தேர்தல் நேர வணக்கம் நண்பர்களே ! மீண்டும் உங்களை இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
கொரோனா தொற்றினால் உலகமே ஓராண்டாக அவதிப்பட்டு இருக்கும் நிலையில் படிப்படியாக பழைய இயல்பு நிலையினை நோக்கி நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு நல்ல செய்தி. இதற்கு மேலும் உற்சாகமூட்டுவதாய் பரபரப்புகளை பற்றவிட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு சூட்டை கிளப்பியுள்ளது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021.
|
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அது சார்ந்த ஒரு அரசியல் பதிவினை இட்டிருந்தேன். அதற்கு நண்பர்களிடத்தில் கிடைத்த வரவேற்பினாலும் ஏன் இந்த முறை நீங்கள் பதிவு போடவில்லையா என கேட்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியதாலும் அமைகிறது இப்பதிவு. இது ஒரு சட்டமன்ற தேர்தல் சார்ந்த அரசியல் ரீதியான பதிவு. அரசியல் சமூகம் சார்ந்தது என்பதால் அதனை பற்றிய என் பார்வையையும் உங்களிடத்தில் [முக்கியமாக தேர்தல் காலத்தில்] பகிர்ந்து கொள்வது இன்றியமையாதது என்றே நான் கருதுகிறேன். ஆகவே இப்பதிவு. தேர்தல் சார்ந்து பல்வேறு தளங்களில் செய்திகளையும் கருத்துகளையும் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூட்டணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றியும் அலசப்பட்டுள்ளது. முழுமையாக படித்தபின் உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிவிடலாம்.
{ கீழே நீங்கள் காணும் கருத்துகள் அனைத்தும் என் சொந்த கருத்துகளே. நானே முழுப்பொறுப்பேற்கிறேன். }
ஜனநாயக காவலாளி
ஜனநாயக நாடுகளின் உயிர்ப்புத்தன்மையை காக்கும் அரணாக இருப்பது தேர்தல். செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் டீக்கடை வைத்திருந்தவர்கள் பிரதமர் ஆனதும் முதலமைச்சர் ஆனதும் தேர்தல் நடந்ததால் மட்டுமே சாத்தியப்பட்டது. அத்தகைய தேர்தல் வரிசையில் மத்திய அரசின் தலையெழுத்தை தீர்மானித்த நாடாளுமன்ற தேர்தல் 2019-ஐ தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்தின் தலையெழுத்தை சட்டமன்ற தேர்தல் வாயிலாக தீர்மானிக்க தேதிகளை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல் என அனைத்து தரப்பு மக்களும் நம்புவதால் உள்ளபடியே மதிப்பும் சிறப்பும் பெறுகிறது தேர்தல் நாள்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
எதிர்கொள்ளும் சவால்கள் என்ன ?
பொதுவாகவே அனைத்து நாடுகளிலும் தேர்தல் ஆணையம் தங்களின் மீதான மக்களின் நம்பக தன்மையை அதிகரிக்கவும் தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவதற்கும் மிகவும் சிரத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். இது போன்றதொரு நிலையில், மிக குறுகிய நிலப்பரப்பில் 130 கோடிக்கும் அதிகமான மக்களை கொண்டிருக்கும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் ஓரளவே முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டில் தேர்தலை நடத்துவது என்பது அனைத்து வகைகளிலும் அனைத்து நிலைகளிலும் மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு.
அதுமட்டுமில்லாமல், ஒரு நாடு ஒரு மொழி என்ற அந்த வரம்புக்குள் வராத இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற இலக்கணத்தை முன்னிறுத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
29 - மாநிலங்கள்
7 - யூனியன் பிரதேசங்கள்
7 - தேசிய கட்சிகள்
36 -மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள்
329 - இந்தியாவின் பிராந்தியக் கட்சிகள்
2044 - பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள்
22 - அதிகாரப்பூர்வ மொழிகள்
234 - அடையாளம் காணக்கூடிய தாய்மொழிகள்
1635 - பகுத்து அறியக்கூடிய மொழிகள்
3000 - சாதிகள்
15000 - சாதி உட்பிரிவுகள்
கணக்கிலடங்கா கலாச்சாரங்கள், பண்பாடுகள் மற்றும் வாழ்வு முறைகள்.
இவைகளை படித்த பின் தேர்தல் நடத்துவதில் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நீங்கள் யூகித்திருக்க முடியும். இந்த அமைப்பில் இருக்க கூடிய மக்கள் தேர்தலை ஒரு திருவிழா போல பாவிக்கின்றனர். பரந்து விரைவி வெவ்வேறு துருவங்களில் நிலை கொண்டிருக்கும் இந்த மக்களையும் கட்சிகளையும் ஒரு மைய புள்ளியில் அடைக்கும் வேலையைத்தான் செய்கிறது நம் தேர்தல் ஆணையம். இதுதான் நம் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ள கூடிய மிக பெரிய சவால் !
அடுத்து, இந்தியாவின் பெருவாரியான மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினர். இவர்களுக்கு ஓட்டுக்கு பணம் பெறுவது தவறாக தெரிவதில்லை. மாறாக கிடைக்கும் பணத்தை வைத்து சில நாள் சௌகரியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். இதனை பயன்படுத்தி சில சுய நல கட்சிகளும் செல்வந்த வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றி விடுகின்றனர். இவ்வாறு பணம் கொடுப்பதையும், பணம் பெறுவதையும் தடுத்து நிறுத்துவது தேர்தல் ஆணையம் எதிர் கொண்டிருக்க கூடிய மாபெரும் சவால். பண பட்டுவாடாவை தடுக்க முடியாமல் சில தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பது கடந்த கால வரலாறு. தேர்தல் நடத்துவது தற்பொழுது மிகவும் சிரமமாக மாறியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தன் அதிருப்தியை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மற்ற மாநிலங்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா செய்வதில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடிப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
திராவிட கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் பணப்பட்டுவாடா செய்வதில் ஒரு இலக்கணம் வகுத்து செயல்படுவதினால் மிகவும் கைதேர்ந்தவர்களாக மாறியிருக்கின்றனர் என்பதுதான் கடந்த பதினைந்து அல்லது இருபது வருட வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஓட்டுக்கு மட்டும் பணமல்ல கூட்டத்திற்கும் பணம் என்பதும் நாம் அறிந்ததே. ஒரு ஆளுக்கு 300ரூ+குவாட்டர் +பிரியாணி பார்முலா தான் அது. அப்படியென்றால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தேர்தலுக்கும் மொத்தமாக சேர்த்து ஒரு கட்சி எவ்வளவு செலவு செய்கின்றனர் என நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் மிகவும் வருத்தப்பட கூடிய செய்தி என்னவென்றால் மக்கள் இதனை ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்க தொடங்கி விட்டனர் என்பதே.
அடுத்ததாக, வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிப்பதும் ஒரு சவாலான காரியமாக அமைகிறது. தேவையான அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பேரணி மூலமாகவும், ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் செய்து மக்களை வாக்கு சாவடிக்கு வர வைக்கும் பணிகளில் ஈடுபடுகிறது தேர்தல் ஆணையம். தவறாமல் வாக்களிப்போம் என்பதை தாண்டி நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மக்களிடத்தில் கொண்டு போக முனைந்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். நேர்மையாக வாக்களிப்போம் என கல்லூரி மாணவர்களிடத்தில் உறுதிமொழியும் கையெழுத்தும் பெறும் நிகழ்வுகளும் செவ்வனே நடை பெறுகின்றன. தேர்தல் ஆணையத்திற்கு உள்ளபடியே உளப்பூர்வமான நன்றிகள்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
இதில் கையெழுத்து இடும் ஒவ்வொருவரும் உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அதன் அவசியத்தை மற்றவருக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உணரச்செய்யும் பட்சத்தில் "வாக்களிப்பதில் நேர்மை" இன்று இல்லையென்றாலும் கூடிய விரைவில் வரும் என்று நம்பலாம்.
நம்பிக்கையூட்டும் VVPAT
வெகு காலமாக பின்பற்றப்பட்டு வந்த வாக்கு சீட்டு முறை மாற்றப்பட்டு இயந்திர வாக்குப்பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இயந்திர வாக்குப்பதிவு முறைக்கும் பல எதிர்ப்புகள் வரவே குழம்பி போனது தேர்தல் ஆணையம். அதற்கான தீர்வாக VVPAT எனும் முறையை அறிமுகம் செய்தது. சோதனை முறையில் வெற்றி கண்ட VVPAT அனைத்து தொகுதிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.
மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.
எது எப்படி இருப்பினும் இயந்திரத்தின் மீதான சந்தேகம் பலருக்கும் தீர்ந்த பாடில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வாக்கு சீட்டு முறைதான் இங்கும் அதையே ஏன் தொடரக்கூடாது என்பதுதான் இன்றளவும் தொக்கி நிற்கும் கேள்வி. விடை காணப்படாத கேள்வியும் கூட.
16-வது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்
பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். பதற்றம் இல்லாத மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் பதற்றம் நிறைந்த மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாவும் தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து இம்முறை கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வழக்கம்போல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 117 தொகுதிகளில் வெற்றி பெரும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும். தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
வாக்காளர்கள் எண்ணிக்கையும் அரசியல் கணக்கும்
இந்த 2021 தேர்தலில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை வருமாறு
ஆண்கள் - 3,08,38,473 (3.08 கோடி வாக்காளர்கள்)
பெண்கள் - 3,18,28,727 (3.18 கோடி வாக்காளர்கள்)
மூன்றாம் பாலினம் - 7,246 (ஏழாயிரம் வாக்காளர்கள்)
மொத்தம் - 6,26,74,446 (6.26 கோடி வாக்காளர்கள்)
கடந்த சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிடும்பொழுது 31 லட்சம் புது வாக்காளர்கள் தற்பொழுது வாக்களிக்க உள்ளனர். இவர்களது முடிவே யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்.
இந்த புது வாக்காளர்களுக்கும் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளவைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா இல்லையா என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகின்றேன். .
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.
அரியர் மாணவர்களுக்கும் ஆதரவு.
மாணவர்களுக்கென்று இலவச இணைய தரவு அட்டைகள்.
இளைஞரணி, இளைஞர் படை என்ற கவர்ச்சிமிகு எழுச்சிமிகு சொல்லினை அரசியல் ஆதாயமாக்குதல்.
அதே போல் , ஆண்களை காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 9,90,254 பெண்கள் (கிட்டத்தட்ட 10 லட்சம் பெண்கள் ) ஆண்களை விட அதிகம் உள்ளனர் நம் தமிழ்நாட்டில். தொகுதி வாரியாக பார்த்தாலும் பெண்களே அதிகளவில் உள்ளனர். இதனை நான் கூறும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
பெண்களை மட்டும் குறிவைத்து நடத்த பட்ட கிராமசபை கூட்டம்.
குடும்ப தலைவிகளுக்கு ஊதியம்.
பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்.
பேசுபொருளே இல்லையெனில் பெண் சுதந்திரம் பேசுதல்
ஆமா ஆமா அதேதான். இப்போ புரியுதுங்களா இவங்க எம்புட்டு பெரிய மூளைக்காரங்க அப்படினு?
தமிழ்நாடு அரசியல் களமும் வரலாறும் எப்படி?
ஆரம்பத்தில் கோலோச்சிய காங்கிரஸ்
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றுக்கிணங்க தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக மாற்றத்தை விரும்புகின்றவர்களாத்தான் மக்கள் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டினை பொறுத்தவரை முன்பு அது சென்னை மாகாணமாக இருந்தது. அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலட்சத்தீவுகளும் உள்ளடங்கியதாக இருந்தன. மாகாணமாக இருந்த சென்னை இந்தியா குடியரசு ஆன பிறகு மாநிலமாக மாற்றம் அடைந்தது. பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் அப்படியே தொடர்கிறது. இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் தமிழ்நாட்டு அரசியலிலும் கோலோச்ச தவறவில்லை. சென்னை மாகாணத்தில் இரண்டு முறையும் சென்னை மாநிலத்தில் மூன்று முறையும் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது காங்கிரஸ்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
அன்றைய கால கட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாட்டளவில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய தலைவர்களாக இராஜகோபாலாச்சாரி அவர்களும் அதற்கு பின் காமராஜர் அவர்களும் இருந்தனர். இந்த இரு பெரும் தலைவர்களுக்கும் இருந்த பிரச்சனைகள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான மொழி, இட, ஜாதி ரீதியான பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் ஏற்பட தொடங்கியது. அதன் காரணமாக 1946 தேர்தல் ஆட்சி காலத்தில் மூன்று காங்கிரஸ் முதலமைச்சர்கள் வந்தனர் என்பது வரலாறு. அந்த உள்கட்சி பூசல் கலாச்சாரம் தொய்வு இல்லாமல் இன்றளவும் காங்கிரஸ் கட்சியில் தொடர்வது அக்கட்சிக்கே உண்டான சிறப்பு. பிறகு தமிழ்நாட்டின் ஆளுமையாகவும் மத்திய காங்கிரஸ் தலைமை யார் என்பதை முடிவு செய்யும் இடத்திலும் காமராஜர் இருந்தார் என்பதும் அனைத்து கட்சியினராலும் இன்றளவும் மிகவும் நல்லவர் என்று போற்றப்படுகின்ற காமராஜர் தேர்தலில் தோற்றார் என்பதும் கசப்பான உண்மை.
நீதிக்கட்சி - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்ற கழகம்
சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் மாற்றான நீதிக்கட்சி பிராமணர் எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு, இறை மறுப்பு கோட்ப்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டது. தேர்தல் அரசியலில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து மீளமுடியாத நீதிக்கட்சி 1938-ல் பகுத்தறிவு, பெண் உரிமை, இறை மறுப்பு மற்றும் சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்து கொண்டிருந்த பெரியார் ஈ.வே.ராமசாமியை நீதிக்கட்சியின் தலைவராக்கியது. 1944ல் நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்த ஈ.வே.ராமசாமி தேர்தல் அரசியலில் போட்டியிடுவதை நிறுத்தி திராவிட நாடு என்ற ஒற்றை முழக்கத்தோடு செயல்பட்டார். திராவிடர் கழகத்தின் கொள்கைகளை மாணவர்களிடத்தில் தன் எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாவும் வேறு சில தலைவர்களும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினர். நாடகங்கள், திரைப்படங்கள், மற்றும் மேடைப்பேச்சுகளின் மூலமாக கட்சியை வளர்த்த திராவிட முன்னேற்ற கழகம் காமராஜரை தோற்கடித்து 1967-ல் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அண்ணா முதல்வர் ஆனார். கருணாநிதி அமைச்சர் ஆனார். எம்.ஜி.இராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
திமுக VS அதிமுக (1977 - 2016)
திமுகவின் பொருளாளராக இருந்து வந்த எம்.ஜி.ஆர் முதலமைச்சரான கருணாநிதி இடத்தில் கணக்கு கேட்டதின் அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு உதயமான அதிமுக இன்றுவரை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று அரசியலில் ஒரு புதிய சரித்திரத்தை படைத்தார் எம்.ஜி.ஆர். மத்தியில் காங்கிரஸ் பிஜேபி என்பது போல் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவுமே பிரதான எதிரிக்கட்சிகளாக இன்று வரை உள்ளன. 1977-இல் தொடங்கி 2016 வரை மொத்தமாக 10 முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் மூன்று முறை திமுகவும் ஏழு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. நகர்ப்புறத்தில் திமுகவும் கிராமப்புறத்தில் அதிமுகவும் அதிக ஓட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர் இன்று வரை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களாக திமுகவில் கருணாநிதியும் அதிமுகவில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்தனர்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
2021 தேர்தல் எப்படி?
ஆளுமைகள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. திமுக அதிமுக இரு கட்சிகளுமே அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதால் வாக்கு வங்கியில் எந்த ஒரு சிதைவும் ஏற்படாமல் பார்த்து கொள்கின்றனர். திமுகவை காட்டிலும் அதிமுகவே அதிகமான வாக்கு வங்கியை கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் இறுதி பத்தாண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் அதிகமானதையும் பார்க்க முடிந்தது. ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என கருதப்பட்ட மூன்றாவது கட்சிகளான மதிமுகவும் தேமுதிகவும் ஏற்றம் கண்டு பின்பு அகல பாதாளத்தில் விழுந்தார்கள் என்பது ஊர் அறிந்த செய்தி. இப்பொழுது அந்த வரிசையில் அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சியும் இணைந்து கொண்டுள்ளன. பிற காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இம்முறையும் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையில்தான் நேரடி போட்டியாக இருக்கும்.
எந்த கட்சி இம்முறை வெல்லும் என்பதை பொறுத்தவரை அதனை கணிப்பது சற்றே கடினம்தான் ஊடகத்திற்கும் அனைவருக்கும். 1991-இல் ஆதரவு அலையின் காரணமாக அதிமுக ஜெயிக்கும் என்றும் 1996-இல் எதிர்ப்பு அலையின் காரணமாக அதிமுக தோற்கும் என எளிதாக கணிக்க முடிந்தது. 1996-க்கு பிறகு அது போன்ற ஒரு அலை இல்லை. இந்த தேர்தலிலும் எந்த ஒரு அலையும் இல்லை. எனவே முடிவுகளை அவ்வளவு எளிதாக கணிக்க இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கட்சிகள் இதுவரை வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையை பார்த்த பின் ஆராய்வோம்.
|
2021 Tamil Nadu Legislative Assembly Election |
மேற்குறிப்பிட்டுள்ள கணக்கில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
1. பொதுவாகவே வாக்கு வங்கி அதிமுகவிற்கு அதிகம் உள்ளதால் அந்த கட்சி வெற்றி பெறுவதற்கான சூழலே அதிகம் அமைந்துள்ளது.
2. திமுக எந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக 1989-லும், அதிமுக ஆட்சியின் மீதான கடும் எதிர்ப்பு அலையின் காரணமாக 1996-லும், பின்னர் வலுவான கூட்டணி அமைக்கும்பொழுது 2006-லும் வெற்றி பெற்றுள்ளது.
3. மாற்றத்திற்காக நிற்கும் மூன்றாவது கட்சியோ கூட்டணியோ வாக்குகளை பிரிக்க முடிகிறதே தவிர தொகுதிகளில் வெற்றி பெற முடிவதில்லை என்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. மேலே சுட்டியும் காட்டப்பட்டுள்ளது.
4. அலை இருக்கும் பட்சத்தில் தோற்கும் கட்சி இரட்டை இலக்கத்தை கூட தொட முடிவதில்லை என்பதும் குறியிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆக, இந்த காரணிகளை வைத்து 2021-ஐ நாம் கணித்தால்,
--> அலை ஏதும் இல்லாத காரணத்தால் எந்த கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ மிகுதியாக இல்லை.
--> கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாதது இரு கட்சிக்கும் இழப்பு என்றாலும் அதிமுகவுக்கு கூடுதல் இழப்பு.
--> அதிமுகவில் ஏற்பட்ட பிளவினை எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓரளவு சரி செய்து விட்டாலும் மக்கள் ஆதரவினை எந்த அளவுக்கு பெறப்போகிறார் என்பதை பொறுத்ததே வெற்றியின் வீச்சு இருக்கும்.
--> வலுவான கூட்டணி அமைப்பதை பொறுத்த வரையில் அதிமுகவை காட்டிலும் சற்றே வலுவாக அமைந்திருக்கிறது திமுக கூட்டணி.
--> மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சிகள் முன்பை விட அதிக வாக்குகள் வாங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வாறு பிரிக்கப்படும் வாக்குகள் திமுகவிற்கோ சாதகமாக அமைய போகிறதா அல்லது அதிமுகவிற்கோ சாதகமாக அமையப்போகிறதா என்பதில்தான் அனைவருடைய சந்தேகமும் ஆர்வமும்.
ஆக எந்த வகையில் பார்த்தாலும் இந்த கட்சிதான் வெற்றி பெரும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலையில்தான் சென்று கொண்டுள்ளது 2021 தேர்தல். தொகுதியில் கூட்டணி செல்வாக்கு, வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, மூன்றாம் அணி பிரிக்கும் ஓட்டுக்கள் இவற்றின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட இருக்கிறது இந்த 2021 தேர்தலில்.
ஆக இந்த முறை,
இழுபறி இழுபறி இழுபறி
ஐந்து முனை போட்டி
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி,மக்கள் நீதி மைய கூட்டணி, கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக அமைகிறது 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.
|
2021 Tamil Nadu Legislative Assembly Election |
2021 தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது என செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் உள்ளபடியே போட்டியை நான் பின்வருமாறு வகைப்படுத்த விரும்புகிறேன்.
யார் அதிகமான வாக்குகளை பெற போகின்றார்கள் என்பதன் அடிப்படையில் அமமுக, மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மறைமுகமான ஒரு போட்டியும்,
வாக்குகள் பிரிவதால் நமக்குத்தான் சேதாரம் ஆகிவிடுமோ என்ற குழப்பத்தில் இருக்கும் திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே நேரடியான ஒரு கடும் போட்டியும்,
இருக்க போகின்றது என்பதுதான் எதார்த்தமான கள நிலவரம்.
|
2021 Tamil Nadu Legislative Assembly Election |
திமுக கூட்டணி
அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் நான் முன்பே சொன்னது போல் கூட்டணி பலம் முக்கியம் என்பதை நன்கு உணர்ந்த திமுக ஒவ்வொரு முறையும் கவனத்துடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டுள்ளது. இந்த முறையும் அது நடந்துள்ளது. 10 வருட அதிமுக ஆட்சியை எப்படியேனும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் கூடுமானவரை பெரும்பாலான கட்சிகளை தன் கூட்டணிக்குள் சாமர்த்தியமாக கொண்டு வந்துள்ளது திமுக. அதே சமயம் முந்தைய தேர்தல்களை போல் அல்லாமல் மிகவும் குறைவான தொகுதிகளையே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு யாருடைய உதவியையும் நாடக்கூடாது என்ற யோசனையினாலும் எக்காரணம் கொண்டும் ஆட்சி அமையும் பட்சத்தில் அது கவிழ்ந்து விடக்கூடாது என்பதாலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே களம் காண்கிறது. முரண்டு பிடித்த சில கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகளை தனது சின்னமான உதயசூரியனில் போட்டியிட வைத்துள்ளது பெரிய கட்சிகளுக்கே கைவந்த கலை. கூட்டணி கட்சிகளும் இந்த முறை கண்டிப்பாக திமுக ஆட்சி அமைந்து விடும் என்ற நம்பிக்கையில் குறைவான தொகுதிகளுக்கு உடன்பட்டிருக்கின்றனர்.
|
2021 Tamil Nadu Legislative Assembly Election |
அதிமுக கூட்டணி
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அடுத்த தலைமை யார் என்று ஜெயலலிதாவால் சுட்டி காட்டப்படாத நிலையில் உச்சகட்ட குழப்பங்களும் கட்சிக்குள் பிளவும் ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, தினகரன், சசிகலா தலைமையிலான அமமுக, முன்னாள் முதல்வர் பன்னிர்செல்வம் தலைமையில் தனி அணி என பிரிந்தது. பின்னர் பன்னிர்செல்வத்தை அணியில் இணைத்து ஆட்சியை தொடர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் கலைந்துவிடும் என்று சூளுரைத்துகொண்டே இருந்தார் ஸ்டாலின். ஆனால் அவற்றை எல்லாம் தவுடுபொடியாக்கிய எடப்பாடியார் தன்னை அரசியலில் நன்றாக நிலைநிறுத்திக்கொண்டு இன்றளவும் ஆட்சியை தொடர்வதுடன் 2021-க்கான தேர்தல் கூட்டணியையும் திறம்பட அமைத்துள்ளார். அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த பாஜக, பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு அவர்கள் வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப முறையே 20, 23 மற்றும் 6 தொகுதிகள் ஒதுக்கியதோடு மட்டும் அல்லாமல் போன தேர்தலின் வாங்கிய வாக்கு சதவிகிதத்தை கணக்கில் கொள்ளாமல் அதிக தொகுதிகள் வேண்டும் என்று முரண்டு பிடித்த தேமுதிகவை கழற்றியும் விட்டு திமுகவை விட அதிகமான தொகுதிகளில் நிற்கின்றது அதிமுக. சிறு கட்சிகளும், தமிழ் மாநில காங்கிரசும் அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டி இடுகின்றன.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
மக்கள் நீதி மய்யம் கூட்டணி
மூன்று வருடங்களுக்கு முன்னால் மாற்றத்திற்கான கட்சியாக நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் போன நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டது. அப்பொழுது நான் கணித்த படியே படித்த மேல்தட்டு மக்களின் வாக்குகளை பெற்று, குறிப்பாக சென்னை கோவை போன்ற பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று மொத்தமாக 4 சதவிகித வாக்குகளை பெற்றது. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று சொல்லிவந்த மக்கள் நீதி மையம் அதற்கான கதவினை திறந்து வைத்து கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்தது. போன தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக யாரும் கமலுடன் கூட்டணி அமைக்க முன்வராமல் ஜெயிக்கும் குதிரைக்கு பணத்தை கட்டுவதை போல திமுக அதிமுக கூட்டணியிலேயே சேர்ந்து கொண்டனர். தொகுதி இழுபறி காரணமாக மனமுடைந்த காங்கிரஸ் ஆவது நம்முடன் இணைந்து விடுவர் என பெரிதும் எதிர்பார்த்த கமல் மனமுடையும் விதமாக குறைவான தொகுதிகளை பெற்று கொண்டு திமுகவிடம் தஞ்சம் அடைந்தது காங்கிரஸ். இறுதியில் கூட்டணிக்கு வந்த சரத்குமார் கட்சிக்கும், பாரிவேந்தர் கட்சிக்கும் வேறு வழியே இல்லாமல் தலா 40 தொகுதிகளை கொடுத்து எதிர்பார்ப்பில்லாத உப்புச்சப்பில்லாத கூட்டணியை அமைத்துள்ளது மக்கள் நீதி மையம். ஒரு கட்சியாக மக்கள் நீதி மையத்திற்கு செல்வாக்கு அதிகரித்து கொண்டிருந்தாலும் கூட்டணிக்கு செல்வாக்கு, பலம் இல்லை என்பதுதான் கள நிலவரம்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
அமமுக கூட்டணி
அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து சசிகலாவை பின்புலத்தில் வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட தினகரனின் அமமுக நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததோடு மட்டும் அல்லாமல் டெபாசிட்டும் இழக்க செய்தது தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. சிறைக்கு சென்று திரும்பிய சசிகலாவின் வருகை அமமுகவை வலுப்படுத்தும் என எண்ணியிருந்த தினகரனுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அரசியலில் இருந்து விலகி விட்டார் சசிகலா. துவண்டு விடாத தினகரன் இனிமேதான் உண்மையான போட்டி ஆரம்பம் என கூறிக்கொண்டு கூட்டணியையும் அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். அதிமுகவால் கைவிடப்பட்ட தேமுதிகாவிற்கு 60 தொகுதிகளை ஒதுக்கி அரவணைத்துக்கொண்ட தினகரன் தெலுங்கானா இஸ்லாம் கட்சியான ஒவைசிக்கு தொகுதிகளை ஒதுக்கியதுடன் சிறு சிறு கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுத்து கொள்ள தவறவில்லை.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
நாம் தமிழர் கட்சி
தமிழ் தேசிய கோட்பாடோடு தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்ற முழக்கத்தோடு வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு முறையும் தனித்து களமாடுகிறது நாம் தமிழர் கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை அள்ளி மற்றுமொரு மாற்றத்திற்கான சக்தியாக குறிப்பாக அடித்தட்டு மக்களிடத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் கட்சியான நாம் தமிழர் இம்முறையும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்கிறது. கூட்டணி அமைப்பதை பற்றி பெரிதும் கவலைபடாத நாம் தமிழர் இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஆட்சி மலர்ந்தே தீரும் என்று உறுதியாக நம்புவதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இத்தேர்தலில் கடும் சவால் அளிக்க இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
போட்டியில் வேறு யார் ?
234 தொகுதிகளிலும் போட்டியிடுபர்களை வகைப்படுத்தி ஐந்து முனை போட்டி என்று சொன்னாலும் கூட குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் 234-லும் வழக்கம் போல் போட்டியிட்டு வழக்கமாக வாங்கும் வாக்குகளை வாங்க இருக்கிறது. ஜாதிய அடிப்படையிலான புதிய தமிழகம், பனங்காட்டுப்படை போட்டியிடுகிறது. புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் சிறு கூட்டணி அமைத்து 36 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த அனைத்து கட்சிகளுமே அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
கொள்கை கூட்டணிகளா? சந்தர்ப்பவாத கூட்டணிகளா?
கொள்கைகளை முன்னிறுத்தி அதற்காக மட்டுமே உழைக்கும் கட்சிகள் அவ்வளவு எளிதாக தனித்து வெற்றிக் கனியை ருசித்து விட முடியாது. கண்டிப்பாக அதிக காலம் எடுக்கும். அவ்வளவு காலம் காத்திருக்க முடியாத கட்சிகள் வெற்றியை மட்டுமே பிரதானமாக கொண்டு வெற்றி பெற சாத்தியம் உள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. ஆக அமைவது எல்லாமே சந்தர்ப்பவாத அல்லது தேர்தல் நேர கூட்டணிதான் என்பதில் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
எதன் அடிப்படையில் கூட்டணி ?
இதனை பற்றி பேசுவதற்கு முன் வாக்குகளை பெற பல்வேறு கட்சிகளால் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். எதனை சொல்லி அல்லது எதனை மையப்படுத்தி வாக்குகளை பெற முடியும் என நம்புகின்றனர் இந்த அரசியல் கட்சிகள் ? இதோ...........
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
மேலே நான் குறிப்பிட்டுள்ளவைகளில் வெளிப்படையாக செய்யும் செயல்களை அனைத்து கட்சிகளுமே செய்கின்றனர். செய்யவும் முடிகிறது. ஆனால் மறைமுகமாக செய்யும் செயல்களை பணபலத்தை கொண்டுள்ள பெரிய கட்சிகளால் மட்டுமே செய்ய முடிகிறது. இன்னும் சொல்ல போனால் வெற்றியே இந்த மறைமுக செயல்களில்தான் அடங்கியுள்ளது என திண்ணமாக நம்புகின்றனர். அப்படி பார்க்கையில் நான் இறுதியாக குறிப்பிட்டுள்ள "மதம், ஜாதி பார்த்து வாக்களிப்பவர்களை குறிவைப்பது" என்பது கூட்டணி அமைப்பதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரைவரையில் கூட்டணி எதன் அடிப்படையில் அமைத்து இருப்பார்கள் என் கணிப்பாக இங்கு தர விரும்புகிறேன்.
காங்கிரசுக்கு - ஆட்சியில் இல்லாத இவர்களை கூட்டணியில் வைத்து கொள்ள விருப்பம் இல்லையென்றாலும் ஒவ்வொரு தொகுதியிலும் சிறிதளவு வாக்குகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டணி.
மதிமுக - இவரையும் கூட்டணியில் வைக்க விருப்பம் இல்லை என்றாலும் கூடவே இருக்கிறார் என்பதற்காக கூட்டணியில் வைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளனர். விரைவில் மதிமுக வை திமுகவுடன் இணைக்க திட்டம். ஓரிரு ஆண்டுகளில் அது நடக்கவும் அதிக வாய்ப்பு.
கம்யூனிஸ்ட் - எப்பொழுதும் இருக்கும் தொழிலாளர்களுடைய வாக்குகளுக்காக கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி. இதைத்தாண்டி ஒன்றும் இல்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பட்டியலின மக்களின் வாக்குகளை குறிவைத்து இவர்களுடன் கூட்டணி.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- கொங்கு நாட்டில் வலிமையாக இருக்கும் அதிமுகவை எதிர்க்க கொங்கு வெள்ளாளர் கவுண்டர் ஜாதியை குறிவைத்து இவர்களுடன் கூட்டணி.
இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி - இவை இரண்டுமே சிறுபான்மையினரை குறிவைத்து வைக்கப்பட்ட கூட்டணி.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி - பாமகவை அதன் பகுதிகளில் எதிர்கொள்ள வன்னியரை குறிவைத்து இவருடன் கூட்டணி.
அதிமுகவை பொறுத்தவரை எதற்காக கூட்டணி என்றால்,
பாஜக - மத்திய ஆட்சியில் இருப்பவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இருக்க போகின்றவர்கள் எதற்கு வம்பு என்பதால் கூட்டணி. தற்போதைய ஆட்சி கவிழாமல் காப்பாற்றியதற்கு நன்றி கடனாக கூட இருக்கலாம்.
பாமக - வன்னிய வாக்குகளை அள்ளுவதற்காக என்பதால் கூட்டணி.
தமாகா - கூடவே இருக்கிறார்கள். வாக்குகள் சில தொகுதிகளில் அதிகரிக்கும் என்பதால் கூட்டணி.
இது தவிர இரு கட்சி கூட்டணியில் உள்ள மற்றும் ஆதரவு தரும் அனைத்து சிறு கட்சிகளும் ஏதாவது ஒரு ஜாதியுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதுதான் தகவல். அதை சொல்ல ஆரம்பித்தால் இப்பதிவில் முடியாது என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
ஆக கூட்டணி எதன் அடிப்படையில் அமைகிறது என்று சொன்னால் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகம் வாழும் சமூகத்தினரை குறி வைத்துதான்.
மாற்றம் சாத்தியமா ?
எதிர்க்கட்சி ஆளும்கட்சி ஆவதை அரசியல் மாற்றமாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அரசியலில் ஒரு புரட்சியை , திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலே மாற்றத்திற்கான வித்தாக கருதப்படுகிறது. பொதுவாக, அரசியலில் புதிதாக முளைக்கும் கட்சிகளே மாற்றத்தை ஏற்படுத்திடும் என நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையே ஓட்டாக மாறுகிறது.
இது போன்றதொரு மாற்றத்தினை மக்கள் உண்மையிலேயே விரும்புகிறார்களா ஏற்றுக்கொள்கிறார்களா என்றால் "ஆம்" என்பதுதான் பதிலாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றத்திற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என பார்க்கின்றார்கள். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில் மட்டுமே மோசமான கட்சிகளில் எது ஓரளவுக்கு பரவாயில்லை என்பதை பார்த்து ஓட்டளிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ( தோராயமாக 35 வயதுக்கு கீழ் ) மாற்றத்தை முன்னேற்றமாக கருதுகின்றனர். ஆக, மாற்றத்திற்கான வாய்ப்பு எப்பொழுதும் அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை பயன்படுத்துவது மாற்றத்தை நோக்குபவர்களின் பக்கமே.
உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் ,
பிரதான கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வென்ற பல சுயேட்சைகள் மாற்றத்திற்கான அறிகுறி.
புதிதாக ஆரம்பித்து டெல்லியில் ஆட்சியை பற்றியதுடன் நாடு முழுவதும் கணிசமான அளவு ஓட்டுக்கள் ஆம் ஆத்மி கட்சி மாற்றத்திற்கான அடையாளமாக திகழ்கிறது.
புதிய கட்சிகளுக்கு முதல் தேர்தலில் கிடைக்கும் 5 முதல் 10 சதவிகித வாக்குகள் கூட மாற்றத்திற்கான அறிகுறியே. ஆனால் அந்த வாக்கு வங்கியை அடுத்தடுத்த தேர்தல்களில் அதிகப்படுத்தி ஆட்சியை பிடிப்பது கட்சிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.
இத்தேர்தலில் கூட, கல்வி மருத்துவம் மட்டுமே இலவசம். விவசாயம் அரசுப்பணி என சொல்லி 234-இல் பாதிக்கு பாதி பெண் வேட்ப்பாளர்களை நிறுத்தியுள்ள நாம் தமிழர் கட்சி மற்றும் யாரும் செய்ய துணியாத ஒரு செயலாக வேட்பாளர் படிவத்தில் ஜாதி என்ற சொல்லையே நீக்கி படித்த நேர்மையாளர்களை வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் மக்கள் நீதி மையம் இவர்கள் எல்லாரும் கண்டிப்பாக மாற்றத்திற்கான வித்தாகத்தான் இருக்கின்றார்கள்.
ஆக மாற்றம் சாத்தியம் மக்கள் சிந்தித்தால் .
கருத்துக்கணிப்புதான் முடிவா ?
கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்குமா என்று கேட்டால் அதை கணிக்க முடியாது கருத்து மட்டுமே சொல்ல முடியும்.
கருத்து கணிப்புக்கென்று ஒரு வரையறை உள்ளது. அதனை பின்பற்றி பல்வேறு நிறுவனங்களால் கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு பின்னாலும் அரசியல் இல்லாமல் இல்லை. பொதுவாக மக்கள் எந்த கட்சி வெற்றி பெரும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கே வாக்களிக்கும் தன்மை கொண்டவர்கள். அதனை மனதில் கொண்டு அரசியல் பின்புலத்தை கொண்டுள்ள சில நிறுவனங்களும் கருத்து கணிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியே வெற்றி பெரும் என்பது கணிப்பாக உள்ளது. இழுபறியாக இருப்பதால் அதிமுகவுக்கு சாதகமாகவும் போய் முடியலாம். விடை மே 2 அன்றுதான்.
என் தனிப்பட்ட கணிப்பாக எனது கணக்கை நான் கீழ்கண்டவாறு தர விரும்புகிறேன்.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
நோட்டா(NOTA)-க்கு போடலாமா ?
எங்கள் வீட்டில் அம்மா உட்பட வயதானவர்களுக்கு கூட தெரியும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளது நோட்டா. நாளுக்கு நாள் நோட்டா-க்கு விழும் வாக்குகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படித்த இளைஞர்கள் கூட நோட்டாவின் பின்னர்தான் செல்கின்றனர் என்பது நிலைமை. இது ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
நோட்டா -க்கு வாக்களிக்கும் முன்னர் இதனால் குறுகிய கால பலன் ஏதேனும் உள்ளதா இல்லை எதிர்காலத்தில் ஏதேனும் நலன் பயக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை. நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்து எடுத்துதானே ஆக வேண்டும். எனவே நீங்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றாலும் கூட ஏதேனும் ஒரு சுயேட்சைக்கு வாக்களிக்கலாம். அதை விடுத்து நோட்டா பிரபலம் அடைந்திருக்கிறது என்பதற்காக அதற்கு வாக்களித்து தயவுசெய்து உங்கள் வாக்கை வீணடித்து விடாதீர்கள்.
கட்சிகளின் பலமும் பலவீனமும்
திமுக
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :
1. பத்தாண்டு கால ஆளும் அதிமுகவின் மீதான சலிப்பு.
2. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தால் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் தேர்தல் பரப்புரை மற்றும் செயல்பாடுகள்.
3. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான் என இறுதி செய்யப்பட்டு கட்சி செயல்படுவது.
4. பாரம்பரியமான வாக்குவங்கி. குறிப்பாக நகர பகுதிகளில், சென்னையில். 5. தொகுதிகளுக்கு ஏற்ப வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது.
6. அதிருப்தியில் உள்ள அழகிரி யாருக்கும் ஆதரவோ (அல்லது) தேர்தலில் தனியாக போட்டியிடவோ செய்யாதது.
பலவீனம் :
1. திமுக கட்சியின் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு மற்றும் மின் வெட்டுகளை மக்களிடத்தில் அதிமுக நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது.
2. வாரிசு அரசியல். இத்தேர்தலிலும் கிட்டத்தட்ட 15 முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நிற்கின்றனர்.
3. குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என உறுதியளித்த ஸ்டாலின் இரண்டே வருடத்தில் தன் மகனை இளைஞர் அணி தலைவராக்கி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டும் கொடுத்து இருப்பது.
4. ஆட்சிக்கு எதிராக விழும் வாக்குகளை முழுவதுமாக பெறுவதற்கு முட்டுக்கட்டையாக மூன்றாம் அணிகள் இருப்பது. 5. ஸ்டாலினின் தவறான வார்த்தை பிரயோகம் காட்டுத்தீ போல சமூக வலைத்தளங்களில் பரவுதல்.
காங்கிரஸ்
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :
1. ராகுல் காந்தியின் சமீபத்திய தமிழக வருகை.
2. பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கே உள்ள வாக்கு வங்கி.
பலவீனம் :
1. காங்கிரஸ்க்கு திமுகவிடம் போதிய வரவேற்பும் ஆதரவும் இல்லாதது. 2. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நிலவும் உட்கட்சி பூசல். இந்த முறை சற்று அதிகமாகவே உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி ( இடதுசாரிகள் )
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :
1. தொழிலாளர்கள் வாக்கு வங்கி.
2. வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை பெற்றுள்ளது.
பலவீனம் :
1. வாக்கு வங்கியை படிப்படியாக இழந்து கொண்டிருப்பது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
பலம் :
1. வைகோவும் அவரை இன்னமும் பின்தொடரும் ஆதரவாளர்களும்.
2. உதயசூரியனில் போட்டியிடுவது.
பலவீனம் :
1. சரிந்து வரும் வாக்கு வங்கி.
2. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் உடல்நிலை நலிவுற்றிருக்கும் வைகோ.
அதிமுக
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :
1. ஜெயலலிதா இறந்த பொழுது இருந்த அதிருப்தியை குறைத்து ஆட்சியை நிலை நிறுத்தி இருப்பது. 2. சாமர்த்தியமாக செயல்படுவது. யாரையும் கட்சியை விட்டு விலகாமல் பார்த்து கொண்டது.
3. முடிந்தவரை திட்டங்களை நிறைவேற்றி எடப்பாடி அவர்கள் பரவாயில்லை என மக்களை நினைக்க வைத்து இருப்பது.
4. பாமகவுடன் கூட்டணி அமைத்தது.
5. பாரம்பரிய வாக்கு வங்கி. குறிப்பாக கிராமப்பகுதிகளில் மற்றும் கொங்கு மண்டலத்தில்.
6. அரசியலில் இருந்து விலகல் என்ற சசிகலாவின் முடிவு.
7. கவர்ச்சிகரமான தேர்தல் அறிவிப்பு
பலவீனம் :
1. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி.
2. கூட்டணி கட்சியான மத்திய பாஜக மீதான வெறுப்பு.
3. மீண்டும் போட்டியிடும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான அதிருப்தி.
4. அதிமுக வாக்குகளை பிரிக்கும் தினகரனின் அமமுக.
5. எடப்பாடி , பன்னீர் செல்வம் என இரு தலைமை.
6. வாக்குகளை பிரிக்கும் மூன்றாவது அணிகள்
பாரதிய ஜனதா கட்சி |
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் : 1. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் பெருகி வரும் வாக்கு வங்கி.
2. இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் செயல்கள்.
3. இந்து அமைப்புகளிடம் கிடைக்கும் ஆதரவு.
4. சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டிருப்பது.
5. வேல் யாத்திரை மூலம் அனைத்து கட்சியினரையும் வேல் தூக்க வைத்தது.
பலவீனம் :
1. பாஜக மீதான வெறுப்பு.
2. அதிமுகவில் அதிகாரம் செலுத்துவதாக மக்கள் நினைப்பது.
3. கட்சியை திறம்பட முன்னெடுத்து செல்லமுடியாத மாநிலத்தலைமை.
பாட்டாளி மக்கள் கட்சி
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :
1. வன்னிய சமுதாய ஓட்டுக்கள்.
2. தற்பொழுது கிடைத்து இருக்கும் தற்காலிகமான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு.
பலவீனம்:
1. அதிமுகவை விமர்சித்துவிட்டு தற்பொழுது கூட்டணி அமைத்துள்ளது.
2. வன்னியர் அல்லாத வாக்குகளை இழப்பது
தமிழ் மாநில காங்கிரஸ்
பலம் :
1. குறிப்பிட்ட தொகுதியில் இருக்கும் ஆதரவு.
2. இரட்டை இலையில் போட்டி இடுவது.
பலவீனம் :
பிரச்சாரத்திலும் கட்சியை மேலும் வலுப்படுத்துவதிலும் சோபிக்காதது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் |
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம்:1. அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்வது
2. அதிமுக அதிருப்தியாளர்களை தன் வசம் இழுப்பது.
3. புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகாவினால் கிடைக்கும் வாக்குகள்.
4. சிறுபான்மையினர் ஓட்டு.
பலவீனம் :1. ஆர் கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தமிழ்நாட்டிற்கே வெளிப்பட்டது.
2. சசிகலா விலகல்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம்:1. விஜயகாந்த் அவர்களுக்கான ரசிகர்கள் ஓட்டு
பலவீனம் :1. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து சரிந்து வரும் வாக்கு வங்கி (10 லிருந்து 2 சதவிகிதம் ஆக)2. அனைத்து கட்சிகளுடனும் தேர்தல் பேரம் பேசி நன்மதிப்பை இழந்தது.
3. கட்சிக்குள் குடும்பத்தினரான பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரனின் தேவை இல்லாத பேச்சுகள்.
நாம் தமிழர் கட்சி
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம் :1. தமிழ் என்ற ஒரு புள்ளியில் மக்களை ஒன்றிணைக்க முயல்வது.
2. சீமானின் எழுச்சிமிகு பிரச்சாரம்.
3. சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவு.
4. அடித்தட்டு மக்கள் வாக்குகளை பெறுவது.
5. அதிகரித்து வரும் வாக்கு வங்கி.
6. தனித்தே தேர்தலை சந்திப்பது
பலவீனம் :
1. தெரிந்த முகங்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யாதது.
2. இரண்டாம் கட்ட தலைவர்கள் ரஜீவகாந்தி, கல்யாணசுந்தரம் உள்பட சிலர் கட்சியை விட்டு விலகியது. பலர் நீக்கப்பட்டிருப்பது.
3. சின்னத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாதது.
மக்கள் நீதி மய்யம்
|
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
பலம்:1. கமல்ஹாசன் என்ற பிரபல முகம்
2. தகுதி வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது.
3. இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு
4. சக்தி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் சமூக வலைதள பிரச்சாரம்.
5. மாற்றத்திற்கான கட்சியாக மக்கள் பார்க்க ஆரம்பித்திருப்பது.
6. பெரும் போராட்டத்திற்கு பின் டார்ச் லைட் சின்னத்தை திரும்ப பெற்றிருப்பது.
7. நகரங்களில் பெருகும் ஆதரவு. சென்னை, கோவை பகுதிகளில்.
பலவீனம் :
1. சின்னத்தை கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பது.
2. சிறு கட்சிகளுக்கு 40 தொகுதிகளை ஒதுக்கி எதிர்பார்ப்பில்லாத கூட்டணியை அமைத்து இருப்பது.
3. அமைப்பு ரீதியாக கட்சி பலப்படாமல் இருப்பது.
இதர கட்சிகளின் பலம் பலவீனம்
ஓரிரு தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டி இடும் வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்த கட்சிகளுக்கும், மிகவும் பரிச்சயமான சாதி கட்சிகளுக்கும் பலமும் பலவீனமும் அவர்கள் சாதிதான். சில கட்சிகளுக்கு அது சாதகமாகவும் சில கட்சிகளுக்கு அது பாதகமாகவும் முடிகிறது.
நம் கடமை
எது எப்படி இருப்பினும் வாக்களிப்பது நம் கடமை ஆகிறது. அவ்வாறு வாக்களிக்கும்போது சுயமாக சிந்தித்து வாக்களித்தால் அது இன்னும் சிறப்புக்குரியதாக அமையும். தகுதியானவருக்கு வாக்களித்து அதை நாம் காப்போம். |
சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல் |
இந்த பதிவினை பற்றிய தங்களது மேலான கருத்துகளை கீழ் உள்ள கமெண்ட் என்கின்ற இடத்தில பதிவிடவும் !!
நன்றி வணக்கம் !!!
Great.. Informative Article.. 👌👌👌
ReplyDeleteSuper sir
ReplyDeleteதரவுகளை திரட்டி கோர்வையாக பதிவு செய்த விதம், முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குறியது.
ReplyDeleteஉங்களது கணிப்பின் முடிவுகள் எந்த தரவுகளின் அடிப்படையில் அமைந்தது ?
ReplyDeleteசிறந்த செயல்.. மிக சிறப்பாக தரவுகளை திரட்டியுள்ளீர்கள்
ReplyDeleteதங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
ReplyDelete