின்னஞ்சிறு குருவிகளுக்கும்தான் ! மேனியில் முளைத்த சிறகுகள் முடங்கி விட கூடாது என்பதற்காக யார் வேண்டுமானாலும் பறக்கலாம் . அது பருந்தாக இருந்தால் என்ன ? சின்ன குருவியாக இருந்தால் என்ன ? முயற்சி ஒன்றுதான் ! இதனை மனித குலத்திற்கும் அடிப்படையாக வைத்து கொள்ளலாம் ! மனிதரில் எவ்வகையிலும் ஏற்ற தாழ்வுகள் கிடையாது. முயற்சி செய்வோர் முன்னர் வருவார் அவருக்கே உலகம் சொந்தம் !

Monday, August 7, 2017

வேலையில்லா பட்டதாரி


UNEMPLOYED GRADUATE

மழையில்லா காலத்தில் 
மரத்தின் நிழலில் 
தப்பிப் பிழைத்து வாழும் 
சிறு செடியைப் போல் 
நான் எனது வீட்டில் 
------- வேலையில்லா பட்டதாரி

Saturday, June 3, 2017

முதுமை பேசும் இளமை

100 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வரும்போது எல்லாம் புருவத்தை உயர்த்தி 'அட' அன்று ஆச்சரியத்துடன் பார்க்கும் நம் அனைவருக்கும் இப்பதிவும் ஒரு ஆச்சரியமே !

செய்திகளில் மட்டுமே அறியப்பட்டு கொண்டிருந்த இவர்களை போன்றோர்கள் நமது பகுதியில் நமது உறவினராக அதுவும் நம் ஆத்தாவாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய வியப்பினையும் கிடைக்கக்கூடிய அனுபவத்தையும் விவரிக்கிறது இப்பதிவு ! 

தொன்று தொட்டு இதுவரை சிறு குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்று சொன்னால் தனது பெற்றோர்களை காட்டிலும் தனது பாட்டன் பாட்டிகளிடம் ( பெற்றோரின் பெற்றோர் ) அன்பு செலுத்துவதும் கதை கேட்பதும் விளையாடுவதும்தான் ! அந்த வகையில் நானும் சிறுவயதில் அதிக நேரம் கழித்தது வயதானவர்களுடன்தான் ! மற்ற குழந்தைகள் ஏதாவது விளையாடி கொண்டிருக்க நான் மட்டும் முதியவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்க, இவனுக்குள்  இவன் பாட்டன் ஆவி புகுந்திடிச்சு போல அதனாலதான் எப்பவும் பெருசுக கூடவே பேசிகிட்டு இருக்கு என எனது அம்மா மற்றவர்களிடத்தில் விளையாட்டுத் தோரணையில் பேசியது இப்பொழுது நினைவுக்கு வருகிறது ! இந்த பின்னணிதான் எனக்கு ஆத்தா முறையான , ஏறக்குறைய 110 வயதை நெருங்கி சமீபத்தில் இயற்கை எய்திய இவருக்காக ஒரு பதிவிடலாம் என தோன்றியதற்கு ஒரு ஆரம்பப்புள்ளி ! 

கீழ் உள்ள படத்தில் நீங்கள் காணக்கூடிய பெண்தான் இப்பதிவின் நாயகி "நெடச்சலாபாளையம் ஆத்தா" (வேறு பெயர் உள்ளதா என தெரியவில்லை. என் நினைவில் பதிந்த பெயர் இதுதான் ) ! முற்காலத்து மக்களுக்கு இம்மாதிரியான இடவாகு பெயர்கள்தானே அடையாளமாக திகழ்ந்தது . உதாரணத்திற்கு சென்னிமலைக்கவுண்டர், கூத்தம்பாளையத்தார், கருப்பணங்காட்டான் ! 

நெடச்சலாபாளையம் ஆத்தா
இவர் என் தாத்தாவிற்கு மூத்த சகோதரி ! என்  தாத்தாவிற்கு அவருடன் சேர்த்து உடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர் ! 12 பேரில் இருவர் பிறந்ததும் இறந்து விட 10 பேர் நெடுங்காலம் வாழ்ந்தனர் சிலர் இன்னமும் வாழ்க்கை பயணத்திற்கு வழி சொல்லி கொண்டுள்ளனர் ! 10 பேரில் ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் அடக்கம் ! நமது நெடச்சலாபாளையம் ஆத்தா பெண்களில் மூத்தவரும் 10 பேரில் இரண்டாவது பிறந்தவரும் ஆவார் !  

சிறு வயதிலிருந்தே தாத்தாக்கள் ஐந்து பேரிடமும் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் இருந்தன ! ஆனால் , ஆத்தாக்கள் ஐந்து பேரும் மணமுடித்து போன பிறகு அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த உறவுமுறை இருந்ததே தவிர உறுதியாக இல்லை ! ஏதேனும் நிகழ்ச்சி என்றால் கூட ஆண்களுடைய குடும்பங்களை மட்டும் அழைக்கும் வழக்கம் இருந்ததனால் ,  ஆத்தாக்கள் ஐவரிடமும் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது ! அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற செவி வழி செய்தி மட்டும் அவ்வப்போது  என் அம்மாவிடம் பெற்று கொள்வேன் ! 

இக்காரணங்களால் அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் என்னுள் இருந்து கொண்டே இருந்தது ! இந்த எனது ஆசையை ஒரு சிறுவனாக என் பெற்றோரிடம் வெளிப்படுத்திய போதெல்லாம் ஒரு நாள் சென்று பார்க்கலாம் என்று சமாதானப்படுத்தப்பட்டேனே தவிர சந்திப்பு நடைபெறவில்லை ! 

வருடங்கள் கடந்தன ! கல்லூரி வாழ்க்கை நிறைவுற்றது ! மீண்டும் எண்ணம் துளிர்த்தது ! வழக்கம் போல செவி வழி செய்தியை பெற அம்மாவை நாடினேன் ! அம்மா சொன்னார் ஐந்து ஆத்தாக்களில் இரண்டு பேர் இறந்து விட்டனர் மூன்று பேர் உயிருடன் உள்ளனர் ஒருவர் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை  இரண்டு பேர் அருகாமையில் தான் உள்ளனர் என்று ! 

இந்த முறை , தலைக்கு மேல் வளர்ந்த மகனின் பேச்சை காலம் கடத்த முடியாமல் அம்மாவும் உடன் வர நெடச்சலாபாளையம் ஆத்தா வீட்டினை சென்று அடைந்தோம் ! ஆத்தா வீட்டில் இல்லாமல் இருக்கவே பக்கத்து வீட்டுக்காரரின் உதவியை நாட அவர் சொன்னது ஆத்தாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் தூண்டியது ! அவர் சொன்னார் "உங்க ஆத்தா இப்பதான் வீட்டை எல்லாம் கூட்டி விட்டுட்டு ஒரு மைல் தூரம் தள்ளி இருக்க அவ மகள் வீட்டுக்கு நடந்து போச்சு என்று !  என்னடா இது 108 வயசுல வீட்ல வேலை எல்லாம் செஞ்சுட்டு ஒரு மைல் தூரம் நடக்குதா என்று வியப்பு துளியும் குறையாமல் அவர்கள் மகள் வீட்டினை அடைந்தோம் ! 

வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்து காபி அருந்தியவாரே வெள்ளை நிற சேலையுடனும் கருப்பு நிற மேனியுடனும் பெரிய மூக்கு கண்ணாடியை அணிந்தவாறு தென்பட்டார் ஆத்தா ! நாங்கள் யார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஆத்தாவிடம் பேச ஆரம்பித்தோம் ! இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆத்தா நாங்கள் யார் என்று தெரிந்ததும் இன்னமும் உற்சாகமாகி பேச ஆரம்பித்தார் ! 


ஆத்தாவின் உற்சாகம் 

இந்த வயதிலும் அவருடைய குரலில் இருந்த தெளிவும் கம்பீரமும் என்னை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை ! அவரை பார்த்தது ஒன்றே போதும் என்ற மகிழ்ச்சியில் இருந்த நான் , சிறுவயதில் இருந்து அவர் வாழ்ந்த வாழ்கையினையும் பசுமையான நினைவுகளையும் என் அம்மாவிடத்தில் நினைவு கூற கண் இமைக்காமல் கவனித்து கொண்டேன் ! 

முன்பெல்லாம் பொங்கல் வந்தால் அனைவரையும் அழைத்து ஒரு பெரிய பானையில் சோறு பொங்கி போடுவேன் ! இப்பவெல்லாம் யாரையும் கூப்பிடவும் முடியறது இல்ல போய் பார்க்கவும் முடியறது இல்ல என்று சொல்லி அவர் கண் கலங்கும்போதுதான் எனக்கு புரிந்தது இந்த நல்ல அப்பழுக்கற்ற மனம்தான் இவரை நோய் நொடியில்லாமல் 108 வயதை தாண்டியும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்று ! 

வெகுநேரம் பேசியபிறகு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று என் அம்மா சொன்னவுடன் தன் சேலையை சரி செய்து கொண்டு அவர் உட்கார்ந்த விதம் "எனது உற்சாகத்தை குறைக்க எவராலும் முடியாது நான்தான் எனக்கு ராணி" என்று மறைமுகமாக சொல்வதை போல் இருந்தது ! 


ஆத்தாவுடன் நானும் அம்மாவும்

ஆத்தாவின் வயதான 108 என்ற எண் என் இடைமாற்று நினைவகத்தில் ( Cache Memory ) இருந்து நகராமல் அங்கேயே தங்கி விடவே , நான் கவிதை எழுத முற்பட்ட போதெல்லாம் என் முன் வந்து வந்து போனது ! அதன் விளைவாக உந்தப்பட்டு "108 வயது பாட்டி" என்ற தலைப்பில் எதார்த்த நடையில் ஒரு பொதுக்கவிதையை பதினைந்து நிமிடத்திற்குள் எழுதும் சூழல் அமையப் பெற்றது மட்டுமல்லாமல், சிறப்பாகவும் வரிகள் கிடைக்கப்பெற்றது என் அதிர்ஷ்டமே ! 

இதோ அவ்வரிகள் உங்கள் பார்வைக்கு ------>




ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 

இந்த பழமொழிக்கு ஏற்பவே அமைந்தது நெடச்சலாபாளையம் ஆத்தாவின் தமக்கையை சந்தித்த நிகழ்வும் ! இச்சிப்பட்டி ஆத்தா என்ற பெயரால் நினைவு கூறப்படும் இவர் நெடச்சலாபாளையம் ஆத்தாவைப் போன்றே உருவ அமைப்புடனும் சுறுசுறுப்புடனும் ஒத்த குணத்துடனும் இருந்தார் ! 


இச்சிப்பட்டி ஆத்தா 
நடக்க சற்றே சிரமப்பட்டாலும் , வீட்டுக்கு வந்துட்டு டீ  குடிக்காம போறதா என எங்களை கட்டாயப்படுத்தி இருக்கவைத்து  தேநீர் விருந்தளித்தது எனக்கு இன்னமும் மறக்கவில்லை ! 

பார்த்துவிட்டு ஆத்தா வீட்டை விட்டு வெளியேறும்போது ஆத்தாவுக்கு எந்த துன்பமும் வரக்கூடாது என்றும் இவர்களை போன்றோரைத்தான் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் ! 



கற்று கொள்ள வேண்டியது  கடலளவு 

இந்த முதுமைகளிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பண்புகளும் பழக்கங்களும் ஏராளம் ! அவர்கள் வாழ்ந்த காலம்தான் பொற்காலமாக இருந்தது ! அக்காலத்தை திரும்ப பெற , இம்முதுமைகளின் பண்புகளையும் பழக்கங்களையும்  மதித்து பின்பற்றி வாழ்வது ஒன்றே வழியாகும் ! மட்டுமல்லாமல், இதுவே நம் சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் வாழ்க்கைப்பாடமாகவும் இருக்க முடியும் ! 

இவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு தேவைப்படுபவையாக நான் கூற விரும்புவது ------>

உண்மையும் உழைப்பும் - மனதில் பட்டதை பேசிக்கொண்டு இறுதி மூச்சு வரை இன்பமாக உழைத்து கொண்டிருக்கும் இவர்களை எந்த நோயும் அவ்வளவு எளிதாக அண்டியதில்லை ! 30 வருடத்திற்கு மேல் வருடத்திற்கு குறைந்தது இருமுறை மருத்துவமனைக்கு செல்லும் நாம் நமது குழந்தைகளுக்கு இத்தேவையை உணர்த்திதான் ஆகவேண்டும் ! சோறு இல்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் வேலை செய்ய மாட்டேன் என்ற பழக்கம் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது ! ( வாழ்வதற்கு சோறுதான் அத்தியாவசியமே தவிர மடிக்கணினியோ , கைபேசியோ இல்லை என்பது நமக்கு தெரியாததா என்ன ?)

விருந்தோம்பல் - இக்குணம் தமிழ் மக்களின் தலையாய குணமாக கருதப்படுகிறது ! மற்றவர்களுக்கு விருந்து அளித்து மன நிறைவு அடையும் தன்மை நம் அனைவரிடத்திலும் வருதல் நலம் ! ( பக்கத்து வீட்டில் இருப்பவரே யார் என்று தெரியாத பட்சத்தில் விருந்தோம்பல் எங்கிருந்து - இன்றைய நிலை )

மதிப்பும் மரியாதையும் - பெற்றோரின் பேச்சு எதுவாயினும் மறுதலிக்காமல் மௌனத்தையே  பதிலாக அளிக்கும் நம் மூதாதையர்கள் வாக்கின் மீதும் வார்த்தைகளின் மீதும் மதிப்பும் , மனிதர்களின் மீது மரியாதையும் கொண்டிருந்தனர் ! கைகாட்டியவரே கணவன் ஆனார் - கரம் பிடித்தவரே தெய்வம் ஆனார் ! ஆசிரியர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்தே பார்க்கப்பட்டார்கள் !  மாமனார் முன்பு எப்பொழுதும் உட்கார்ந்து பேச தயங்கிய அக்காலத்து பெண்களை போல் இப்பொழுது எந்த மூலையில் தேடினாலும் கிடைப்பார்களா சொல்லுங்கள் ! ( அப்படி என்றால் பெண்களுக்கு சம உரிமை இல்லையா என்று நீங்கள் கொதித்து எழுபவராக இருந்தால் , பழைய கால வரலாற்றை ஒருமுறை அறிந்து வரவும் ) ! 

அன்பும் அரவணைப்பும் - 10 குழந்தைகள் இருந்தாலும் பாசம் காட்ட தவறாத நம் வீரமங்கைகள் வாயில்லா பிராணிகளையும் தம் குடும்பத்தின் ஒருவராகவே பாவித்து வந்தனர் ! வளர்த்த மாடு இறந்து விட்டால் கூட மூன்று நான்கு நாட்கள் சாப்பிடாமல் இருந்ததை நானே கண்கூடாக பார்த்துள்ளேன் ! இதனையும் நாம் நம் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து ஊட்ட வேண்டும் !   

இப்பதிவின் மூலமாக நாம் அனைவரும் தெரிந்து நடக்க வேண்டியது ஒன்றுதான் - மேற்கண்ட நற்பண்புகளை நம் குழந்தைகளிடத்தில்  வளர்ப்பதின் மூலம் அவர்களது எதிர்காலத்தை மட்டும் அல்லாமல் சமூகத்தையும் சீராக்க முடியும்  என்பதே ! 


இரு பொருள் பொதிந்த  தலைப்பு ( முதுமை பேசும் இளமை )


இந்த தலைப்பினுக்கு  என்னால் இரு வகை விளக்கங்களை கொடுக்க முடியும் ! 

1. இளமையை பற்றி பேசும் முதுமை - வயதான பிறகு இளமைகாலத்தைப் பற்றி பேசி பொழுதை கழிப்பதுதான் இயல்பு ! அவ்வாறான முதுமை காலம் நமக்கும் இனிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நினைவு கூர்ந்து அளவளாவதற்கு ஏற்றவாறு பசுமையான நினைவுகளாக நம் நிகழ்கால செயல்பாடுகள் அமைய வேண்டும் ! 

 2.    முதுமையை பற்றி பேசும் இளமை - நமது முன்னோர்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்வது நாம் நம்மை மரபணு அடிப்படையில் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைகிறது ! நமது வம்சத்தை பற்றிய அடிப்படை அறிவுடன் அவர்களை மதிக்கவும் அரவணைக்கவும் செய்வது சிறந்த மனிதமாகிறது ! 


படித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !   



மேலும் தொடர்புக்கு -----> மணிமாறன் @ முகநூல் !




Friday, May 5, 2017

அச்சச்சோ ! என்னாச்சு ?

தலைப்பை பார்த்து குழம்பாமல் அனைவரும் செய்யும் விளம்பர யுக்திதான் இது என்று நினைக்கும் அனைத்து புத்திசாலி நண்பர்களுக்கும் இனியதொரு வணக்கம் ! சரி நேரிடையாக கருத்தினுள் ---->

கவிதை எழுதுவதில் நாட்டம் ஏற்பட்ட பிறகு என்னளவில் தோன்றக்கூடிய சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை கவிதையாக மாற்றி வந்தேன் (கவிஞர்கள் மன்னிக்கவும் ) ! அந்த கவிதைகளையும் கவிதையை பற்றிய என்னுடைய பார்வையையும் இத்தளத்தில் முன்னரே பதிவிட்டுள்ளேன் ! அதனை பார்ப்பதற்கு கீழ் உள்ள இணைப்பை கொடுக்கவும் ! 


அதன் பிறகு அனைவராலும் அதிகம் போற்றப்படுவதும் இகழப்படுவதுமான காதலை பற்றி ஏதாவது எழுதினால் என்ன என்ற ஒரு யோசனை தோன்றியது ! அப்படி நினைக்கையில் என் சிந்தையில் வந்து போன ஒரு கருவை எடுத்து கொண்டுதான் இந்த கவிதையை எழுதினேன் சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு ! இதனை எழுதுவது ஒன்றும் அவ்வளவு எளிதாக எனக்கு இருந்து விடவில்லை ! அனுபவ அறிவு இதிலில்லா காரணத்தால் கேள்வி ஞானத்தின் உதவியுடன் நேரம் எடுத்தே எழுத முடிந்தது !  காதலில் மூழ்கி திளைத்திருந்தால் ஒரு நொடியில் காவியம் படைத்திருக்கலாமோ என்னவோ ? மூழ்காமல் (காதலில் மூழ்காமல்) மேலே இருந்து பார்த்து மட்டுமே எழுதியதால் என்னமோ இக்கவிதை தனி சிறப்பை பெறுவதாக உணர்கிறேன் ! 

இக்கவிதையின் பொருள் மிகவும் புதியதாக இருக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லை என்றாலும் கூட வார்த்தை அமைப்பு ரசிக்கும்படியாக இருக்கும் என்று கூற முடியும் ! மேலும் பல யோசனைகள் காதல் கவிதைகள் எழுதுவதற்காக இருந்தாலும் கூட வேலைப்பளுவின் காரணமாக முடியவில்லை. விரைவில் புது பொலிவுடன் அவைகள் பார்வைக்கு வரும் ! 

உங்களது மேலான கருத்துகள் வரவேற்க படுகின்றன ! 

கவிதையை படிக்கவும் ----->

அச்சச்சோ ! என்னாச்சு ?
உலகம் மகிழ்ந்திருக்க உள்ளுக்குள் அழுகிறேன் 
பெற்றுக்கொண்ட வேதனையால் பாதைமாறி நிற்கிறேன் 
இப்பிணியை குணமாக்க நானெங்கு போவேனோ !
அச்சச்சோ ! புண்ணாச்சா ?
ம்ம்..மனம் புண்ணாச்சு 
காதல்பிரிவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினாள் காதலி !
அச்சச்சோ ! மேல சொல்லு
கடமை விடுவித்து காதல் செய்தேன் 
விடுப்பு எடுத்து நகர்வலம் வந்தேன் 
தடைகளை தாண்டி தவம் இருந்தேன் 
அவளுடன் வாழ அன்புடன் நான் !
உறவுகள் துறந்து அவள் கைதியானேன் 
அர்த்தம் புரியாமல் தர்க்கம் செய்தேன் 
நோக்கம் இல்லாமல் ஏக்கம் வளர்த்தேன் 
என்னவளாக அவளை கற்பனை கொண்டதால் !
நேரத்தை விரயமாக்கி வாரத்தை (ழி)ளித்தேன் 
பகிர்ந்த வார்த்தைகள் சந்தித்த இடங்கள் 
நெகிழ்ந்த தருணங்கள் மறக்காமல் தவித்தேன் 
அவள் (ங்)கம் எங்கும் நிறைந்ததனால் !
'FaceBook'-இல் பேசாத நாளும் இல்லை 
'WhatsApp'-
இல் வாராத நாளும் இல்லை 
துட்டும் கொடுத்தேன் விட்டும் கொடுத்தேன் 
அனைத்தும் நடந்தது அவள்நலம் விரும்பித்தான் !
அச்சச்சோ ! உண்மைக்காதல் போல ...
நம்பிக்கை சுமந்தே நகர்ந்து வந்தேன் 
நாளை நம் நாள் என்று ஒவ்வொரு நாளும் 
ஆனால் இன்று...
நட்புகூட வேண்டாமாம் சொல்லியே விட்டாள்
இனி என்னிடம் பேசமாட்டாள் ஒருநாளும் !
காரணம் காட்டாமலே கண் மறைந்தாள் 
நான் கண்ணீர்விட்டு சொல் மறந்தேன் 
சோகம் தாக்க சோர்ந்து போக 
சொந்தங்கள் சூழ அறிவுரைகள் தயார் எனக்கு !
அச்சச்சோ ! இப்படி பண்ணிட்டாளே பாவி ..
ஊர் அறிய கண்ணீர் விடுவதால்
கோபம் கொண்டு வீரம் காட்டுவதால் 
ஓரமாக முடங்கி மாறாக நடப்பதால் 
விரக்தி அடைந்து வீண்வாதம் செய்வதால் 
நடப்பது ஏதும் நன்மை ஆகுமோ ?
ஆகையால்,
புலம்பலும் போராட்டமும் 
என் 'மன' அறையில் மட்டும்தான் !
சேர்ந்து களித்த பொழுதுகளையும் 
சந்திக்க போகும் தனிமையையும் 
ஒன்றாக்கி நினைக்கும் ஒவ்வொரு நொடியும் 
குறைக்கும் என் ஆயுளின் பல நிமிடங்களை !
அச்சச்சோ ! அப்படினா என்னதான் செய்ய போற..
அப்படிக்கேளு.
கவலை கொள்ள கரிசனம் காட்ட 
பாசம் கூட்ட பகமை போக்க 
இன்பத்தில் திளைக்க வாழ்க்கை வாழ 
பல விடயங்கள் பரவிக் கிடக்கின்றன 
என்னைச் சுற்றிலும் !
ஆகவே,
நாளை முதல் வேறு ஓர் அத்தியாயம் 
எனக்கே உரித்தான உண்மைக் காதலுடன் !

இதே கவிதை பட வடிவமைப்பில் ஐந்து பாகமாக கீழே  கொடுக்க  பட்டுள்ளது ! 

அச்சச்சோ ! என்னாச்சு ? 1

அச்சச்சோ ! என்னாச்சு ? 2

அச்சச்சோ ! என்னாச்சு ? 3

அச்சச்சோ ! என்னாச்சு ? 4

அச்சச்சோ ! என்னாச்சு ? 5

இக்கவிதையின் ஒருங்கிணைந்த பட கோப்பு கீழே ! 



அச்சச்சோ ! என்னாச்சு ?


மேலும் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும் !