100 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வரும்போது எல்லாம் புருவத்தை உயர்த்தி 'அட' அன்று ஆச்சரியத்துடன் பார்க்கும் நம் அனைவருக்கும் இப்பதிவும் ஒரு ஆச்சரியமே !
செய்திகளில் மட்டுமே அறியப்பட்டு கொண்டிருந்த இவர்களை போன்றோர்கள் நமது பகுதியில் நமது உறவினராக அதுவும் நம் ஆத்தாவாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய வியப்பினையும் கிடைக்கக்கூடிய அனுபவத்தையும் விவரிக்கிறது இப்பதிவு !
தொன்று தொட்டு இதுவரை சிறு குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்று சொன்னால் தனது பெற்றோர்களை காட்டிலும் தனது பாட்டன் பாட்டிகளிடம் ( பெற்றோரின் பெற்றோர் ) அன்பு செலுத்துவதும் கதை கேட்பதும் விளையாடுவதும்தான் ! அந்த வகையில் நானும் சிறுவயதில் அதிக நேரம் கழித்தது வயதானவர்களுடன்தான் ! மற்ற குழந்தைகள் ஏதாவது விளையாடி கொண்டிருக்க நான் மட்டும் முதியவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்க, இவனுக்குள் இவன் பாட்டன் ஆவி புகுந்திடிச்சு போல அதனாலதான் எப்பவும் பெருசுக கூடவே பேசிகிட்டு இருக்கு என எனது அம்மா மற்றவர்களிடத்தில் விளையாட்டுத் தோரணையில் பேசியது இப்பொழுது நினைவுக்கு வருகிறது ! இந்த பின்னணிதான் எனக்கு ஆத்தா முறையான , ஏறக்குறைய 110 வயதை நெருங்கி சமீபத்தில் இயற்கை எய்திய இவருக்காக ஒரு பதிவிடலாம் என தோன்றியதற்கு ஒரு ஆரம்பப்புள்ளி !
கீழ் உள்ள படத்தில் நீங்கள் காணக்கூடிய பெண்தான் இப்பதிவின் நாயகி "நெடச்சலாபாளையம் ஆத்தா" (வேறு பெயர் உள்ளதா என தெரியவில்லை. என் நினைவில் பதிந்த பெயர் இதுதான் ) ! முற்காலத்து மக்களுக்கு இம்மாதிரியான இடவாகு பெயர்கள்தானே அடையாளமாக திகழ்ந்தது . உதாரணத்திற்கு சென்னிமலைக்கவுண்டர், கூத்தம்பாளையத்தார், கருப்பணங்காட்டான் !
நெடச்சலாபாளையம் ஆத்தா |
இவர் என் தாத்தாவிற்கு மூத்த சகோதரி ! என் தாத்தாவிற்கு அவருடன் சேர்த்து உடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர் ! 12 பேரில் இருவர் பிறந்ததும் இறந்து விட 10 பேர் நெடுங்காலம் வாழ்ந்தனர் சிலர் இன்னமும் வாழ்க்கை பயணத்திற்கு வழி சொல்லி கொண்டுள்ளனர் ! 10 பேரில் ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் அடக்கம் ! நமது நெடச்சலாபாளையம் ஆத்தா பெண்களில் மூத்தவரும் 10 பேரில் இரண்டாவது பிறந்தவரும் ஆவார் !
சிறு வயதிலிருந்தே தாத்தாக்கள் ஐந்து பேரிடமும் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் இருந்தன ! ஆனால் , ஆத்தாக்கள் ஐந்து பேரும் மணமுடித்து போன பிறகு அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த உறவுமுறை இருந்ததே தவிர உறுதியாக இல்லை ! ஏதேனும் நிகழ்ச்சி என்றால் கூட ஆண்களுடைய குடும்பங்களை மட்டும் அழைக்கும் வழக்கம் இருந்ததனால் , ஆத்தாக்கள் ஐவரிடமும் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது ! அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற செவி வழி செய்தி மட்டும் அவ்வப்போது என் அம்மாவிடம் பெற்று கொள்வேன் !
இக்காரணங்களால் அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் என்னுள் இருந்து கொண்டே இருந்தது ! இந்த எனது ஆசையை ஒரு சிறுவனாக என் பெற்றோரிடம் வெளிப்படுத்திய போதெல்லாம் ஒரு நாள் சென்று பார்க்கலாம் என்று சமாதானப்படுத்தப்பட்டேனே தவிர சந்திப்பு நடைபெறவில்லை !
வருடங்கள் கடந்தன ! கல்லூரி வாழ்க்கை நிறைவுற்றது ! மீண்டும் எண்ணம் துளிர்த்தது ! வழக்கம் போல செவி வழி செய்தியை பெற அம்மாவை நாடினேன் ! அம்மா சொன்னார் ஐந்து ஆத்தாக்களில் இரண்டு பேர் இறந்து விட்டனர் மூன்று பேர் உயிருடன் உள்ளனர் ஒருவர் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை இரண்டு பேர் அருகாமையில் தான் உள்ளனர் என்று !
இந்த முறை , தலைக்கு மேல் வளர்ந்த மகனின் பேச்சை காலம் கடத்த முடியாமல் அம்மாவும் உடன் வர நெடச்சலாபாளையம் ஆத்தா வீட்டினை சென்று அடைந்தோம் ! ஆத்தா வீட்டில் இல்லாமல் இருக்கவே பக்கத்து வீட்டுக்காரரின் உதவியை நாட அவர் சொன்னது ஆத்தாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் தூண்டியது ! அவர் சொன்னார் "உங்க ஆத்தா இப்பதான் வீட்டை எல்லாம் கூட்டி விட்டுட்டு ஒரு மைல் தூரம் தள்ளி இருக்க அவ மகள் வீட்டுக்கு நடந்து போச்சு என்று ! என்னடா இது 108 வயசுல வீட்ல வேலை எல்லாம் செஞ்சுட்டு ஒரு மைல் தூரம் நடக்குதா என்று வியப்பு துளியும் குறையாமல் அவர்கள் மகள் வீட்டினை அடைந்தோம் !
வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்து காபி அருந்தியவாரே வெள்ளை நிற சேலையுடனும் கருப்பு நிற மேனியுடனும் பெரிய மூக்கு கண்ணாடியை அணிந்தவாறு தென்பட்டார் ஆத்தா ! நாங்கள் யார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஆத்தாவிடம் பேச ஆரம்பித்தோம் ! இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆத்தா நாங்கள் யார் என்று தெரிந்ததும் இன்னமும் உற்சாகமாகி பேச ஆரம்பித்தார் !
ஆத்தாவின் உற்சாகம் |
இந்த வயதிலும் அவருடைய குரலில் இருந்த தெளிவும் கம்பீரமும் என்னை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை ! அவரை பார்த்தது ஒன்றே போதும் என்ற மகிழ்ச்சியில் இருந்த நான் , சிறுவயதில் இருந்து அவர் வாழ்ந்த வாழ்கையினையும் பசுமையான நினைவுகளையும் என் அம்மாவிடத்தில் நினைவு கூற கண் இமைக்காமல் கவனித்து கொண்டேன் !
முன்பெல்லாம் பொங்கல் வந்தால் அனைவரையும் அழைத்து ஒரு பெரிய பானையில் சோறு பொங்கி போடுவேன் ! இப்பவெல்லாம் யாரையும் கூப்பிடவும் முடியறது இல்ல போய் பார்க்கவும் முடியறது இல்ல என்று சொல்லி அவர் கண் கலங்கும்போதுதான் எனக்கு புரிந்தது இந்த நல்ல அப்பழுக்கற்ற மனம்தான் இவரை நோய் நொடியில்லாமல் 108 வயதை தாண்டியும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்று !
வெகுநேரம் பேசியபிறகு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று என் அம்மா சொன்னவுடன் தன் சேலையை சரி செய்து கொண்டு அவர் உட்கார்ந்த விதம் "எனது உற்சாகத்தை குறைக்க எவராலும் முடியாது நான்தான் எனக்கு ராணி" என்று மறைமுகமாக சொல்வதை போல் இருந்தது !
ஆத்தாவுடன் நானும் அம்மாவும் |
ஆத்தாவின் வயதான 108 என்ற எண் என் இடைமாற்று நினைவகத்தில் ( Cache Memory ) இருந்து நகராமல் அங்கேயே தங்கி விடவே , நான் கவிதை எழுத முற்பட்ட போதெல்லாம் என் முன் வந்து வந்து போனது ! அதன் விளைவாக உந்தப்பட்டு "108 வயது பாட்டி" என்ற தலைப்பில் எதார்த்த நடையில் ஒரு பொதுக்கவிதையை பதினைந்து நிமிடத்திற்குள் எழுதும் சூழல் அமையப் பெற்றது மட்டுமல்லாமல், சிறப்பாகவும் வரிகள் கிடைக்கப்பெற்றது என் அதிர்ஷ்டமே !
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இந்த பழமொழிக்கு ஏற்பவே அமைந்தது நெடச்சலாபாளையம் ஆத்தாவின் தமக்கையை சந்தித்த நிகழ்வும் ! இச்சிப்பட்டி ஆத்தா என்ற பெயரால் நினைவு கூறப்படும் இவர் நெடச்சலாபாளையம் ஆத்தாவைப் போன்றே உருவ அமைப்புடனும் சுறுசுறுப்புடனும் ஒத்த குணத்துடனும் இருந்தார் !
இச்சிப்பட்டி ஆத்தா |
பார்த்துவிட்டு ஆத்தா வீட்டை விட்டு வெளியேறும்போது ஆத்தாவுக்கு எந்த துன்பமும் வரக்கூடாது என்றும் இவர்களை போன்றோரைத்தான் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் !
இந்த முதுமைகளிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பண்புகளும் பழக்கங்களும் ஏராளம் ! அவர்கள் வாழ்ந்த காலம்தான் பொற்காலமாக இருந்தது ! அக்காலத்தை திரும்ப பெற , இம்முதுமைகளின் பண்புகளையும் பழக்கங்களையும் மதித்து பின்பற்றி வாழ்வது ஒன்றே வழியாகும் ! மட்டுமல்லாமல், இதுவே நம் சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் வாழ்க்கைப்பாடமாகவும் இருக்க முடியும் !
இவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு தேவைப்படுபவையாக நான் கூற விரும்புவது ------>
உண்மையும் உழைப்பும் - மனதில் பட்டதை பேசிக்கொண்டு இறுதி மூச்சு வரை இன்பமாக உழைத்து கொண்டிருக்கும் இவர்களை எந்த நோயும் அவ்வளவு எளிதாக அண்டியதில்லை ! 30 வருடத்திற்கு மேல் வருடத்திற்கு குறைந்தது இருமுறை மருத்துவமனைக்கு செல்லும் நாம் நமது குழந்தைகளுக்கு இத்தேவையை உணர்த்திதான் ஆகவேண்டும் ! சோறு இல்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் வேலை செய்ய மாட்டேன் என்ற பழக்கம் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது ! ( வாழ்வதற்கு சோறுதான் அத்தியாவசியமே தவிர மடிக்கணினியோ , கைபேசியோ இல்லை என்பது நமக்கு தெரியாததா என்ன ?)
விருந்தோம்பல் - இக்குணம் தமிழ் மக்களின் தலையாய குணமாக கருதப்படுகிறது ! மற்றவர்களுக்கு விருந்து அளித்து மன நிறைவு அடையும் தன்மை நம் அனைவரிடத்திலும் வருதல் நலம் ! ( பக்கத்து வீட்டில் இருப்பவரே யார் என்று தெரியாத பட்சத்தில் விருந்தோம்பல் எங்கிருந்து - இன்றைய நிலை )
மதிப்பும் மரியாதையும் - பெற்றோரின் பேச்சு எதுவாயினும் மறுதலிக்காமல் மௌனத்தையே பதிலாக அளிக்கும் நம் மூதாதையர்கள் வாக்கின் மீதும் வார்த்தைகளின் மீதும் மதிப்பும் , மனிதர்களின் மீது மரியாதையும் கொண்டிருந்தனர் ! கைகாட்டியவரே கணவன் ஆனார் - கரம் பிடித்தவரே தெய்வம் ஆனார் ! ஆசிரியர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்தே பார்க்கப்பட்டார்கள் ! மாமனார் முன்பு எப்பொழுதும் உட்கார்ந்து பேச தயங்கிய அக்காலத்து பெண்களை போல் இப்பொழுது எந்த மூலையில் தேடினாலும் கிடைப்பார்களா சொல்லுங்கள் ! ( அப்படி என்றால் பெண்களுக்கு சம உரிமை இல்லையா என்று நீங்கள் கொதித்து எழுபவராக இருந்தால் , பழைய கால வரலாற்றை ஒருமுறை அறிந்து வரவும் ) !
அன்பும் அரவணைப்பும் - 10 குழந்தைகள் இருந்தாலும் பாசம் காட்ட தவறாத நம் வீரமங்கைகள் வாயில்லா பிராணிகளையும் தம் குடும்பத்தின் ஒருவராகவே பாவித்து வந்தனர் ! வளர்த்த மாடு இறந்து விட்டால் கூட மூன்று நான்கு நாட்கள் சாப்பிடாமல் இருந்ததை நானே கண்கூடாக பார்த்துள்ளேன் ! இதனையும் நாம் நம் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து ஊட்ட வேண்டும் !
இப்பதிவின் மூலமாக நாம் அனைவரும் தெரிந்து நடக்க வேண்டியது ஒன்றுதான் - மேற்கண்ட நற்பண்புகளை நம் குழந்தைகளிடத்தில் வளர்ப்பதின் மூலம் அவர்களது எதிர்காலத்தை மட்டும் அல்லாமல் சமூகத்தையும் சீராக்க முடியும் என்பதே !
இரு பொருள் பொதிந்த தலைப்பு ( முதுமை பேசும் இளமை )
இந்த தலைப்பினுக்கு என்னால் இரு வகை விளக்கங்களை கொடுக்க முடியும் !
1. இளமையை பற்றி பேசும் முதுமை - வயதான பிறகு இளமைகாலத்தைப் பற்றி பேசி பொழுதை கழிப்பதுதான் இயல்பு ! அவ்வாறான முதுமை காலம் நமக்கும் இனிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நினைவு கூர்ந்து அளவளாவதற்கு ஏற்றவாறு பசுமையான நினைவுகளாக நம் நிகழ்கால செயல்பாடுகள் அமைய வேண்டும் !
2. முதுமையை பற்றி பேசும் இளமை - நமது முன்னோர்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்வது நாம் நம்மை மரபணு அடிப்படையில் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைகிறது ! நமது வம்சத்தை பற்றிய அடிப்படை அறிவுடன் அவர்களை மதிக்கவும் அரவணைக்கவும் செய்வது சிறந்த மனிதமாகிறது !
படித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !
மேலும் தொடர்புக்கு -----> மணிமாறன் @ முகநூல் !