Thursday, April 2, 2020

கொரோனா 2020 (COVID 19) தொடர்கிறது

வணக்கம் நண்பர்களே !

கொரோனா பாதிப்பு உலகெங்கும் அதி விரைவில் பரவி வரும் நிலையில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த நான் எழுதிய வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் அகம் மகிழ்கிறேன். 

உலக அளவில் ஒரு நூற்றாண்டுக்கு பின் வந்திருக்க கூடிய மிகப்பெரிய தாக்குதல் இது என வல்லுநர்கள் கணித்திருக்க கூடிய நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.

இந்த கொரோனா தொற்று நோயானது நான்கு நிலைகளை உள்ளடக்கியது.
முதல் இரண்டு நிலைகளில் குறைவான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மூன்றாம் நிலை, நான்காம் நிலைகளில் பாதிப்பு மிகவும் அதிகம். 

நான் இப்பதிவினை இடும் நேரம் இந்தியாவில் மூன்றாம் நிலை தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தார்மீக ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். 

சமூக  விலகல் ஒன்றே தற்போதைய தீர்வு. கடைபிடித்து கரம் கொடுங்கள் நண்பர்களே ! 

💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚

CORONA VIRUS - COVID 19
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚

தீநுண்மிகள் (VIRUS) கொண்டே
இப்பிரபஞ்சம் இயங்கியது.
இயங்குகிறது.
இனியும் இயங்கும்.

இவ்வகை நோய்த்தொற்று
கிருமி வரிசையில் 
சமீபத்தில் இணைந்து
ஊரெங்கும் உலவுகிறது
நம் காலத்து நவீன உலகின்
நானோமீட்டர் நச்சுயிரி 
கொரோனா (CORONA)

மாற்றம் முன்னேற்றம்
மனிதனுக்கு  மட்டுமா என்ன ?
இத்தீநுண்மிகளுக்கும்தான்.
உதாரணமே இக்கொரோனா.

இக்கொரோனா தாக்குதலால்
இறுதி நிலை நான்கை எட்டி
பாதிப்பின் வீரியம்
கண்டு பின் மீண்டது 
விழுந்த நொடி எழ பழக்கப்பட்ட
வலிமைமிகு வல்லரசு சீனா

கொரோனா பாதிப்பில்
எண்ணிக்கையில் முந்திய
பொருளாதார வித்தகன்
செல்வந்த அமெரிக்கா
உயிரிழப்பை தடுக்க
ஒதுக்கிய தொகை மட்டும்
₹150,000,000,000,000

முன்னணி நடிகரோ,
நாட்டின் அதிபரோ,
அரச குடும்ப இளவரசியோ,
மருத்துவரோ, மழலையோ,
மக்களோ யாராகினும்
'என்ன தொட்ட நீ கெட்ட' என
பாகுபாடு பார்க்காமல்
ஒட்டி உறவாடி உள்புகுந்து
இனப்பெருக்கம் அடைகின்றன.
பதிலுக்கு நமக்கு அது அளிக்கும்
பரிசுதான் சுவாச நோய்.

கொரோனாவின் கோர முகம்
இவ்வாறு இருக்க,

கொரோனா தொற்றுடன்
தாய்நாடு திரும்பிய மற்றும்
இந்நாடு வந்த நண்பர்களால்
முதல் நிலையை கடந்து,
இந்நண்பர்கள் வாசம் பெற்ற
அவர்தம் குடும்பத்தினரை
தன் வசப்படுத்தி
இரண்டாம் நிலையை
செவ்வனே நிறைவு செய்து,
இதோ நம்  இந்தியாவில்,
நம் தமிழ்நாட்டில், நம் ஈரோட்டில்
மூன்றாம் நிலையினை முன்னெடுக்க
மதியிழந்த மக்களை ஆயுதமாக்கி
ஆயுத்தமாகிறார் Mr.கொரோனா.

வெளிநாட்டு வாசம்
எனக்கு பட்டதே இல்லை.
எனக்கு எப்படி அய்யா
கொரோனா வரும் ?
- என குரல் உயர்த்தும்
பெருவாரியான கூட்டத்தினர் 
கொத்து கொத்தாக
கொரோனாவை குடிவைத்து பின் 
விரைவுச் செய்தியாவதே
- இம்மூன்றாம் நிலை

ஒருவேளை மூன்றாம் நிலை
வலுப்பெற்று வீறுகொண்டால்
எப்படியும் சமாளித்து விட
இந்தியா சீனாவோ அல்லது
அமெரிக்காவோ இல்லை
இதுதான் நிதர்சனம் என்ற புரிதல்
உன்னுள் உதிக்கும் பட்சத்தில்
நினைவுகொள் மனிதா
முன்னெச்சரிக்கை ஒன்று மட்டுமே
நீ கொண்டுள்ள மூலதனம்.
அதுவேதான் நீ மற்றவருக்கு அளிக்கும்
புலப்படாத தானம்.

சமூக நல்லிணக்கம் கற்ற
சமூகத்திற்கு
சமூக விலகலின் கட்டாயத்தை
உணரச்செய்வது உள்ளபடியே
கடினமாயினும் அது கடமையாகிறது
உனக்கும் எனக்கும்.

ஆகவே, அலட்சியம் அற்று
அரசின் அறிவுறுத்தல் ஏற்று
தனித்தும் விழித்தும் தவமிரு தோழா !

தடுப்போம் ! தற்காப்போம் !
மூன்றாம் நிலையை முறியடித்தால்
நான்காம் நிலைக்கு நாளை இல்லை.

                           ------------- வெ.மணிமாறன் 
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚