Monday, April 23, 2018

108


108
மங்கி வரும் சூரியன் 
இளம் வெயில் மாலைப்பொழுது 

108
போன் மூலம் அழைப்பு பலருக்கு 
வேனில் வந்த களைப்பு சிலருக்கு 
 
108
வெள்ளை வேட்டி சட்டையுடன் ஆண்கள் 
வெட்டிப் பேச்சுடன் பெண்கள்
 
108
மாலை மலரும் வரவழைப்பு 
மலரும் மாலையும் வரவழைப்பு 

108
சுக்கு காபியும் வந்தது 
சுவைத்திட கூட்டமும் வந்தது 
 
108
முதல் பேரனுக்காக முப்பது நிமிடம் தாமதம் 
பின் இளைய பேத்திக்கு இருபது நிமிடம் 
 
108
ஆரம்பித்தன வேலைகள் 
ஸ்தம்பித்தன சாலைகள் 
 
108
சம்பிரதாயம் ஒருபுறம் 
சடங்குகள் மறுபுறம் 

108
உளறல் சத்தங்கள் எகிறின 
உள்ளூர் வாத்தியங்கள் உதவின 
 
108
விண்ணை தொட்டது வெடிச்சத்தம் 
வாலிபர்களின் ஆட்டம் உச்சம் 
 
108
புதுத்துணிகள் வரவு 
பலருக்கு செலவு 

108
தடாலடி விருந்து ஒருபக்கம் 
தடுத்தாலும் குடி மறுபக்கம் 
 
108
பங்குக்காக பங்காளி சண்டை வாடிக்கை 
மாமன் மச்சான்களுக்கு அது வேடிக்கை 
 
108
முடியும் தருவாயில் நிகழ்ச்சி 
நிகழ்ச்சியின் நாயகிக்கு புகழ்ச்சி 
 
108
கூட்டம் கலைந்தது 
வேசமும் கலைந்தது 
 
108
இறுதி கட்டம் 
இன்பத்தின் தொடக்கம் 
 
108
ஆம் ! 108 வயது பாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வுதான் இது !!

[இப்பொழுது முதலில் இருந்து படிக்கவும்]


Monday, April 9, 2018

புதிய பொருத்தம்


புதிய பொருத்தம்

கன்னம் தந்தாள் கணம் யோசித்து 
கனிவுடன் தந்தேன் காரணம் புரிந்து 
பூங்கா நோக்கும் புதிய பொருத்தம் 
அல்லவோ நாங்கள் !! 

Follow Me @ FACEBOOK !


8 மணிப் பசி


8 மணிப் பசி
6 மணி அமைதி 8 மணிக் கெங்கே ? 
அமைதிக்கு வந்தது பங்கம் 
ஆர்ப்பரிக்கிறது பசிப்போர் 
இப்போரில் இடறித் தவமிருக்க 
இவ்வுலகில் எவரும் இலர் ! 
இருண்ட விழியும் இறுகிய செவியும் 
சுற்றல் தலையும் சுருங்கிய வயிறும் 
வாடிய முகமும் வடிந்த தேகமும் 
உன் அடையாளமாகும் நேரமிது 8 
போருக்கென்ன பதில் 
என வினவுவதும் மணி  8 ! 
இரைப்பைக்கு இம்மியேனும் இட்டால் 
போரினுக்கு விடுக்கலாம் சமாதானத் தூது 
விடுவதாக இல்லை வந்துவிட்டான் மீண்டும் 
அதோ பார் அடுத்த 8 ! 
8 மணிப் பசிக்கு எவன்தான் தலைவன் 
எமனும் அடிமைதான் !

Follow Me @ FACEBOOK !


Friday, April 6, 2018

நேரத்தின் ஆளுமை


நேரத்தின் ஆளுமை

நேரத்தின் ஆளுமை கண்டு 
வியந்துதான் போனேன் ! 
100 மீட்டர் பாய்ந்த 'உசைன் போல்ட்' 
முதல் இடம் பெற 
உட்கொண்ட நொடிகள் 
9.58-ஐ நினைத்து அல்ல ! 
விடாமல் துரத்திய 'யோகன் பிளேக்' 
முதல் இடம் பறிபோக 
விழுங்கிய கூடுதல் நொடிகள் 
0.11-ஐ நினைத்து நினைத்து !

Wednesday, April 4, 2018

'பேருந்துநிலையம்' புகழ்


'பேருந்துநிலையம்' புகழ்

கடைத்தரப் பால்கூட காணாமல் 
கதறிக் கண்ணீர் பெருக்கி 
ஓடி ஆடிப் பசிராகம் பாடி 
மங்கிய பெண்மையை 
பண்பாய் பெற்றவளாம் 
நடிப்பு நாயகி 'சில்லறை'த் தாயின் 
முழுவயிறும் முழுதாக இ(ர)(ற)க்கிறது 
'பேருந்துநிலையம்' புகழ் 
பிச்சைக்காரியின் பிள்ளை ! 
'பேருந்துநிலையம்' புகழ்

 Follow Me @ FACEBOOK



Tuesday, April 3, 2018

கஞ்சிக்கு கூப்பாடுதான்

கஞ்சிக்கு கூப்பாடுதான்

கஞ்சிக்கு கூப்பாடுதான்
கடவுள் கண்டுவிட்டார் 
கண்டம் இனி இல்லை 
காசு பெற்று கணித்தான் 
பழக்கப்பட்ட கிளிக்கு பரிச்சயமானவன். 
'ஓகோ' என்றான் 
ஒருகாணி நிலத்தை உழுதுபோட்டவன் ! 
------ கடந்த திங்கள் 



கஞ்சிக்கு கூப்பாடுதான்


கஞ்சிக்கு கூப்பாடுதான்
காற்றுடன் சேர்ந்து 
கருகின காட்டுப்பயிர்கள் 
இனி கஞ்சிக்கு கூப்பாடுதான். 
மனம் வாடவில்லையே 
காரியமே கண்ணாக 
கடன் வாங்கி 
வாடிக்கைப் பயணம் 
தொடங்கி ஆயிற்று. 
பரிச்சயமானவனின் 
ஒன்று விட்ட பங்காளியின் தரிசனம் இன்று ! 
------ இன்றைய திங்கள்



Follow Me @ FACEBOOK !!




Sunday, April 1, 2018

கருத்தழகு


கருத்து கொள்தல்
கொண்ட கருத்தில் நிலை கொள்தல்
தவறெனில் திருத்தி பின் கருத்தில் மாறுதல்
இக்கருத்துகள் யாவையும் பரிமாறுதல்
மாற்றார் கருத்து புரிதல்
உடன்படின் உள்ளபடியே ஏற்றுக்கொள்தல்
தேவைப்படின் விளக்குதல்
விருப்பப்படின் விளக்கம் கூட்டுதல்
உடன்படாவிடின் பதில் கருத்தை பதிவு செய்தல்
நீட்சியாக கருத்து விவாதித்தல்
நீளும் நிலையில் கருத்து சமரசமாதல்
முடிவிலி எனில் மௌனித்திருத்தல்
---இவைகளிணைந்தே கருத்தழகுறும்

தெளிவின்மை தரும் கருத்து குழப்பம்
உணர்ச்சி மிகுதியில் கருத்து மிகையாக்கல்
வசதிக்கேற்ப கருத்து திரித்தல்
ஒருதலை பட்சமாக கருத்து திணித்தல் 
விவாதம் முற்றிய கருத்து மோதல்
அற்பத்தனமான கருத்து திருடல்
எல்லை மீறிய கருத்து சுதந்திரம்
---இவைகளற்றே கருத்து இரட்டிப்பழகுறும்


Follow Me @FACEBOOK !