Monday, October 10, 2016

நான் பிறந்த ஊரும் சார்ந்த வாழ்வும் - பகுதி 1

நண்பர்களே வணக்கம் ! 

மீண்டும் தமிழில் ஒரு பதிவிட விருப்பத்துடன் இருக்கவே என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது இந்த தலைப்பு ! நான் இங்கு கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் என் நினைவில் நின்றதும் என் செவிக்கு எட்டியதும் கலந்த கலவையே ஆகும் ! 

நான் பிறந்த ஊர்

ஒவ்வொருவருமே அவர்கள் சார்ந்துள்ளது எதுவாகினும் அதில் அதீத உரிமை எடுத்துக்கொள்வது வழக்கம். புரிந்து கொள்ள கூடியதுதான். என் சொந்த வீடு , என் சொந்த ஊரு என்று மார் தட்டி கொள்ளும், கணியன் பூங்குன்றனார் வழி வராத அந்த கும்பலை சேர்ந்தவன்தான் நானும் ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல). வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டில்  இல்லையென்றால் வளர்ந்த நகருக்கு நடுவில் நான்கு சென்ட் இடம் வாங்கி குடிபெயரலாம் இல்லையெனில் வேலைக்காகவாது அங்கும் இங்கும் ஒதுங்கலாம் என்றளவில் என் வயது சார்ந்தவர்கள்  மன ஓட்டம் கிளை போல் பரவ நான் மட்டும் ஊர்த்தவளையாக ஊரை விட்டு போக மனமில்லாமல் இங்கேயே நாட்களை கடத்துவதற்க்கான காரணம் உண்மையில் எனக்கு பிடிபட இல்லை.இதனை மடமைத்தனமான விடயமாக மற்றவர்கள் கருதுவதற்கு அத்துனை வாய்ப்புகளும் உண்டு. சரி.இப்பொழுது   உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த தலைப்பில் நான் இங்கு வந்த காரணம்.

கூத்தம்பாளையம், ஈங்கூர், பெருந்துறை, ஈரோடு 

09-10-2016 அன்று  கிளிக்கிய தற்போதைய கூத்தம்பாளையம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய வீடு அம்பு குறியிட்டு காட்டப்பட்டு உள்ளது. 

Koothampalayam, Perundurai, Erode
செயற்கைக்கோள் காட்சி தரும் கூத்தம்பாளையத்தினை கீழ்வரும் படங்களில் காணலாம் ! 

Satellite View - Koothampalayam Erode


Satellite View - Koothampalayam, Erode
இது தொடர்பான வீடியோ பார்க்க கிளிக் செய்யவும் !                                         https://www.youtube.com/watch?v=8Gx3ubKNQRA 

கூத்தம்பாளையம் - என் தாத்தாவின் இளமை பருவ காலத்தில் நூறு அல்லது நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விவசாயம் செய்யப்பட்ட , இப்பொழுது முப்பதுக்கும் குறைவான குடும்பங்களுடன் தனது விவசாய நிலத்தை இழந்து நிற்கும் ஒரு கிராமம். ஈங்கூர் பஞ்சாயத்தின் கீழ்வரும் பதினெட்டு கிராமங்களில் ஒன்றுதான் எனது ஊர்.

தெரிந்துகொள்வதற்காக பதினெட்டு ஊர்களையும் வரிசைப்படுத்துகிறேன் !

1. ஈங்கூர்
2. பாலப்பாளையம்
3. புலவனூர்
4. காசிபில்லாம்பாளையம்
5. குட்டப்பாளையம்
6. வெட்டுக்காட்டுவலசு
7. நல்லிகவுண்டன்பாளையம்
8. எழுதிங்கள்பட்டி
9. செங்குளம்
10. கூத்தம்பாளையம்
11. நல்லிவலசு 
12. கவுண்டனூர் 
13. நல்லமுத்தாம்பாளையம்
14. சரவம்பதிபுதூர்
15. சரவம்பதி 
16. உச்சனகவுண்டன்புதூர்
17. வேலாயுதம்பாளையம் 
18. பாளிக்காட்டூர் 

கூத்தம்பாளையம் என்பது ஒரு கிராமமாகவும் அதனுடன் இணைந்து பல பேர்களில் தோட்டங்களும் காடுகளும் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. 

பின்வரும் காடுகள் தண்ணீர் பாய்ந்து பல பயிர்களுக்கும் மரங்களுக்கும் உயிர் தந்த வேளாண்மை நிலங்களாக அறியப்படுகின்றன. இக்காடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு ஒன்று இருந்துள்ளது. முதலில் எருதுகளையும் காளைகளையும் கொண்டு நீர் இறைத்தும் , பின்பு மோட்டார் வைத்து நீர் இறைத்தும் விவசாயம் செய்யப்பட்டுள்ளன.

நத்தக்காடு
குட்டையக்காடு
சுள்ளிக்காடு
அத்திக்காடு
பள்ளக்காடு
சக்கிளியங்காடு
கருப்பணாங்காடு
படசுழிக்காடு
பெரியதோட்டம்
பிஞ்சத்தோட்டம்
சேவுங்காடு
வயக்காடு
வேலாங்காடு
பங்குனியங்காடு

இவை அல்லாமல் மழை நீரை மட்டும் நம்பி, வானம் பார்த்த பூமியாகவும் சில காடுகள் இருந்துள்ளன. இவைகளை 'வரக்காடு' என்றும் 'பாங்காடு' என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த காடுகளை கால்நடைகளை மேய்ப்பதற்காக பயன்படுத்திக்கொண்டனர். மழைக்காலங்களில் இந்த வரக்காடுகள் வரம் தரும் காடுகளாக மாறி, கால்நடைகளுக்கு தீவனமாக அமையும் சோளத்தட்டுகளை விதைத்து அறுவடை செய்வதற்கு அம்சமாக அமைந்தன. இக்காடுகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது !

சன்னக்காடு
தோட்டக்காடு
செங்களையாங்காடு
வேப்பனாங்காடு
எழந்தக்காடு
கோம்பக்காடு
களிம்பிக்காடு
புளியங்காடு
மணியங்காடு
கும்மக்குளிக்காடு

வேளாண்மைக்கு பெயர் போன வெள்ளாள கவுண்டர்கள் தான் இந்த கொங்கு நாட்டில் அதிகம். அதுபோல இங்கும் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்த ஓதாளன் கூட்டம், தோடை  கூட்டம், ஈஞ்சன் கூட்டம் சார்ந்த மக்கள்தான் பெருவாரியாக வசித்து வருகிறார்கள் ! அது தவிர மற்ற சாதியினரும் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்தும் சமூக நல்லிணக்கம் சுமூகமாக இருப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை ! 

சிப்காட்டின் வரவும் குடும்பங்களின் குறைவும்  

நூற்றுக்கும்  மேற்பட்ட குடும்பங்களுடனும் பசுமையான தோட்டங்களுடனும் காட்சி தந்த கூத்தம்பாளையம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் வந்த பிறகு அதன் அழகை இழக்கத் தொடங்கியது. எனக்கு நினைவு தெரிந்த பொழுதுதான் சிப்காட் பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி இருந்தார்கள். சில தொழில் நிறுவனங்களும் வர ஆரம்பித்திருந்தன. அதன் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது சிப்காட் எடுத்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் எங்கள் ஊர்காரர்களின் நிலங்களும் அடக்கம் என்று. எங்களுடைய முன்னோர்கள் பணம் என்ற முதலைக்கு தங்களுடைய விவசாய நிலங்களையும், காடுகளையும்   பலியாக கொடுத்து விட்டார்கள். அன்றே அழிவு மறைமுகமாக தொடங்கி இருந்தது எங்கள் ஊருக்கு. தோட்டங்களின் உரிமையாளர்கள் அப்பொழுதே இடம் பெயர்ந்து விட்டனர். ஊர்ப்பகுதி மக்கள் மட்டும் காடுகளை விற்று வந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். 


SIPCOT Entrance, Perundurai, Erode
SIPCOT Entrance, Perundurai, Erode
காலம் செல்ல செல்ல சிப்காட் பகுதியில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. சில நிறுவனங்கள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தில் குழி தோண்டி விட பழகி இருந்தன. ஆகையால், குடிதண்ணீர் கிடைப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனோடு சேர்ந்து நிறுவனங்கள் வெளியிடும் நச்சுப்புகையும் அதீத மாசினை உண்டாக்கின. இவைகளால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். 

ஊரை மட்டும் விட்டு விட்டு சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் எடுத்துக்கொண்டது சிப்காட். இத்தகைய வரலாற்றை கொண்ட கூத்தம்பாளையத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா ? ஊரை சுற்றியுள்ள சிப்காட் இடத்தில் நிறுவனங்கள் கட்டிடம் கட்டுவதற்க்கான ஆயுத்தப்பணிகளை ஆரம்பித்துவிட்டன. 

Lands Under Cleaning - Koothampalayam, Erode


Lands Under Cleaning - Koothampalayam, Erode


 Cleaned Land in Koothampalayam, Erode

நிறுவனங்களின் வருகையால் நாலா புறமும் அடைக்கப்பட்டு சிறைபட  போகிறது எனது கிராமம் ! இது, மக்கள் வேறு இடம் தேடி குடி அமர்வதற்கான சூழலை உண்டாக்கி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் ! 

நீரின்றி அமைந்த ஊர் 

குடிதண்ணீரை பொறுத்தவரை அவ்வளவு எளிதாக பெற முடிவதாக எப்பொழுதும்  இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்த பொழுது ஒரே ஒரு கைப்பம்பு மட்டும்தான் தண்ணீருக்கு மூலாதாரமாக விளங்கியது. 

Water Source
கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த களைப்பில் கைபம்பை வேகமாக பல முறை அமுத்திவிட்டு சட்டென்று ஓடி சென்று இரு கையையும் ஒரு சேர கூப்பி தாகம் தணித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. 

அதன் பின், ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் பெற்று வந்த கிராமம் பிரச்சனையை சந்திக்காமல் இல்லை. அவ்வப்போது மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் பெறுவதில் சிரமம் ஏற்படத்தான் செய்தது. அப்பொழுது எல்லாம் மக்களின் வாய்களுக்கு தீனியாக அமைவது பஞ்சாயத்து தலைவர்தான். சும்மா பொரிந்து தள்ளிடுவார்கள்.


Water Source
அதே சமயம்  கிணற்று தண்ணீர் மக்களின் தாகத்தை தீர்த்து நல்ல பெயர் வாங்கி கொண்டது. ஒரு சில சமயங்களில் கூத்தம்பாளையம் சார்ந்த தோட்டங்களின் உரிமையாளர்களிடம் பேசி தோட்டத்து கிணற்றின் தண்ணீரை குழாய் அமைத்து பெற்றனர்.


Water Source - Well
ஏதாவது ஒருவகையில் தண்ணீர் பிரச்சனையை சமாளித்து வந்த கிராமம் சிப்காட்  தொழில் வளர்ச்சி மையம் வந்த பிறகு தண்ணீருக்கான ஆதாரத்தை முற்றிலுமாக இழந்தது. ஆழ்துளை கிணற்றிலோ சிகப்பு கலராகவும் , பச்சை கலராகவும் தண்ணீர் வர ஆரம்பித்தன. எனவே , கிணற்று நீரையே முற்றிலும் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். கிணற்று நீரும் கொஞ்ச நாள் கழித்து மாசு பட ஆரம்பித்தன. நிறம் மாற ஆரம்பித்தன. இருந்தாலும் நத்தக்காட்டு பகுதியில் அமைந்த மிக ஆழம் கொண்ட ஒரே ஒரு பழைய கிணறு மட்டும் ஓரளவு சுத்தமாக இருந்தது. குடிப்பதற்கு பயன்படாவிட்டாலும் கூட குறிப்பிடும் காலம் வரை மக்களின் முக்கால்வாசி தேவைகளை தீர்த்து வைத்த  பெருமை இதற்கு உண்டு. குடிதண்ணீரை ஈங்கூர் பகுதிக்கு சென்று மக்கள் எடுத்து வந்தனர். சில பேர் அதற்கும் நேரம் இல்லாமல் கிணற்று தண்ணீரையே பருகினர். 

சில காலம் கழித்து இதற்கு விடிவு காலம் பொறந்தது. காவேரி தண்ணீரை குழாய்கள் அமைத்து பெற முயற்சி எடுக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. ஊரில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. இதிலும், தண்ணீர் சரியாக வரவில்லை முதலிய நடைமுறை  பிரச்சனைகள் அதிகம் துளிர்விட்டு முளைக்கவே ஊருக்கு பொதுவாக ஒரே ஒரு குழாய் மட்டும் அமைக்கப்பட்டு தண்ணீர் தரப்பட்டது.  

தற்சமயம், இதில்தான் தண்ணீர் பெறுகிறோம். இதுவும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாலும் , வீட்டிற்கும் தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கும் இடையில் தூரம் சற்றே அதிகம் என்பதாலும் தண்ணீர் பெறுதல் ஒரு சவாலான காரியமாகவே உள்ளது இன்று வரைக்கும் !


Cauvery Water Pipe Koothampalayam, Erode
தண்ணீர் எடுத்துவிட்டு வந்துதான் இந்த பதிவையே இடுகிறேன் என்றால் பார்த்துக்குங்க (பாத்திரம் கழுவ மட்டும் தண்ணி இல்லைனு வைங்க, என்னை சும்மா கழுவி கழுவி ஊத்தும் - மை டியர் அம்மா ! தண்ணிக்கு அவ்ளோ கிராக்கிங்க). 

---------> அடுத்த பதிவில் தொடரும் 

இன்னும் விட்டுப்போன செய்திகளையும் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் பற்றியும் என் சிறு வயது நிகழ்வுகள் பற்றியும் அடுத்த பதிவில் விவரமாக தருகிறேன்  ! 

என்னை முகநூலில்  பின்தொடரலாம் ! 

No comments:

Post a Comment