ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) - கருத்து வேறுபாடுகளுக்கு சற்று கூட இடம் கொடுக்காமல் ஜனாதிபதியாக, விஞ்ஞானியாக, சிந்தனைவாதியாக மற்றும் பேராசிரியர் என பல்வேறு முகங்களில் இந்திய வாழ் மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருந்தவர் நமது அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
A. P. J. Abdul Kalam |
மழலை முதல் முதியவர் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பாமரன் முதல் பணக்காரன் வரை பாகுபாடு இல்லாமல் ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து ஜனநாயகத்தின் மக்கள் தோழனாக ரசிக்கப்பட்டவர். அரசியல் வேறுபாடுகளை கடந்து மக்களின் ஜனாதிபதியாக வலம் வந்தவர். விஞ்ஞான உலகத்தின் திறவுகோலாக மாணவர்களின் உந்துசக்தியாக திகழ்ந்தவர்.
A. P. J. Abdul Kalam |
தன்னுள் பரவிக்கிடந்த பல்வேறு நற்குணங்களால் இந்திய மக்களை நல்வழிப்படுத்திய அப்துல் கலாம் ஐயா அவர்கள் 27-07-2015 அன்று கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது தனது இன்னுயிரை விட்டார். அவரை பின்பற்றியவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அவரது மறைவு உள்ளபடியே எனக்கு வருத்தத்தை அளித்தது. மறைவு செய்தியை அறிந்தவுடன் என் மனதில் தோன்றிய வார்த்தைகளால் இரங்கல் செய்தியாக கவிதை ஒன்றை பதிவு செய்திருந்தேன். அதனை திருத்தம் எதுவும் செய்யாமல் வலைதள நண்பர்களுக்காக மீண்டும் இங்கு அதை பதிவு செய்து ஐயா அவர்களுடைய நினைவு கூறுகிறேன்.
அப்துல் கலாம் ஐயா அவர்களை போற்றுவோம் பின்பற்றுவோம்.
தமிழ் பெருமை பரப்பியவர்
இனி எங்கு காண ?
இளைஞர்களுக்கு இரும்புசக்தியாக
இந்தியாவிற்கு உந்துசக்தியாக இருந்தவர்
இனி எங்கு காண ?
அனைவருக்கும் அன்பாகவும்
அறிவியலின் அடையாளமாகவும் திகழ்ந்தவர்
இனி எங்கு காண ?
அமைதியையும் அர்ப்பணிப்பையும்
இரண்டறக் கலந்தவர்
இனி எங்கு காண ?
ஒருவரி இருவரி கருத்துகளால்
சிந்தனை புரட்சி செய்தவர்
இனி எங்கு காண ?
இந்திய ஏவுகணை மனிதனாகவும்
மக்களின் ஜனாதிபதியாகவும் ஒருவரே
இனி எங்கு காண ?
மண்ணுக்காகவும் மாணவர்களுக்காகவும்
வாழ்நாளை ஈந்தவர்
இனி எங்கு காண ?
மாணவர் மத்தியில் உயிர் விடுவதுதான்
எனக்கு இன்பம் என நினைத்து விட்டீரோ ?
மறைந்தது உங்கள் உடல் ஆகினும்
மாறாமல் இருக்கப்போவது உங்கள் புகழே !
இந்தியா எனும்போது ஒலிக்கப்போவது
உங்கள் பெயரில்லாமல் வேறென்ன !
ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவருக்கு நாம் செலுத்த கூடிய அஞ்சலி என்பது அவர் கூறிய கருத்துகளை ஒரு சிறு சதவிகிதமேனும் பின்பற்றுவதே
No comments:
Post a Comment