நண்பர்களே வணக்கம் !
நான் முதலில் வலைப்பதிவை உருவாக்க தொடங்கிய பொழுது ஆங்கில மொழியில் மட்டும்தான் எனது பதிவுகள் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். அப்பொழுதுதான் அது பெருவாரியான மக்களை சென்றடையும் என்பதுதான் எனது நிலைப்பாட்டிற்கு காரணமாக அமைந்தது. பின் என் தொழிலில் முழுநேரமாக ஈடுபட ஆரம்பித்ததால் எனது கருத்துகள் முழுவதையும் ஆங்கிலத்தில் சொல்வது அவ்வளவு எளிதாக அமையவில்லை( தாய்மொழி தமிழ் என்பதனால்). ஆதலால் இனிமேல் எனது பதிவுகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். ஒரு பகுதி அல்லது ஒரு சாரரை மட்டும் சென்று சேர வேண்டிய கருத்துகளை தமிழிலும், அனைத்து மொழி தரப்பினரையும் சென்றடைய வேண்டிய கருத்துகளை ஆங்கிலத்திலும் தரலாம் என முடிவெடுத்துள்ளேன். நான் இந்த முடிவை எடுப்பதற்கு பின்னால் "கூகிள் மொழிபெயர்ப்பு" தேர்வு முறையை எனது வலைப்பதிவில் இணைத்து உள்ளதும் ஒரு மூல கூறாக உள்ளது என்றால் அது மிகையே அல்ல.
சரி . இனி தலைப்பினுக்குள் செல்லலாம்.
நான் இந்நேரம் இப்பதிவினை எழுதி கொண்டிருக்கும் பொது தமிழ்நாட்டில் அநேகமான இடங்களில் தேர்தல் பிரச்சாரம் அதன் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் என்பது நிதர்சனம். பிரச்சாரத்தையும் தாண்டி பண விநியோகம் என்பதும் சத்தமே இல்லாமல் ஓரிரு இடங்களில் நடக்கலாம் என்பது எனது யூகம். போன தேர்தல்களில் நடந்த அளவிற்கு பண விநியோகம் 2016 சட்ட மன்ற தேர்தல்களில் இல்லை என்பதற்கு முழு முதற் காரணம் தேர்தல் ஆணையம் தான் என்பதை விருப்பு வெறுப்புகளை தாண்டி நாம் பாராட்டத்தான் வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் வேலையை சுலபம் ஆக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. காசுக்காக எனது ஓட்டை விற்க மாட்டேன் என்ற உறுதியை ஏற்பதன் மூலமாகத்தான் அது சாத்தியப்படும்.
TAMILNADU ASSEMBLY ELECTION 2016 |
2016 சட்ட மன்ற தேர்தலை பொறுத்த வரை பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
1. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2. திராவிட முன்னேற்ற கழகம்
3. தேசிய முற்போக்கு திராவிட கழகம்
4. பகுஜன் சமாஜ் கட்சி
5. காங்கிரஸ் கட்சி
6. பாரதிய ஜனதா கட்சி
7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இவைகள் மட்டும் அல்லாமல் பின்வரும் கட்சிகளும் இத்தேர்தலில் அழுத்தத்தை கொடுக்கின்றன.
--> மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
--> பாட்டாளி மக்கள் கட்சி
--> தமிழ் மாநில காங்கிரஸ்
--> நாம் தமிழர் கட்சி
--> விடுதலை சிறுத்தைகள் கட்சி
--> கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
--> புதிய தமிழகம் கட்சி
--> மனிதநேய மக்கள் கட்சி
--> சமத்துவ மக்கள் கட்சி
--> கொங்கு இளைஞர் பேரவை
இவை தவிர சில சில முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த கட்சிகளும் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளும் போட்டி இடுகின்றன.
இதுவரை
ஒவ்வொரு கட்சியை பற்றி பார்பதற்கு முன்னால் இதவரை நடந்த தேர்தல்களின் முக்கியமான அம்சங்கள்.
--> சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் , நீதி கட்சி பலமுறையும் ஆட்சி அமைத்துள்ளது.
--> சுதந்திரத்திற்கு பின், 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதில் புகழ் பெற்ற முதல் அமைச்சராக காமராஜ் விளங்கினார். இப்பொழுது வரை அனைத்து கட்சியினராலும் சிறந்த முதல் அமைச்சராக போற்ற படுபவர்.
--> பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய அண்ணா 1967 இல் ஆட்சியை பிடித்தார்.
--> அண்ணாவின் மறைவிற்கு பின் கலைஞர் கருணாநிதி அவர்கள் திமுக சார்பில் போட்டியிட்டு ஐந்து முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார்.
--> திமுக வில் முக்கிய சக்தியாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கருணாநிதி உடன் ஏற்பட்ட மோதலால் அண்ணா திமுக வை தொடங்கினார். அதன் பின் தொடர்ச்சியாக மூன்று முறை முதல் அமைச்சர் ஆனார் என்பது வரலாறு. அவரது புகழ் இன்றும் மக்கள் இடத்தில் இருப்பது தான் மாபெரும் மகத்துவம்.
--> எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவிற்கு பின் கட்சியில் பொறுப்பேற்ற ஜெயலலிதா இதுவரை மூன்று முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார்.
--> 1989 க்கு பிறகு அதிமுக மற்றும் திமுக கட்சிகள்தான் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்து உள்ளன.
--> இரு கட்சிகளுமே வலுவான கூட்டணி அமைத்துத்தான் இதுவரை வெற்றியை ருசித்துள்ளன.
--> 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 39 இல் 37 இடங்களை கைப்பற்றியது
அதிமுக
இந்த முறை அதிமுக மிகவும் துணிச்சலாக "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற முழக்கத்தை முன்வைத்து தனியாக போட்டி இடுகிறது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலையே போட்டி இடுவது சிறப்பு.
2014 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி அதிமுக விற்கு உற்சாகத்தை கொடுத்தாலும் 2015 இன் இறுதியில் சென்னையில் வந்த மழை வெள்ளம் ஒரு மிக பெரிய அதிருப்தியை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த பிறகு மந்தமாக இருந்த கட்சி அவரது அனல் பறக்கும் பிரச்சாரத்தால் சுறுசுறுப்படைந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செய்த நலத் திட்டங்களும் 2016 க்கான தேர்தல் அறிக்கையும் இம்முறை வெற்றியை தேடி தரும் என்று அதிமுக நம்புகிறது.
மற்ற கட்சிகளை காட்டிலும் ,பெண்களுக்கும் புது முகங்களுக்கும் அதிமுக வில் அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக
மிக பழமையான வரலாறு கொண்ட திமுக ஒவ்வொரு முறையும் வலுவான கூட்டணி அமைத்தே ஆட்சி அமைத்துள்ளது. இம்முறை அப்படி ஒரு கூட்டணி அமைய வில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது திமுக விற்கு மிக பெரிய பலமாக அமையா விட்டாலும் திமுக வின் வருங்கால தலைவராக போற்றப்படும் ஸ்டாலின் "நமக்கு நாமே" பயணத்தை மேற்கொண்டது பலமாக அமையும் என்பது கட்சியினரின் கணிப்பு.
திமுக வின் தீவிரமான பிரசாரமும் வலுவான வேட்பாளர்களை தொகுதியில் களம் இறக்கி இருப்பதும் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு தலைவலியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மக்கள் நலக் கூட்டணி
பல ஆண்டுகளுக்கு பிறகு ஓரளவு வலுவான மூன்றாவது அணி அமைந்து உள்ளது. இதை அமைத்ததற்கான முழு பெருமையும் வைகோ அவர்களையே சாரும். இதற்காகவே அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்ளலாம்.
இந்த கூட்டணியில் விஜயகாந்த், திருமாவளவன், வாசன் மற்றும் இடதுசாரி தோழர்களும் இணைந்து உள்ளனர். முதலில் எதிர்பார்ப்பை உருவாக்கிய இக்கூட்டணி விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக்கி பிரசாரத்தை தொடங்கியவுடன் நம்பிக்கையை இழக்க தொடங்கியது.
பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் விஜயகாந்த் தனது வழக்கமான பாணியையே பின் தொடர்வது மக்களிடத்தில் ஒரு சிறு சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கட்சியும் அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கு வேண்டுமானால் இக்கூட்டணி பயன்படலாமே தவிர ஆட்சியை பிடிப்பதற்கு நிறையவே போராட வேண்டும்.
பாஜக
தேசிய கட்சியான பாஜக கூட்டணி அமையாததால் தனித்து விடப்பட்டுள்ளது. மோடி அவர்களுடைய ஈர்ப்பும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் ஆதரவும் குறைந்தபட்சம் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற சில தொகுதிகளிலாவது வெற்றியை தேடி தரும் என நம்புகிறது பாஜக.
பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவும் புதிய வாக்காளர்களும் பாஜக விற்கு பலம் என அறியப்படுகிறது.
பாமக
"மாற்றம் முன்னேற்றம்" என்ற முழக்கத்துடனும் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் என்றும் கூறிக்கொண்டு தேர்தலில் பயணப்படுகிறது பாமக.
சரியான திட்டத்துடன் நகர்வதும், சிறந்த அறிக்கைகளும் பாமக விற்கு பலமாக நிற்கின்றன. வன்னியர் அடையாளமாக இக்கட்சி திகழ்வது ஒரு கரும்புள்ளி என்றாலும் கூட வன்னியர் வசிக்க கூடிய பகுதிகளில் அதுவே ஆதரவாக அமைகிறது. இருந்தாலும் இவை ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை.
நாம் தமிழர் கட்சி
புரட்சி கர வசனங்களை பேசியும் தமிழ் இன அரசியலை முன்னிறுத்தியும் தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் எனவும் முழங்கும் சீமான் இத்தேர்தலில் கணிசமான ஓட்டுகளை வாங்குவார்.
மாற்றத்தை விரும்பும் மக்கள், ஜாதி மத அரசியலை கடந்து தமிழ் என்ற புள்ளியில் ஒன்று இணைபவர்கள் சீமானை ஆதரிப்பார்கள்.
நோட்டவிற்கு ஓட்டளிக்க முடிவு எடுத்து உள்ளவர்களுக்கு எனது ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்று சொன்னால் நோட்டா கண்டிப்பாக நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. அதற்கு பேசாமல் சீமான் போன்றவர்களுக்கு யோசிக்காமல் வாக்கு அளிக்கலாம். அவர் தேர்தலில் நிலை பெறுவதற்கு இத்தேர்தல் ஒரு அடித்தளமாக அமையும்.
வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள்
--> கட்சிகளின் நிலையான வாக்கு வங்கி
--> முதல்வர் வேட்பாளரின் செல்வாக்கு
--> உள்ளூர் வேட்பாளரின் செயல்பாடு
--> வலுவான கூட்டணி அமைத்தல்
--> தேர்தல் அறிக்கையும் அதன் நம்பகத்தன்மையும்
--> இறுதி நேர பிரசாரம்
--> ஊடகங்களையும் சமூக வலைதலங்களையும் கையாளும் விதம்
தவிர்க்க பட வேண்டியவை
---> பண பட்டுவாடா
---> கூட்டத்தை கூடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிப்பது.
---> ஜாதியை மையபடுத்தி அரசியல் கட்சி நடத்துவது
---> பொய் வாக்குறுதிகள் தருவது
---> தேவைக்கு அதிகமாக இலவசங்கள் தருவது
---> வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது
---> கோஷ்டி பூசல்
---> நம்பக தன்மை இல்லாத கருத்து கணிப்புகள்
---> தனி நபர் விமர்சனம்
---> உயிர் இழப்புகள் ( கூட்ட நெரிசலில்)
---> கொள்கையே இல்லாத கூட்டணி
---> அதிகார குவியல்
எது எவ்வாறாயினும் மே 19 அன்று முடிவு தெரிந்து விடும்.
ஆளும் கட்சியா ?
ஆண்ட கட்சியா ? இல்லை
ஆட்சிக்கு புதிய கட்சியா என்று
இதனை தீர்மானிக்க மே 16 அன்று நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.
May 16, 2016 - Election Date |
இறுதியாக ஒன்று கூறி முடிக்கிறேன்
"ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை"
Connect Me @ FACEBOOK !
வாக்களிப்பது நமது கடமை....சிந்தித்து வாக்களிப்பாேம்...
ReplyDeleteவாக்களிப்பது நமது கடமை....சிந்தித்து வாக்களிப்பாேம்...
ReplyDelete