Wednesday, December 18, 2019

பிரசவ பந்தம்

கடந்த ஒன்றை வருடங்களாக நான் சொல்ல வேண்டும் என்று மனதில் புதைத்து வைத்திருந்த கருத்துகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாமல் மனம் உமிழ்ந்ததன் வெளிப்பாடுதான் இப்பதிவு.

பொதுவாக அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்க்கையின் கனவாக அல்லது லட்சியமாக அல்லது இலக்காக அல்லது வரமாக அல்லது வாழ்க்கையாகவே கருதுவது இரண்டு விடயங்களைத்தான். அது படிப்போ வேலையோ இல்லைங்க. கல்யாணமும் குழந்தை செல்வமும் தான் பாகுபாடு இல்லாமல் பல தரப்பட்ட மக்களாலும் விரும்பக்கூடியவை.

படிப்பு மற்றும் வேலை ஒரு தனிப்பட்ட நபரோடு சம்பந்தப்பட்டது மற்றும் கல்யாணம் என்பது ஒரு புது சொந்தத்தோடு சம்பந்தப்பட்டது. ஆனால் பிரசவம் மற்றும் குழந்தை தான் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு இடையில் பந்தத்தை ஏற்படுத்தி வாழ்க்கைக்கு புத்துயிரூட்டி வாழ்க்கையின் நோக்கத்தை உணர்த்துவதுடன் சம்பந்தப்பட்டது. எனவேதான் குழந்தை செல்வம் , குழந்தை வரம், குழந்தை பேறு என பலவேறு பெயர்களில் அதன் பெருமை சொல்லப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை ஒரு குடும்பம் என்ற முறையில் ஏற்படுத்தும் அந்த அழகிய மதிப்பிற்குரிய காலம்தான் "பிரசவ காலம்". பொதுவாகவே ஒரு பெண் இரண்டு காலங்களில் தான் மிகவும் அழகாக தென்படுகிறாள். ஒன்று பெண் பருவமடையும் காலம். மற்றொன்று மகப்பேறு காலம். அது மட்டுமா, எம்மாதிரியான சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் அதனை எல்லாம் சமாளித்து மனதளவில் ஆரோக்கியத்துடனும் அழகுடனும் இருப்பதாக ஒரு ஆணையும் உணர வைப்பது இந்த கர்ப்ப காலம்தான். இது போல பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் மகப்பேறு மற்றும் பிரசவ காலம்.

கரு உண்டாகி உறுதி செய்த நொடி முதல் தன் குழந்தையின் மீதும் மனைவியின் மீதும் அலாதி பிரியம் கொண்டு தன்னை அறியாமலேயே மிகவும் நெருக்கமாக இணைகிறான் ஒரு ஆண். இவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை இவர்களுக்கு தருவதும் இக்கர்ப்ப காலம்தான். பெண்களை பொறுத்தவரை அவர்களின் வாழ்வு முழுமை பெறுவதே அவர்கள் தாய்மை அடையும் பொழுதுதான் என்ற எண்ணம் தொன்று தொட்டு வந்துள்ளது. ஆகவே பெண்கள் அனைவரும் இயற்கையாகவே தங்களுடைய பிரசவ காலத்தை அனுபவித்தும் சிலாகித்து பேசியும் கவனமுடன் போற்றியும் வருவதில் வியப்பொன்றும் இல்லை. பெண்ணும் தாய்மையும் இரண்டற கலந்தவைதான் என்பதில் மிகையும் இல்லை. ஆண் தன் மனைவிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய ஆசைப்பட்டாலும், பெண்களுக்கு என்னமோ பிரசவ காலங்களில் இருப்பவை இரண்டே இரண்டு ஆசைகள்தான். ஒன்று அனைவரையும் அழைத்து வளைகாப்பு நடத்தணும். இரண்டு தான் வாழ்ந்து பழகிய வீட்டில் அதாவது தான் பிறந்த வீட்டில் கர்ப்ப காலத்தை கழிக்க வேண்டும் என்பதே.

வேலை எல்லாம் ஒதுக்கி விட்டு மனைவியுடன் நேரம் செலவிடுவதும், மனைவிக்கு சின்ன சின்ன வேலைகள் செய்வதும், மனைவி ஆசைப்படுவதை எல்லாம் வாங்கி கொடுப்பதும், பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ன பொருட்கள் வாங்கலாம் என இப்பொழுதே முடிவு செய்வதுமாக ஒரு ஆணும், தன்னை நன்றாக பராமரித்துக்கொண்டும், வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகளை செய்கைகளை எல்லாம் கணவனிடம் காட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும், பிடிக்கவே இல்லை என்றாலும் குழந்தையின் நலன் கருதி பிடிக்காத பொருட்கள் எல்லாம் சாப்பிட்டுக்கொண்டும், குழந்தை எப்படி இருக்கும் என தன்னுள் ஒரு கற்பனையை வளர்த்துக்கொள்வதுமாக ஒரு பொண்ணும் பரஸ்பரம் அன்பை பகிர்தல், விட்டுக்கொடுத்தல் , கடமை , பொறுமை, சகிப்புத்தன்மை, முயற்சி, கவனம், நம்பிக்கை ஆகிய அனைத்து நல்ல குணங்களையும் பெற்று வாழ்க்கையின் புரிதலை உணர்வது கர்ப்ப மற்றும் பிரசவ காலத்தில் உண்டாகும் பந்தத்தின் மூலமாக மட்டுமே. எனவேதான் என் பார்வையில் கல்யாண பந்தத்தை தூக்கி எறிந்துவிட்டு உச்சாணி கொம்பில் உயரமாக தெரிகிறது பிரசவ பந்தம்.

இந்த அழகிய காலத்தில் மகிழ்ச்சிக்கு எவ்வளவு பஞ்சம் இல்லையோ அதே அளவுக்கு பிரச்சனைகளும் ஏராளம். பொதுவாகவே கல்யாணம் மற்றும் குழந்தை பேறு ஆகிய இவ்விரண்டுமே இன்றைய காலகட்டத்தில் மிக எளிதில் அமைவதில்லை. கல்யாணம் செய்வதில் உள்ள சிரமங்களை இன்றளவும் நாம் நினைவுபடுத்தி கொள்வதற்கு அன்றைய காலத்திலேயே வந்த பழமொழிதான் 'வீட்டை கட்டி பார் கல்யாணம் பண்ணி பார்' என்ற பழமொழி. ஒரு கல்யாணம் செய்வதற்கு ஒரு குடும்பமே பல வருடங்கள் தங்கள் உழைப்பை கொடுக்க வேண்டி உள்ளது. அவ்வாறு உழைப்பை கொடுத்து ஒரு வழியாக கல்யாணத்தை நடத்தி முடித்தாலும் ஒரு குழந்தையை பெற்று கொள்வதற்குள் உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது ஒவ்வொரு குடும்பமும். கருத்தரிக்கும் முன்னரும் பிரச்சனைகள் இருக்கிறது. கருத்தரித்த பின்னரும் பிரச்சனைகள் இருக்கிறது.

பொதுவாகவே என்ன படிப்பு? என்ன வேலை? எப்ப கல்யாணம்? ஏதேனும் நல்ல செய்தி உண்டா? இந்த கேள்விகளை எல்லாம் கேட்டு சலித்து போகாத மனிதன் ஒருவன் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவிற்கு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி அது நல்ல நிகழ்ச்சியோ கெட்ட நிகழ்ச்சியோ மேலே சொன்ன கேள்விகளை கேட்காமல் ஒரு சொந்தக்காரர் கூட இருக்கமாட்டார். என்னை பொறுத்தவரை, நான் முதுகலை பட்டபடிப்பிறகு சேர்வதற்கு அச்சாணியே "என்ன வேலை?" என்ற கேள்வி கணைகளாக என் மீது பாய்ந்ததுதான். இளங்கலை பட்டபடிப்பிற்கு பிறகு நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி யாரை பார்த்தாலும் சரி அவர்கள் கேட்ட முதல் கேள்வி அல்லது ஒரே கேள்வி "எங்க வேலைக்கு போற?, என்ன செய்ற?, ஏதாச்சும் வேலைக்கு போலாம்ல?" போன்ற கேள்விகள்தான். இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரு தர்காலிக ஓய்வு அளிக்கலாம் என்ற ஒரு நோக்கத்துடன் வேறு எதையும் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு முதுகலை படிப்பில் சேர்ந்தேன். அது மட்டுமா, ஜாதகம் பல வாங்கி திருமண பொருத்தம் பார்த்து, நேரில் சென்று பெண் பார்த்து எதுவும் ஒத்து வராமல் இருக்கவே, சோர்ந்து போனார் அம்மா. அடுத்த கேள்வி "எந்த பொண்ணுதா புடிக்கும்னு சொல்ல போற?, இந்த பொண்ணுக்கு என்ன? அந்த பொண்ணுக்கு என்ன?" கணைகளாக என் மீது பாய, இனிமேலும் அம்மாவினை சிரமப்படுத்த கூடாது என்ற நினைப்புடன் அடுத்து எந்த பெண்ணை பெண் பார்த்தாலும் "சரி" என்று சொல்லி விடுகிறேன் என முடிவெடுத்து முடிந்ததுதான் என் கல்யாணம். இவற்றை எல்லாம் சொல்வதற்கு காரணம் இது போன்ற கேள்விகளுக்கு வீரியம் அதிகம் என்பதை நினைவுபடுத்தவே. நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை இந்த கேள்விகள். இந்த கேள்விகள் பொதுவாக யாரையும் யோசிக்க விடாது. சட்டென்று ஒரு முடிவினை எடுத்துவிட தூண்டும். இந்த கேள்விகளை நேர்மறையாக எடுத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்போர் அடுத்த நிலையினை நோக்கி நகர்கின்றனர். எதிர்மறையாக எடுத்துக்கொள்வோர் தவறான பாதைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாகி உயிரையும் மாய்த்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. 

இது போலத்தான் கருத்தரிக்கும் காலத்திற்கு முன்னர் பல வீரியமிக்க கேள்விகள் கேட்கப்படுகின்றன. கல்யாணம் முடித்த உடன் கருத்தரிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மகப்பேறு காலத்திற்குள் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் நுழைய முடிகிறது. ஆனால் கருத்தரிப்பது கொஞ்ச நாட்கள் தள்ளி போகும்போது கடைசி கேள்வியான "ஏதாச்சும் நல்ல செய்தி உண்டா?" என குடும்பத்தினரும் சொந்தத்தினரும் தொடர்ந்து கேட்பது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்று. இது மன ரீதியாக புது மண தம்பதிகளை சீர்குலைக்கிறது. குழந்தை இல்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக விளங்குகிறது. ஒரு வருட காலம் புது மண தம்பதிகளிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போதிய அவகாசம் கொடுப்பது குழந்தை பேறு கிடைக்க வழிவகை செய்யும் என்கிறது அறிவியல் ஆய்வு. 

இது ஒரு பக்கம் என்றால் மகப்பேறு காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் கணக்கில் அடங்காதவை. அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படும் மாத்திரைகள், தேவைக்கு மேலாக எடுக்கப்படும் சோதனைகள், சோதனைக்கு பிறகு மருத்துவர் என்ன சொல்ல போகிறார் என்ற படபடப்பு என்பதில் தொடங்கி பிரசவ நாள் வரை பல இன்னல்களை சந்தித்துதான் ஆக வேண்டும். உடல் ரீதியாக குழந்தை பெற்று கொள்ள முடியாமல் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுடைய உணவுமுறை , மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறையே முதற் காரணங்களாக இருக்கின்றன. இவை எல்லாம் ஒரு தனி நபர் சார்ந்த கூறுகளாக இருப்பதால் ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சி செய்து அக்கறை எடுத்துக்கொள்ளும்போது இப்பிரச்னைகளிலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தையின்மை , பிரசவம் இவற்றை மையப்படுத்தி முறையில்லாமல் நடக்கும் வணிகம் மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இனிவரும் காலங்களிலாவது வருமா என்றால் அது சந்தேகம்தான். ஏனென்றால் அனைவரும் இப்பிரச்சனையை ஒரு சாதாரண நிகழ்வாக பார்ப்பதுடன் ஏற்று கொள்ளவும் தொடங்கி விட்டனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், சோதனை குழாய் மூலம் கருத்தரிக்க வைக்கும் முறை, இயற்கை வழி பிரசவத்தை விடுத்து செயற்கை முறைக்கு தூண்டுவது, வாடகை தாய் முறை இவை எல்லாம் கணக்கே இல்லாமல் அதிகரித்து வருவதும் வாடிக்கையாகி வருவதும் வணிகத்திற்கும் வருமானம் ஈட்டுவதற்கும் மிக ஏதுவாக அமைகின்றது. இவை எல்லாமே ஒற்றை புள்ளியான பிரசவ பந்தத்தை சுற்றித்தான் இயங்குகின்றன.

இந்த கர்ப்ப காலத்திலும் ஒரு தம்பதியினருக்கு இடையே இருக்கும் பந்தம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மேம்படவில்லை என்றால், அதனை கண்டிப்பாக கொடுக்க தவறுவது இல்லை கர்ப்ப காலத்தின் இறுதியில் வரும் பிரசவ நாள். எப்பொழுது பிரசவ நேரம் வரும் என தெரியாமல் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு மற்றும் படபடப்பு, மருத்துவமனையை அடைந்தவுடன் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா, வலி வருவதற்கு மாத்திரை ஏதாவது என மருத்துவரின் விளக்கம் கேட்டு அடையும் குழப்பம், 'அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவமனை பொறுப்பல்ல' என்ற படிவத்தில் கையெழுத்திடும்போது அடையும் கலக்கம், 'முடியல மாமா வலி தாங்க முடியல' என மனைவி ஒரு பக்கம் கதற 'முடியலைன்னா அறுவை சிகிச்சை பண்ணிக்கலாம்' என மருத்துவர் பதில் அளிக்க 'கொஞ்சம் பொறுமையா இருமா சுகப்பிரசவம் ஆனாதான உனக்கு நல்லது மாமா கூடவே இருக்கேன்' என நாள் முழுக்க கூடவே இருந்து காட்டும் அக்கறை, ஒருவழியாக எல்லாம் முடிந்து பிரசவ அறைக்குள் சென்று 'ஒரு பெண்ணுக்கு உயிர் போய் உயிர் வரும் நேரம் இது' என்று சொல்லக்கூடிய அந்த பிரசவ நேரத்தை சந்திக்கும் நேரம் பிரசவ அறையில் இருந்து வெளிவரும் அலறல் சத்தம் கேட்டு மனதளவில் நொறுங்கிப்போய் கல்நெஞ்சுக்கார கணவனும் கண்ணீர் கசிந்து 'பொண்டாட்டி உசுரோட வந்த போதும்டா சாமி' என மனதிற்குள் சொல்லி அடையும் மனமாற்றம், இறுதியில் 'உங்களுக்கு பொம்பள புள்ள பாருங்க' என செவிலியர் நம் ரத்தத்தை நம் உறவை நம் கண் முன் காட்டும்போது அடையும் அளவில்லா ஆனந்தம் பரவசம் - இவையெல்லாம் ஒரு குடும்பத்திற்குள் வலிமையான பிணைப்பை பந்தத்தை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன? நிச்சயம் ஏற்படுத்தும். இப்பிரசவ காலத்தில் தொடங்கும் பந்தம்தான் பல பிரச்சனைகளை தாண்டியும் ஒரு குடும்பத்தை ஒன்றாக வைத்துக்கொள்ள துணை நிற்கிறது.

இப்பிரசவ பந்தத்தையும் தாண்டி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், விவாகரத்துகள் வருகிறது என்றால் உலகம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என எல்லாம் வல்ல இயற்கையும் , இறைவனும் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேல சொன்னவை அனைத்தும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்ன கருத்துகள். ஆதலால், இவற்றை எல்லாம் கடந்து வந்து அன்பு மகளின் முகத்தை முதல் முறையாக பார்த்த பின்பு நான் வெளிப்படுத்திய வரிகளை தான் உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்.

💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚

நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
நாட்காட்டிய தினம் புரட்டி
உன்னையும்
உன்னில் என்னையும்
கண்டு களிப்புற
ஏங்கிய நாளும் வந்ததின்று.
நீ உதித்த இத்தருணம் (25-08-18)
மனதளவில் புதிதாய் நானும்தான் பிறக்கிறேன் !

தந்தையாக பதவி உயர்வை எனக்களித்த பின்னும்
ஏன் இந்த அழுகை ?
வாழ்க்கையை வசமாக்க
சேர்ந்தே பயணிப்போம் வளர்ந்து வா !
வரவேற்கிறேன் என் மார்பினுக்கும், பின் இவ்வுலகிற்கும் !
------ உன்னால் பெரிதுவக்கும் தந்தை - நான் !




💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚

மகள் பிறந்தபொழுதே இப்பதிவை இடலாம் என்று நினைத்து இருந்தேன். இருந்தாலும் பதிவு செய்தே ஆக வேண்டும் என்பதால் ஒரு வருடம் கழித்து இன்று பதிவிடுகிறேன் !

ஆக, பிரசவ பந்தம் மிக வலிமையானது. அது தரும் நல்ல தொடக்கத்தையும் உறவுகளையும் போற்றுவோம். அதனை மூலதனமாக வைத்து அடுத்த அடுத்த நிலைக்கு நகர்வோம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் சிந்திப்போம் !


💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚

1 comment: