Sunday, April 14, 2019

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல்


வணக்கம் நண்பர்களே !

மிக நாட்களுக்கு பிறகு அரசியல் ரீதியான ஒரு பதிவு. அரசியல் சமூகம் சார்ந்தது என்பதால் அதனை பற்றிய என் பார்வையையும் உங்களிடத்தில் அவ்வப்பொழுதாவது [முக்கியமாக தேர்தல் காலத்தில்] பகிர்ந்து கொள்வது இன்றியமையாதது என்றே நான் கருதுகிறேன். ஆகவே இப்பதிவு. தேர்தல் சார்ந்து பல்வேறு தளங்களில் செய்திகளையும் கருத்துகளையும் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூட்டணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றியும் அலசப்பட்டுள்ளது. முழுமையாக படித்தபின் உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிவிடலாம்.

{ கீழே நீங்கள் காணும்  கருத்துகள் அனைத்தும் என் சொந்த கருத்து என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன் }

ஜனநாயக காவலாளி 

ஜனநாயக நாடுகளின்  உயிர்ப்புத்தன்மையை காக்கும் அரணாக இருப்பது தேர்தல். செருப்பு தைத்த  தொழிலாளியின் மகன் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் டீக்கடை வைத்திருந்தவர்கள் பிரதமர் ஆனதும் முதலமைச்சர் ஆனதும் தேர்தல் நடந்ததால் மட்டுமே சாத்தியப்பட்டது.  அத்தகைய தேர்தலில் மிகவும் முதன்மையானதாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை நடத்துவதற்கான தேதியை 10-03-2019 அன்று அறிவித்து மிகவும் துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 

எதிர்கொள்ளும் சவால்கள் என்ன ?

பொதுவாகவே அனைத்து நாடுகளிலும் தேர்தல் ஆணையம் தங்களின் மீதான மக்களின் நம்பக தன்மையை அதிகரிக்கவும் தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவதற்கும் மிகவும் சிரத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். இது போன்றதொரு நிலையில், மிக குறுகிய நிலப்பரப்பில் 130 கோடிக்கும் அதிகமான மக்களை கொண்டிருக்கும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் ஓரளவே முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டில் தேர்தலை நடத்துவது என்பது அனைத்து வகைகளிலும் அனைத்து நிலைகளிலும் மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு. 

அதுமட்டுமில்லாமல், ஒரு நாடு ஒரு மொழி என்ற அந்த வரம்புக்குள் வராத இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற இலக்கணத்தை முன்னிறுத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

29 - மாநிலங்கள் 
7 -  யூனியன் பிரதேசங்கள் 
7 - தேசிய கட்சிகள்
36 -மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள்
329 - இந்தியாவின்  பிராந்தியக் கட்சிகள்
2044 - பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள்
22 - அதிகாரப்பூர்வ மொழிகள்
234 - அடையாளம் காணக்கூடிய தாய்மொழிகள்
1635 - பகுத்து அறியக்கூடிய மொழிகள் 
3000 - சாதிகள் 
15000 - சாதி உட்பிரிவுகள் 
கணக்கிலடங்கா கலாச்சாரங்கள், பண்பாடுகள் மற்றும் வாழ்வு முறைகள். 

இவைகளை படித்த பின் தேர்தல் நடத்துவதில் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நீங்கள் யூகித்திருக்க முடியும். இந்த அமைப்பில் இருக்க கூடிய மக்கள் தேர்தலை ஒரு திருவிழா போல பாவிக்கின்றனர். பரந்து விரைவி வெவ்வேறு துருவங்களில்  நிலை கொண்டிருக்கும் இந்த மக்களையும் கட்சிகளையும் ஒரு மைய புள்ளியில் அடைக்கும் வேலையைத்தான் செய்கிறது நம் தேர்தல் ஆணையம். இதுதான் நம் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ள கூடிய மிக பெரிய சவால் ! 

அடுத்து, இந்தியாவின் பெருவாரியான மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினர். இவர்களுக்கு ஓட்டுக்கு பணம் பெறுவது தவறாக தெரிவதில்லை. மாறாக கிடைக்கும் பணத்தை வைத்து சில நாள் சௌகரியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். இதனை பயன்படுத்தி சில சுய நல கட்சிகளும் செல்வந்த வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றி விடுகின்றனர். இவ்வாறு பணம் கொடுப்பதையும், பணம் பெறுவதையும் தடுத்து நிறுத்துவது தேர்தல் ஆணையம் எதிர் கொண்டிருக்க கூடிய மாபெரும் சவால். பண பட்டுவாடாவை தடுக்க முடியாமல் சில தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பது கடந்த கால வரலாறு. தேர்தல் நடத்துவது தற்பொழுது மிகவும் சிரமமாக மாறியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தன் அதிருப்தியை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக, வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிப்பதும் ஒரு சவாலான காரியமாக அமைகிறது. தேவையான அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பேரணி மூலமாகவும் , ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் செய்து மக்களை வாக்கு சாவடிக்கு வர வைக்கும் பணிகளில் ஈடுபடுகிறது தேர்தல் ஆணையம். 

நம்பிக்கையூட்டும் VVPAT

வெகு காலமாக பின்பற்றப்பட்டு வந்த வாக்கு சீட்டு முறையை மாற்றி அமைத்தது இயந்திர வாக்குப்பதிவு முறை. இயந்திர வாக்குப்பதிவு முறைக்கும் பல எதிர்ப்புகள் வரவே குழம்பி போனது தேர்தல் ஆணையம். தற்பொழுது இதற்கான தீர்வாக VVPAT எனும் முறையை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையில் வெற்றி கண்ட VVPAT இம்முறை அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.

வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.

மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

17-வது மக்களவை பொது தேர்தல் 

பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். பதற்றம் இல்லாத மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் பதற்றம் நிறைந்த மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாவும் தேர்தல் நடைபெறும்.  ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற  கடந்த மக்களவை தேர்தல் தற்பொழுது ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது . 

ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மக்களவை தொகுதி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் அமைந்துள்ளன. இத்தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெல்வது கட்டாயம் ஆகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
இப்பதிவு போடும் நேரம் முதற் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?

8.43 கோடி புது வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்கிறார்கள் . 

அதில் 1.5 கோடி வாக்காளர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள். 

2019ஆம் ஆண்டு வரை 90 கோடி மக்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ்  VS பாஜக 

இந்தியாவில் தேசிய காட்சிகளில் மிக முதன்மையான பிரதானமான இரு கட்சிகளாக இருப்பவை காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி. ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதும் இந்த இரு கட்சிகளுக்கும்தான். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியும் 11 வருடங்களாக பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியில் இருந்துள்ளன. இம்முறையும் இந்த இரு கட்சிகளும்தான் எதிர் எதிர் திசையில் நின்று போட்டி இடுகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி" என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன.  தமிழ்நாட்டில் மட்டும் "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி" என்ற பெயரில் போட்டி இடுகிறது. 

கூட்டணிகளுக்கு பின்வருமாறு தொகுதி உடன்பாடு செய்ய பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரசு கட்சி - மகாராஷ்டிரா - 24
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - ஜம்மு-காஷ்மீர் - 3
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) - கர்நாடகா - 8
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ஜார்க்கண்ட் - 4
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) - பீகார் - 2
இராச்டிரிய ஜனதா தளம் பீகார் - 20, ஜார்க்கண்ட் -1
இராச்டிரிய லோக் சம்தா கட்சி - பீகார் - 3
இந்துஸ்தானி ஆவாஸ் மோர்ச்சா - பீகார் - 2
விகாஸ்சில் இன்சான் கட்சி - பீகார் - 2
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) பீகார் 1
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கேரளா - 2, தமிழ்நாடு - 1
கேரளா காங்கிரஸ் (M) - கேரளா - 1
புரட்சிகர சோஷலிசக் கட்சி - கேரளா - 1

பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் "தேசிய  ஜனநாயகக் கூட்டணி" என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன. 

கூட்டணிகளுக்கு பின்வருமாறு தொகுதி உடன்பாடு செய்ய பட்டுள்ளது. 

சிவ சேனா - மகாராட்டிரம் - 23
சிரோமணி அகாளி தளம் - பஞ்சாப் 10
ஜனதா தளம் - பீகார் 17
லோக் ஜன சக்தி - பீகார் 6
அஇஅதிமுக -தமிழ்நாடு  20
பாட்டாளி மக்கள் கட்சி - தமிழ்நாடு 7
தேமுதிக  - தமிழ்நாடு 4
புதிய தமிழகம் - தமிழ்நாடு 1
தமாகா தமிழ்நாடு 1
புதிய நீதிக் கட்சி தமிழ்நாடு 1
ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் ஜார்க்கண்ட் 1
போடோலாண்ட் மக்கள் முன்னணிக் கட்சி அசாம் 1
என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரி 1

இரு கட்சிகளும் அதன் தலைவர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றன. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமதர் வேட்பாளராக நேரடியாக அறிவிக்கப்பட்டு போட்டி இடுகிறார். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி முன்னின்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆனால் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
தொகுதி இழுபறி : மல்லுக்கட்டும் மாநில கட்சிகள் 

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற "வேற்றுமையில் ஒற்றுமை"யை நோக்கும் நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு  வந்தாலும் மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த முயற்சிகளையும் எடுப்பதில்லை. இதனை உணர்ந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் மாநில கட்சிகள் தங்களது மாநிலங்களில் தனித்து நின்றும் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவதையுமே முதன்மையாக திட்டமிடுகிறது ஒவ்வொரு தேர்தலிலும். இதுதான் தேசிய கட்சிகளுக்கு மிக பெரிய தலைவலியாக அமைகிறது. இதனை சற்றும் விரும்பாத காங்கிரஸ் மற்றும் பாஜக காட்சிகள் மாநிலத்தில்  வலுவாக உள்ள கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் எப்படியேனும் வரவழைத்து அவர்கள் கேட்கின்ற தொகுதிகளை கொடுக்கின்றனர். இவ்வாறு தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொழுது வெற்றி பெறுவது எளிது என்ற கணக்குடனும் வெற்றி பெரும்  பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பார்வையுடனும் "மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" என்ற முழக்கத்தை முன்வைத்து கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்துகின்றன மாநில கட்சிகள் என்பதுதான் உண்மை. ஆக, எந்த கட்சியாயினும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தாரக மந்திரம். அதற்கு ஏற்படும் சூழ்நிலையை சரியாக கணித்து சாமார்த்தியமாக காய்களை நகர்த்தும் கட்சிகளே அரசியல் களத்தில் முந்துகின்றன. ஆக, கொள்கைகள் , உரிமைகள், சுய மரியாதை இவை அனைத்தும் வெற்றிக்கு பின்னால்  வசதிக்கேற்ப ஒளிந்து கொள்ளக்கூடிய காரணிகளாக உள்ளது என்பதே நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு எதார்த்தம். 

சவால் அளிக்கும் சாதிய  கட்சிகள் 

மாநில அளவில் தங்கள் கட்சிக்கான வாக்கு வங்கியை அதிகரிக்கும் பொருட்டு மாநில சுயாட்சி பற்றி முழங்கும் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு எப்படி தலைவலியாக இருக்கிறதோ அதுபோல குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி இயங்கும் சாதிய கட்சிகள் மாநில முதன்மை கட்சிகளுக்கு தலைவலியாக அமைகிறது. 

தனியாக தேர்தலில் நின்றால் வெற்றி கிட்டாது என்ற நிலையில் மாநில பிரதான கட்சிகளும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் சாதிய செல்வாக்கு பெற்ற கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றனர். இதற்கு விலையாக கோடிக்கணக்கான பணத்தையும் சாதிய தூண்டலையும் விலையாக கொடுக்கின்றனர். 


நாகரிகம் கருதி சாதிய கட்சிகளின் பெயர்களை குறிப்பிட நான் இங்கு விரும்பவில்லை.

இடம் தழுவிய அரசியல் : வட இந்தியா vs தென் இந்தியா

அரசியல் பல்வேறு தளங்களில் செய்யப்படுகிறது மற்றும் வேறுபடுகிறது. அவற்றில் ஒன்று இடம் தழுவிய அரசியல். பொதுவாகவே , தேசிய கட்சிகள் வலுவானதாக கருதப்படுவது வட இந்தியாவில் மட்டுமே. தென் இந்தியாவில் மாநில கட்சிகளே ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய கட்சிகளின் பார்வை தென் இந்தியாவின் மீது படுவதில்லை. அரசியல் களம் மையம் கொண்டிருப்பது , அரசியல் நிகழ்வது என எல்லாமே வட இந்தியா என்பதால் இயற்கையாகவே தென் இந்தியா வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றசாட்டு எழாமல் இல்லை. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக தென் இந்திய தொகுதிகளில் நிறுத்துவதையும் வெற்றி பெரும் வேட்பாளருக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதையும் வழக்கமாக்கி கொள்ள ஆரம்பித்துள்ளன தேசிய கட்சிகள். 

ஆன்மிக அரசியல் vs மதசார்பற்ற அரசியல் 

சாதி மதம் இல்லை என்று பெயரளவில் மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர மதமும் சாதியும் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்த நிலவரம். இதனை மைய பொருளாக வைத்து இவர்கள் செய்யும் அரசியலை அவ்வளவு எளிதாக நம்மால் புரிந்து கொள்ள இயலாது. உதாரணமாக, ஆன்மிக அரசியல் என்று சொல்லி அரசியல் செய்யும் கட்சிகள் தெய்வ வழிபாட்டை நேரடியாக ஆதரித்து இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை இது அனைவருக்கும் பொதுவானது என கூறுகிறது. ஆனால் இவர்கள் இந்து மதத்திற்கான கட்சி என்றும் மற்ற மதத்தினரை இவர்கள் வஞ்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர். 

பெயரிலேயே "மதசார்பற்ற" என்ற வார்த்தையை கொண்டிருக்கும் கட்சிகள் தெய்வ வழிபாட்டை மறைமுகமாக எதிர்த்தாலும் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுகின்றனர். இஸ்லாமியர்களையும் , கிறித்தவர்களையும் முன்னிறுத்தும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு மத சார்பற்ற கூட்டணி என்று உங்களால் எப்படி கூற இயலும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பாமல் இல்லை. 

ஆக , எந்த ஒரு புரிதலும் இல்லாமல் இந்த கட்சிகள் மதங்களை வைத்து அரசியல் செய்கின்றன. ஒரு மதத்தை ஆதரிப்பதை முதன்மையானதாக கருதும் கட்சி ஒருபுறம் ஒரு மதத்தை  மட்டும் எதிர்ப்பதை கோட்பாடாக வைத்திருக்கும் கட்சி இன்னொரு புறம். இவற்றில் எதை சரி என்று சொல்வது ? 


மதங்களை பற்றிய பேச்சுகள் முன்பு இதுபோல் இருந்தது இல்லை. மதங்களை ஒட்டிய வன்முறைகள் தற்பொழுது அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் கட்சிகள்  வாக்குக்காக மதம் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதே ஆகும். இவர்கள் அதை செய்வதை விடுத்தாலே அனைத்தும் சரி ஆகும் என்பது நமது கருத்து.


மாற்றம் சாத்தியமா ?

எதிர்க்கட்சி ஆளும்கட்சி ஆவதை அரசியல் மாற்றமாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அரசியலில் ஒரு புரட்சியை , திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலே மாற்றத்திற்கான வித்தாக கருதப்படுகிறது. பொதுவாக, அரசியலில் புதிதாக முளைக்கும் கட்சிகளே மாற்றத்தை ஏற்படுத்திடும் என நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையே ஓட்டாக மாறுகிறது.

இது போன்றதொரு மாற்றத்தினை மக்கள் உண்மையிலேயே விரும்புகிறார்களா ஏற்றுக்கொள்கிறார்களா என்றால் "ஆம்" என்பதுதான் பதிலாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றத்திற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என பார்க்கின்றார்கள். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில் மட்டுமே மோசமான கட்சிகளில் எது ஓரளவுக்கு பரவாயில்லை என்பதை பார்த்து ஓட்டளிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ( தோராயமாக 35 வயதுக்கு கீழ் ) மாற்றத்தை முன்னேற்றமாக கருதுகின்றனர்.ஆக, மாற்றத்திற்கான வாய்ப்பு எப்பொழுதும் அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை பயன்படுத்துவது மாற்றத்தை நோக்குபவர்களின் பக்கமே.

உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் ,

பிரதான கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வென்ற பல சுயேட்சைகள் மாற்றத்திற்கான அறிகுறி.

புதிதாக ஆரம்பித்து டெல்லியில் ஆட்சியை பற்றியதுடன் நாடு முழுவதும் கணிசமான அளவு ஓட்டுக்கள் ஆம் ஆத்மி  கட்சி மாற்றத்திற்கான அடையாளமாக திகழ்கிறது.

புதிய கட்சிகளுக்கு முதல் தேர்தலில் கிடைக்கும் 10 முதல் 15 சதவிகித வாக்குகள் கூட மாற்றத்திற்கான அறிகுறியே. ஆனால் அந்த வாக்கு வங்கியை அடுத்தடுத்த தேர்தல்களில் அதிகப்படுத்தி ஆட்சியை பிடிப்பது கட்சிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.

ஆக மாற்றம் சாத்தியம் .

கருத்துக்கணிப்புதான் முடிவா ?

கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்குமா என்று கேட்டால் அதை கணிக்க முடியாது கருத்து மட்டுமே சொல்ல முடியும்.

கருத்து கணிப்புக்கென்று ஒரு வரையறை உள்ளது. அதனை பின்பற்றி பல்வேறு நிறுவனங்களால் கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு பின்னாலும் அரசியல் இல்லாமல் இல்லை. பொதுவாக மக்கள் எந்த கட்சி வெற்றி பெரும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கே வாக்களிக்கும் தன்மை கொண்டவர்கள். அதனை மனதில் கொண்டு அரசியல் பின்புலத்தை கொண்டுள்ள சில நிறுவனங்களும் கருத்து கணிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.


இந்த தேர்தலை பொறுத்தவரையில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் + திமுக கூட்டணியே வெற்றி பெரும் என்பது கணிப்பாக உள்ளது. 

நோட்டா(NOTA)-க்கு  போடலாமா ?

எங்கள் வீட்டில் அம்மா உட்பட வயதானவர்களுக்கு கூட தெரியும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளது நோட்டா. நாளுக்கு நாள் நோட்டா-க்கு விழும் வாக்குகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படித்த இளைஞர்கள் கூட நோட்டாவின் பின்னர்தான் செல்கின்றனர் என்பது நிலைமை. இது ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
நோட்டா -க்கு வாக்களிக்கும் முன்னர் இதனால் குறுகிய கால பலன் ஏதேனும் உள்ளதா இல்லை எதிர்காலத்தில் ஏதேனும் நலன் பயக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை. நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்து எடுத்துதானே ஆக வேண்டும். எனவே  நீங்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றாலும் கூட ஏதேனும் ஒரு சுயேட்சைக்கு வாக்களிக்கலாம். அதை விடுத்து நோட்டா பிரபலம் அடைந்திருக்கிறது என்பதற்காக அதற்கு வாக்களித்து தயவுசெய்து உங்கள் வாக்கை வீணடித்து விடாதீர்கள்.  

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 

சட்டமன்ற தேர்தல்தான் பிரதானம் என்றாலும் கூட தலைவர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத நிலையில் தங்களது செல்வாக்கு என்ன என்பதை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடாக இந்த மக்களவை தேர்தலை பயன்படுத்தவும் ஆயுத்தமாகி உள்ளன திமுகவும் அதிமுகவும்.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு  

திராவிட முன்னேற்றக் கழகம் - 20
இந்திய தேசியக் காங்கிரசு - 9
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - 2
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் - 1
இந்திய ஜனநாயகக் கட்சி - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 1

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 20
பாட்டாளி மக்கள் கட்சி - 7
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - 4

பாரதிய ஜனதா கட்சி - 5
புதிய தமிழகம் - 1 
தமிழ் மாநில காங்கிரசு - 1
புதிய நீதிக்கட்சி - 1

திமுக அதிமுக அல்லாமல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,  நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன. 

எட்டு ஆண்டுகளாக ஆட்சி கட்டிலில் இல்லாத திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி தொடங்கி நெருக்கடி கொடுப்பதால் அதிமுகவின் வெற்றியும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

பெரும்பாலான தொகுதிகளில் திமுக அதிமுக என இருமுனை போட்டிதான் என்றாலும் , சில தென் மாநில தொகுதிகளில் திமுக அதிமுக அமமுக என மும்முனை போட்டிக்கான சூழல் நிலவுகிறது.

LOK SABHA ELECTION INDIA 2019
சீமான் மற்றும் கமல் கணிசமான ஓட்டுக்களை வாங்குவர். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் வாக்குகள் இவர்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வெற்றி பெறுவதற்கு அது போதுமானதாக இருக்காது. இவர்கள் பிரிக்கும் வாக்குகள்  யாருக்கு சாதகமாக முடியும் என்பதை தெரிந்து கொள்ள மே 23 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

LOK SABHA ELECTION 2019
கட்சிகளின் பலமும் பலவீனமும் 

பாரதிய ஜனதா கட்சி
நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் : 
1. நரேந்திர மோடி தலைமையின் பால் ஈர்க்கப்பட்டிருக்கும் கூட்டம்.
2. வட இந்தியாவில் நிலை பெற்று இருக்கும் ஆதரவு. 
3. இந்துத்துவா முறையின் மேல் பற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பக்க பலம்.

பலவீனம் :
1. ஆளும்கட்சியின் மீதான அதிருப்தி 
2. அதிருப்தியை அறுவடை செய்ய அமைக்கப்பட்டிருக்கும் எதிர் கூட்டணி 

காங்கிரஸ் 
நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் :
1. ஆளும்கட்சியின் மீதான அதிருப்தி 
2. நம்பிக்கை அளிக்க கூடிய தேர்தல் அறிக்கை 

பலவீனம் :
1. 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தி இன்னும் குறையாதது. 
2.  பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திப்பது. 
3. குடும்ப அரசியல். ராகுல் காந்தி தலைவர் ஆக்கப்பட்டது. பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு.
4. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நிலவும் உட்கட்சி பூசல்.

திமுக

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் :
1. ஆளும் கட்சியின் மீதான வெறுப்பு. 
2. திட்டமிட்டு செயல்படுத்தப்படும் தேர்தல் பரப்புரை.
3. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான் என இறுதி செய்யப்பட்டு கட்சி செயல்படுவது.
4. பாரம்பரியமான வாக்குவங்கி . குறிப்பாக நகர பகுதிகளில், சென்னையில். 

பலவீனம் :
1. காங்கிரஸ் கட்சியை போல் குடும்ப அரசியல் செய்வது. 
2. ஊழல் அரசாக , அராஜக அரசாக மக்கள் மனதில் பதிந்து இருப்பது.
3. இந்து மதத்தினரை இகழும் சில அமைப்புகளை கூட்டணியில் வைத்து இருப்பது. 

அதிமுக


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 

பலம் :
1. ஜெயலலிதா இறந்த பொழுது இருந்த அதிருப்தியை குறைத்து கொண்டு வருவது.
2. பாரம்பரிய வாக்கு வங்கி.  குறிப்பாக கிராமப்பகுதிகளில் மற்றும் கொங்கு மண்டலத்தில்.
3. மெகா கூட்டணி அமைத்தது.

பலவீனம் :
1. தினகரன் பிரிவு. 
2. எடப்பாடி , பன்னீர் செல்வம் என இரு தலைமை.
3. பிரச்சாரத்தில் பின் தங்குவது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 


Lok Sabha Election - india 2019 
பலம்:
1. அதிமுக எதிர்ப்பு ஓட்டு
2. சிறுபான்மையினர் ஓட்டு. டெல்டா மாவட்டத்தில் பெருகும் ஆதரவு.
3. தகவல் தொழில் நுட்ப பிரிவின் செயல்பாடு

பலவீனம் :
1. ஆர் கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா.
2. குக்கர் சின்னம் கிடைக்காதது.
3. முக்கிய பொறுப்பாளர்கள் விலகல்.

நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் :
1. தமிழ் என்ற ஒரு புள்ளியில் மக்களை ஒன்றிணைக்க முயல்வது.
2. சீமான் பிரச்சாரம்.

பலவீனம் :
1. தெரிந்த முகங்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யாதது.
2. சின்னத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாதது.

மக்கள் நீதி மய்யம் 


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம்:
1. தகுதி வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது.
2. இளைஞர்களின் ஆதரவு
3. சக்தி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் சமூக வலைதள பிரச்சாரம்.

பலவீனம் :

1. சின்னத்தை கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பது.

கம்யூனிஸ்ட்  கட்சி ( இடதுசாரிகள் )


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் :
1. தொழிலாளர்கள் வாக்கு வங்கி.
2. வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை பெற்றுள்ளது.

பலவீனம் :
1. வாக்கு வங்கியை படிப்படியாக இழந்து கொண்டிருப்பது.

மதிமுக 
பலமும் பலவீனமும் இரண்டுமே வைகோ அவர்கள்தான். பேச்சு பலம் என்றால் மாற்றி பேசுவது பலவீனம். 

பாட்டாளி மக்கள் கட்சி


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம் :
1. வன்னிய சமுதாய ஓட்டுக்கள்.
2. அன்புமணி மீதான இளைஞர்கள் நம்பிக்கை.

பலவீனம்:
1. அதிமுக வை விமர்சித்துவிட்டு தற்பொழுது கூட்டணி அமைத்துள்ளது. 
2. பிரியும் வன்னியர் வாக்குகள். 

தேசிய முற்போக்கு திராவிட கழகம்


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
பலம்:
1. விஜயகாந்த் அவர்களுக்கான ரசிகர்கள் ஓட்டு 

பலவீனம் :
1. சரிந்து வரும் வாக்கு வங்கி 
2. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெறாதது.

இதர கட்சிகளின் பலம் பலவீனம் 

ஒரு தொகுதிகளில் போட்டி இடும் மற்ற சமுதாயத்தை சார்ந்த கட்சிகளுக்கு பலமும் பலவீனமும் அவர்கள் சாதிதான். சில கட்சிகளுக்கு அது சாதகமாகவும் சில கட்சிகளுக்கு அது பாதகமாகவும் முடிகிறது. 

ஓட்டளிப்பது  நம் உரிமை. தகுதியானவருக்கு வாக்களித்து அதை நாம் காப்போம். 


நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல் 
இந்த பதிவினை பற்றிய தங்களது மேலான கருத்துகளை கீழ் உள்ள கமெண்ட்  என்கின்ற இடத்தில பதிவிடவும் !!