Sunday, April 19, 2026

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் : கருத்தும் கணிப்பும்

வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய இந்த வலைதளத்தில் நான் தொடர்ச்சியாகப் பதிவுகள் இடவில்லை என்றாலும் கூட, ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் சமயத்தில் என்னால் இதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

இதற்காக நாம் ஏன் மெனக்கெட்டு நான்கு ஐந்து நாட்கள் செலவு செய்து பதிவினை இட வேண்டும் என்று உள்மனது சொன்னாலும் கூட, என் ஆழ்மனதில் அரசியலைப் பற்றிய நமது புரிதலைக் குறைந்தபட்சம் நம்மைப் பின்பற்றுபவர்களுக்காவது கடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் சமயத்தில் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றிய என்னுடைய புரிதலைத் தவறாமல் பகிர்ந்து வருகின்றேன்.

அதேபோல இம்முறையும் 2026 தேர்தல் சூடுபிடித்துவிட்டது. வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிக்கும் நாளாக அறிவிக்கப்பட்டு, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. அந்தச் சமயத்தில், இந்த 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளுடைய வியூகங்களும் வலிமையும் என்ன என்பதைத் தரவுகளின் அடிப்படையிலும் சூழ்நிலைகளின் அடிப்படையிலும் நாம் கணிக்க இருக்கின்றோம். மேலும், ஒவ்வொரு கட்சியும் இந்தத் தேர்தலில் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பதையும் நாம் அலச இருக்கின்றோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப்  பொதுத்தேர்தல் : கருத்தும் கணிப்பும்

இப்பதிவினை இடுவதற்கு எனக்கு மற்றொரு காரணமும் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நான் இதே போல ஒரு கருத்துக்கணிப்பை வெளிப்படுத்தி இருந்தேன்; அது மிகத் துல்லியமாக அமைந்தது. அதன் அடிப்படையில் இந்த முறையும் களத்தைக் கணித்து ஒரு கருத்தைச் சொல்வதற்காக இப்பதிவினை இடுகின்றேன். கடந்த முறை நான் கணித்ததை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கில் (Link) சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். சுருக்கமாக நீங்கள் தெரிந்து கொள்வதற்கு இதோ கீழே உள்ள விவரங்களைப் படிக்கவும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல்

2021-ஆம் ஆண்டு நான் கணித்ததும் நடந்ததும்:
சரியாக அமைந்த 2021ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு :

2021-ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது என்னுடைய கணிப்பு மிகவும் சரியாக இருந்ததே இப்பதிவை நான் இடுவதற்கு உந்துதலாக அமைகிறது.   2021-ஆம் ஆண்டு வாக்குப்பதிவு 06-04-2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 02-05-2021 அன்றும் நடைபெற்றது. வாக்குபதிவிற்கு முன் 17-03-2021 அன்று நான் வெளியிட்ட பதிவில் திமுக மற்றும் அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் தொகுதிகள் எனவும் இழுபறி தொகுதிகள் எனவும் கீழ்க்கண்டவாறு கணித்தேன்.


அதன்பிறகு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன் 29-04-2021 அன்று இழுபறி தொகுதிகளில் 70 சதவிகிதம் திமுகவிற்கு சாதகமாக அமையும் எனவும் கணித்தேன். 
                                                                     
இக்கணக்குப்படி,  மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், உறுதியாக கிடைக்கும் என நான் கணித்த எண்ணிக்கையில் திமுகவிற்கு 90-ம் அதிமுகவிற்கு 60-ம் போக மீதி உள்ள 84 இழுபறி தொகுதிகளில் 70 சதவிகித கணக்குப்படி திமுகவிற்கு 59-ம் அதிமுகவிற்கு 25-ம் செல்ல கீழ்க்கண்டவாறு அமைந்தது எனது கணிப்பும் வெளிவந்த முடிவும். 

நான் கணித்ததற்கும் தேர்தல் முடிவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வெறும் 10 மட்டுமே. இதன் அடிப்படையிலேயே அமைகிறது இம்முறை நான் முன்வைக்கும் கருத்துகளும் கணிப்புகளும்.

ஒவ்வொரு முறையும் மிக விளக்கமாக, குறிப்பாக இணையத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் எனது முந்தைய பதிவுகளில் அரசியல் சூழலை விளக்கியிருந்தேன். அவற்றை மீண்டும் இங்கே சொல்லத் தேவையில்லை எனக் கருதுவதால், முந்தைய பதிவுகளுக்கான லிங்க்கை (Link) மட்டும் கொடுத்துள்ளேன். இப்பதிவுகளைப் படிக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்; இது உங்களுக்கு ஒரு தெளிவான அரசியல் புரிதலைக் கொடுக்கும் என்று நம்புகின்றேன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ஓர் அலசல்

நாடாளுமன்ற தேர்தல் 2019 : ஓர் அலசல்

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (அரசியல் அறிவோம்)

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (கடந்த கால வரலாறு)

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 1

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 2

இம்முறை மிகச் சுருக்கமாக 2026-ஆம் ஆண்டிற்கான அரசியல் சூழ்நிலைகளை எனது ஆய்வின் அடிப்படையில் தர முனைகின்றேன்.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்திராத ஒரு தேர்தலாக இந்த 2026 தேர்தல் அமையப்போகின்றது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் சமயங்களில் சில முக்கியமான பிரச்சனைகள் பேசுபொருளாக இருக்கும். அதை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமையும். சில சமயங்களில் அரசியல் களத்திற்குப் புதியதாக வரக்கூடிய கட்சிகள் பேசுபொருளாக அமைவதோடு, அரசியல் களத்தையே மாற்றக்கூடிய சக்திகளாகவும் இருந்துள்ளன.

அந்த வகையில், மாபெரும் அரசியல் ஆளுமைகளாக அறியப்பட்ட கருணாநிதி அவர்களும் ஜெயலலிதா அவர்களும் இல்லாத நிலையில், மு.. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமைகளில் இத்தேர்தல் நடைபெறுகின்றது. இவர்களுடன் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பலத்தைக் கொண்டுள்ள விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுவதால், இத்தேர்தல் உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மாற்று சக்திகளாக இதுவரை தங்களை முன்னிறுத்தித் தேர்தல் களத்தைச் சந்தித்த விஜயகாந்த், கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் ஆகிய அனைவரையும் விட விஜய் அவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்படுவதால், ஒரு தேர்தல் ஆர்வலராகவும் கணிப்பாளராகவும் எனக்கு இது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்

பொதுவாக ஒரு தேர்தல் நடைபெறும் பொழுது சில முக்கிய காரணிகள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன. அதனை நான் பின்வருமாறு வகைப்படுத்துகிறேன்....

1. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள்: (இது அனைத்து நாடுகளிலும், அனைத்து மாநிலங்களிலும், அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான ஒன்று).

2. ஆதரவான அலை: ஆளுங்கட்சிக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ சாதகமாக வீசக்கூடிய அலை.

3. பாதகமான அலை: ஒரு கட்சிக்கு எதிராகத் திரும்பக்கூடிய அரசியல் சூழல்.

ஆளுங்கட்சிக்குக் கிடைப்பது அதிருப்தி வாக்குகளா அல்லது திருப்தி வாக்குகளா?

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை நிறைவேற்றலாம். மக்களிடத்தில் நல்ல அபிமானத்தையும் பெறலாம். இருப்பினும், மீண்டும் தேர்தலைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலை வரும்போது, எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்குச் சிறிதளவேனும் அதிருப்தி வாக்குகள் (Anti-incumbency) இருக்கத்தான் செய்யும். சில சமயங்களில் இந்த அதிருப்தி குறைவாக இருக்கலாம், சில சமயங்களில் அதிகமாக இருக்கலாம், இன்னும் சில சமயங்களில் மிக உச்சத்திலும் இருக்கலாம்இந்த அதிருப்தி வாக்குகளை ஆளுங்கட்சி எவ்வாறு சமாளிக்கின்றது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி வாய்ப்பு அமையும்.

  • பிரச்சாரங்களின் மூலமாகத் தனது நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தல்.
  • கூட்டணியை வலிமைப்படுத்துதல்.
  • எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்தல் மற்றும் அவர்களுக்குள் குழப்பம் விளைவித்தல்.
  • கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிடுதல்.
  • மக்களின் அதிருப்தியைத் திசைமாற்றுதல்.

இப்படியான செயல்கள் மூலமாக அதிருப்தியைச் சரிபடுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர இயலும். ஆனால், இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளைத் தன்பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் சரியான பிரச்சார உத்தியைக் கையாண்டால், அது அவர்களுக்குச் சாதகமாக அமையும். ஆக, ஆளுங்கட்சிக்கு அதிருப்தி வாக்குகள் இருக்கும்போது வெற்றி வாய்ப்பு என்பது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாகவே இருக்கும். எந்தக் கட்சி இறுதி நேரப் பிரச்சாரத்தில் முந்துகிறதோ, தொகுதிகளில் எந்தக் கட்சி வேட்பாளர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றார்களோ, அக்கட்சியே ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பைப் பெறும்.

கட்சிக்கு ஆதரவான அலை (Positive Wave)

இதுபோன்ற ஒரு சூழல் எப்பொழுதும் நிகழ்வதில்லை. மிக அரிதாகவே நிகழும். மக்களின் மனம் கவர்ந்த, எழுச்சிமிக்க ஒரு தலைவர் அரசியல் களத்திற்கு வரும்போது அவருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை கிடைக்கலாம். அந்த அலையினால் அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது இரண்டாவது பட்சம், ஆனால் வெற்றி பெறுபவர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் உருவெடுப்பார்.

அடுத்ததாக, அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களாக விளங்குபவர்களின் எதிர்பாராத மரணம் அல்லது உடல்நிலை பாதிப்பு போன்றவை, அவர்கள் சார்ந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை உருவாக்கி, அது ஆதரவான அலையாக மாறக்கூடும்.

கட்சிக்கு எதிரான அலை (Negative Wave)

இது பொதுவாக ஆளுங்கட்சியை நோக்கியே இருக்கும். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மிக அதிக அளவில் வெளிப்படும்போது, அதனை அறுவடை செய்ய எதிர்க்கட்சிகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான அலையாக மாறுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், எதிர்க்கட்சிகள் சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும், அவர்கள் பெரிதாகக் களப்பணி ஆற்றாவிட்டாலும் கூட வெற்றி என்பது அவர்களுக்குச் சாதகமாகவே அமையும்.

கடந்த 50 ஆண்டுகால தமிழகத் தேர்தல் அரசியல்: வெற்றியைத் தீர்மானித்த காரணிகள்

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த சூழல்களையும், கட்சிகள் வெற்றி பெற்ற விதத்தையும் ஆய்வு செய்தால் சில சுவாரசியமான உண்மைகளை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆளுங்கட்சி மீதான அதிருப்தியா? சாதகமான அலையா? அல்லது பாதகமான அலையா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதனைப் பின்வரும் தரவுகள் மூலம் நாம் அறியலாம்.

தேர்தல் ஆண்டு

திமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

மற்ற வை

அலையா? அதிருப்தி மட்டுமா? வேறு காரணமா?

வெற்றி / தோல்வி முக்கிய காரணிகள்

1977

48

144

42

அலை

மாற்றத்திற்கான அலை

எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு ( எம்.ஜி.ஆர் அலை)

1980

69

162

3

அலை

பரிதாப அலை

எம்.ஜி.ஆர்  ஆட்சி கலைப்பு

1984

34

195

5

அலை

அனுதாப அலை

இந்திரா காந்தியின் மறைவுஎம்.ஜி.ஆரின் உடல்நிலை  பாதிப்பு

1989

169

30

35

வேறு காரணம்

அதிமுக பிளவு

ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிளவு,  

1991

7

225

2

அலை

தீவிர அனுதாப அலை

ராஜீவ் காந்தி படுகொலை,  ஒருங்கிணைந்த அதிமுக

1996

220

4

10

அலை

கடும் ஆட்சி எதிர்ப்பு அலை

அதிமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தி

2001

37

196

1

அதிருப்தி  மட்டும்

வலுவான கூட்டணி  அமைத்து அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்தது அதிமுக

2006

163

69

2

அதிருப்தி  மட்டும்

தேர்தல் அறிக்கை  மூலம்  அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்தது திமுக

2011

31

203

0

அலை

கடும் ஆட்சி எதிர்ப்பு அலை

திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தி

2016

98

136

0

அதிருப்தி  மட்டும்

அதிருப்தி வாக்குகள் திமுகவிற்கும், மக்கள் நல கூட்டணிக்கும் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு சாதகமானது

2021

159

75

0

அதிருப்தி  மட்டும்

பிரசாந்த் கிஷோர் தலைமையிலான தேர்தல் குழு சரியாக திட்டமிட்டு அதிருப்தி வாக்குகளை திமுகவிற்கு பெற்று கொடுத்தது


மேலே குறிப்பிட்ட தரவுகளை ஒருசேர பார்க்க இந்த படத்தை கிளிக் செய்யவும்.

தேர்தல் வகைப்பாடுகளும் காரணங்களும் 

தேர்தல் ஆண்டு

வகைப்பாடு

பயனடைந்த கட்சி

சுருக்கமான காரணம்

1977

மாற்றத்திற்கான அலை / எம்.ஜி.ஆர் அலை

அதிமுக

v நெருக்கடி நிலைக்குப் பிறகு (Emergency) நடந்த தேர்தல் - காங்கிரஸ்

v திமுக மீதான ஊழல் புகார்கள் (சர்க்காரியா கமிஷன்) - திமுக

v எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தின் மீது மக்கள் கொண்ட அதீத  ஈர்ப்புஅதிமுக

1980

பரிதாப அலை / நியாயத்திற்கான அலை

அதிமுக

v பாராளுமன்ற தோல்வியை காரணம் காட்டி மத்திய அரசால் மாநில ஆட்சி கலைப்பு - நியாயம் இல்லை என மக்கள் கருதியது. (காங்கிரஸ் )

v காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி (திமுக )

1984

அனுதாப அலை

அதிமுக

v இந்திரா காந்தியின் மறைவு (காங்கிரஸ் )

v எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை. (அதிமுக )

v காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி (அதிமுக )

1989

அதிருப்தியும் இல்லை. அலையும் இல்லை. (அதிமுக பிளவு)

திமுக

v ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிளவு (அதிமுக )

v அதிமுக பிளவை பயன்படுத்தி, காங்கிரஸின் "தனித்து ஆள வேண்டும்" என்ற முடிவால் தனித்து போட்டியிட்டது (காங்கிரஸ் , அதிமுக )

1991

தீவிர அனுதாப அலை

அதிமுக

v ராஜீவ் காந்தி படுகொலை (காங்கிரஸ் , அதிமுக )

v ஒன்றுபட்ட அதிமுக (அதிமுக )

1996

கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலை

திமுக

v ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரம் (அதிமுக )

v ஆட்சியின் மீது பல ஊழல் புகார்கள் (அதிமுக )

2001

ஆட்சி அதிருப்தி + வலுவான கூட்டணி

அதிமுக

v அதிருப்தி சிறிதே என்றாலும் கூட, அதிமுக அமைத்த மிக வலுவான கூட்டணி (அதிமுக )

2006

ஆட்சி அதிருப்தி + தேர்தல் அறிக்கை

திமுக

v தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற "விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டி" மற்றும் "2 ரூபாய்க்கு அரிசி" (திமுக )

v 8% பெற்ற விஜயகாந்தின் தேமுதிக (அதிமுக )

v "தொங்கு சட்டசபை" உருவாகியது (திமுக )

2011

கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலை

அதிமுக

v 2G ஊழல், மின்வெட்டு மற்றும் ஈழப்போர் (திமுக )

v விஜயகாந்தின் தேமுதிக-வுடன் கூட்டணி (அதிமுக )

2016

ஆட்சி அதிருப்தி (நலத்திட்டங்கள் + சிதறிய கூட்டணி)

அதிமுக

v நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையில் தனித்து நின்ற அதிமுக (அதிமுக )

v எதிர்க்கட்சிகள் சிதறி இருந்தன. திமுகவிற்கு சரியான கூட்டணி அமையவில்லை (திமுக )

2021

ஆட்சி அதிருப்தி + (உட்கட்சி பிரச்சனைகள் + பிரசாந்த் கிஷோர் குழு)

திமுக

v 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் விரும்பிய இயல்பான மாற்றம் (திமுக )

v ஜெயலலிதா மறைவு (அதிமுக )

v அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் (அதிமுக )

v பிரசாந்த் கிஷோர் குழுவின் திட்டமிட்ட பிரச்சாரம் (திமுக )

2026 (எதிர்பார்ப்பு)

ஆட்சி அதிருப்தி + (மாற்றத்திற்கான வேட்கை (விஜய்) + கூட்டணி பலம்)

அதிமுக

v திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை (அதிமுக , திமுக )

v கூட்டணி பலம் (அதிமுக , திமுக )

v விஜயின் வருகை (அதிமுக , திமுக )

மேற்கண்ட தரவுகள் நேரடியாக வெளிப்படுத்துவது: 

அதிமுக - மக்கள் செல்வாக்கும் அலைகளும்

எம்.ஜி.ஆர் காலத்து ஆதிக்கம்: 1977 முதல் 1984 வரை எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக தொடர்ச்சியாக மூன்று முறை (144, 162, 195 இடங்கள்) மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவு செய்தது. இது முழுக்க முழுக்க ஒரு தனிநபரின் செல்வாக்கினால் உருவான அலை ஆகும்.

அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி: 1977, 1980, 1984, 1991, 2001, 2011 மற்றும் 2016 எனப் பல தேர்தல்களில் அதிமுக 130-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. இது அந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வலுவான அடித்தளத்தைக் காட்டுகிறது.

தனித்துப் போட்டியிட்டு வெற்றி: 2016-ல் எந்தப் பெரிய கூட்டணியும் இன்றி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 136 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இது திமுகவின் கூட்டணி பலத்திற்கு எதிராக அதிமுகவின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்குச் சான்றாகும்.

திமுக - கூட்டணி மற்றும் உத்திகளின் வெற்றி

கூட்டணி பலம்: தரவுகளின்படி, 2001-ல் அதிமுக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெற்றபோது திமுக 37 இடங்களுக்குச் சுருங்கியது. ஆனால் 2021-ல் சரியான திட்டமிடல் மற்றும் வலுவான கூட்டணி மூலம் திமுக 159 இடங்களைப் பெற்றுள்ளது.

ஆட்சி எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்தல்: திமுகவின் பெரும்பாலான பெரிய வெற்றிகள் அதிமுகவின் பலவீனமான தருணங்களில் கிடைத்துள்ளன:

  • 1989: அதிமுக பிளவு (ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள்) காரணமாக திமுக 169 இடங்களைப் பெற்றது.
  • 1996: அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தி அலையினால் திமுக 220 இடங்களைப் பெற்றது.
  • 2021: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் திட்டமிட்டுப் பெற்றதன் மூலம் வெற்றி கிடைத்தது.

அதிமுகவின் சரிவுகளும் அதற்கான காரணங்களும்

உட்கட்சி பூசல்கள்: 1989-ல் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அதிமுகவின் மொத்த பலம் 30 ஆக குறைந்தது. இது திமுகவின் வெற்றிக்கு நேரடிப் பாதையை அமைத்துக் கொடுத்தது.

நிர்வாகக் குறைபாடுகள்: 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே அதிமுக மற்றும் திமுக மீது நிலவிய "கடும் ஆட்சி எதிர்ப்பு அலை" (Anti-incumbency Wave) ஆட்சியை மாற்றியுள்ளது.

ஒப்பீடு: மக்கள் ஆதரவு vs கூட்டணி ஆதரவு

அதிமுக: பெரும்பாலும் "அலை" அல்லது "தலைவர் ஈர்ப்பு" (எம்.ஜி.ஆர்/ஜெயலலிதா), மக்கள் செல்வாக்கு மூலம் அதிக இடங்களை வென்றுள்ளது.

திமுக: தேர்தல் அறிக்கை (2006) மற்றும் சரியான கூட்டணி கணக்குகள் மூலம் வாக்கு சதவீதத்தை இடங்களாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இருமுனைப் போட்டி: 2011-க்குப் பிறகு மற்ற கட்சிகளின் (Others) பங்களிப்பு பூஜ்ஜியமானது, தமிழக அரசியல் முழுக்க முழுக்க இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே சுருங்கிவிட்டதை உறுதிப்படுத்துகிறது.

கண்கூடாக தெரியும் இந்த தகவல்களை தாண்டி, தரவுகளில் மறைந்துள்ள உண்மைகளும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகளும் என சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன்

மேற்கண்ட தரவுகளில் மறைந்துள்ள, நீங்கள் ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியக் குறிப்புகள்

1. வாக்களிப்பதற்கான காரணத்தைத் தேடும் மக்கள்: மக்கள் அனைவருமே தேர்தலில் வாக்களிக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடுகின்றனர். தேர்தல் சமயத்தில் தங்களை வந்தடையும் காரணங்கள் தர்க்கரீதியாகவோ அல்லது உணர்வுப்பூர்வமாகவோ தங்களுக்குச் சரியாகத் தோன்றும் பட்சத்தில், அவர்கள் தங்களது வாக்கைச் செலுத்துகின்றனர். இதனை நாம் இரு வகையாகப் பிரிக்கலாம்:

  • கட்சி விசுவாசிகள்: இவர்கள் எதைப் பற்றியும் ஆராயாமல், தாங்கள் விரும்பும் ஒரு கட்சிக்கு வாக்களிக்க ஏதுவான ஒரு காரணத்தை மட்டும் தேடுபவர்கள்.
  • நடுநிலை வாக்காளர்கள்: தேர்தல் களத்தில் கிடைக்கப்பெற்ற காரணங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அதற்கு ஏற்பத் தங்களது வாக்கைச் செலுத்துபவர்கள்.

தமிழ்நாட்டுத் தேர்தலில் தொன்றுதொட்டு இந்த இரண்டு வகை மக்களின் தாக்கமும் பரவிக் கிடப்பதால்தான், இங்கே ஆட்சி மாற்றம் என்பது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது மற்றும் இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன 

2. தலைவர்கள் மீதான பற்றும் மோகமும்: சித்தாந்தங்களைக் கடந்து, தலைவர்கள் மீதான தனிப்பட்ட பற்று மற்றும் மோகம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் உள்ளதை நாம் காண்கின்றோம். அதன் காரணமாகவே, தலைவர்களின் உடல்நிலை பாதிப்படையும் பொழுதோ அல்லது அவர்கள் மறைவின் பொழுதோ, அவர்களை மையமாக வைத்து நிகழும் மாற்றங்கள் மக்களால் உற்று நோக்கப்படுகின்றன. இது அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

3. சினிமாவில் இருந்து அரசியல் நோக்கிய பயணம்: "சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் ஜொலிக்கலாம்" என்ற கருத்து தமிழ்நாட்டு அரசியலில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. இது என்னைப் போன்றவர்களுக்கு ஒப்புதல் இல்லாத வருந்தத்தக்க விஷயமாக இருந்தாலும், இன்றும் அதுவே நிதர்சனமான உண்மையாகத் தொடர்கிறது. அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன், சரத்குமார், சிவாஜி கணேசன் உட்படப் பலரும் சினிமா வாயிலாகத் தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, அரசியலில் ஜொலிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களே அல்லது இருப்பவர்களே.

4. தேர்தல் களத்தின் எதார்த்தங்களும் அதிகார மையங்களும்: இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்தையுமே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அணுகியுள்ளனர். வாக்குகள் பிரிந்தாலும் கூட, இறுதியாகத் தேர்தல் களம் இந்த இரண்டு துருவங்களை(திமுக,அதிமுக) நோக்கியே நகர்கிறது. இதனால்தான், புதியதாக அரசியல் களத்திற்கு வரும் கட்சிகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு வளர்ச்சி பெறுவதில் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றன. இக்கட்சிகள் தங்களை ஏதேனும் ஒரு கூட்டணியில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றன. இதில் சீமான் அவர்கள் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மட்டுமே விதிவிலக்காகத் தனித்துப் போட்டியிட்டுத் தொடர்ந்து பயணிக்கிறது.

5. வேட்பாளர்களின் வெற்றியும் அலைகளும்: மாநில அளவில் பார்க்கும்போது கட்சித் தலைவரின் மேல் பெரிய எதிர்ப்பு இல்லாத பட்சத்தில், ஒரு தொகுதியின் வெற்றியை அங்கு நிற்கும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் கூட்டணி பலமுமே தீர்மானிக்கின்றன.

ஒரு கட்சிக்குச் சாதகமான அலை வீசும் பொழுது, மக்கள் முகம் தெரியாத வேட்பாளரைக் கூட வெற்றி பெறச் செய்கின்றனர்.

அதுவே, கட்சிக்கு எதிரான அலை வீசும் பொழுது, நன்கு அறிமுகமான வேட்பாளர்கள் மட்டுமின்றி சில நேரங்களில் கட்சித் தலைவர்களே கூடத் தேர்தலில் தோல்வியைத் தழுவுகின்றனர்.

6. அதிகார மையமும் உட்கட்சிப் பிரச்சனைகளும்: அதிகார மையம் மற்றும் உட்கட்சிப் பிரச்சனைகள் ஒரு கட்சியின் வெற்றிக்குக் கடும் பாதகமாக அமைவதையும், அல்லது அது மற்றோர் அணியின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய பிரச்சனைகளால் அதிமுகவே அதிகம் பாதிப்படைந்துள்ளது. "தனக்கான தலைவரைக் காலமே தேர்ந்தெடுத்துத் தகவமைத்துவிடும்" என்ற போக்கு அதிமுகவில் நிலவுவதால் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது.

அதே சமயம், திமுகவைப் பொறுத்தவரை ஆட்சி, அதிகாரம் மற்றும் கட்சிப் பொறுப்புகளில் ஒரு குடும்பம் சார்ந்த நபர்களே ஆக்கிரமித்து இருப்பதால், உட்கட்சிப் பிரச்சனைகள் கீழ்மட்ட அளவிலேயே முடிந்துவிடுகின்றன. தலைமைத்துவத்தில் குழப்பம் இல்லாததால் பெரிய அளவிலான பிளவுகள் தவிர்க்கப்படுகின்றன.

7. தேசியக் கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் அரசியல் வியூகங்கள்: 

தேசியக் கட்சிகளின் அணுகுமுறை: தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் எப்பொழுதுமே மாநிலக் கட்சிகளைப் பயன்படுத்தித் தங்களை வளர்த்துக்கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன. அதோடு மத்தியில் அதிகாரத்தில் உள்ளபோது தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாநிலக் கட்சிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அவை முயல்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக): திமுக எப்பொழுதுமே வலுவான உட்கட்டமைப்பு, மேடைப் பேச்சுகள் மற்றும் பிரச்சாரங்கள் வழியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவு, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை முன்னிறுத்துவதோடு, மிகவும் வலுவான கூட்டணிக் கட்டமைப்பை அமைப்பதன் வாயிலாகத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த எல்லை வரை செல்ல வேண்டுமோ, அந்த உத்திகளைக் கையாளுவதற்கு திமுக என்றும் தயங்கியதில்லை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக): அதிமுகவும் திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்ட கட்சி என்றாலும் கூட, திமுக பின்பற்றக்கூடிய சில அடிப்படைக் கொள்கைகளை (உதாரணத்திற்கு: கடவுள் மறுப்பு, சமூக நீதி, தமிழினக் காவலன் போன்றவை) அரசியலுக்காகத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்காமல், மக்களை நோக்கியே நேரடியாகப் பயணிக்கும் ஆற்றல் கொண்ட இயக்கமாக இருந்து வருகிறது. இதனால்தான், பல தேர்தல்களில் கடும் சவால்களைச் சந்தித்த போதிலும், மிகப்பெரிய சரிவைச் சந்திக்காமல் இன்றும் ஒரு வலிமையான இயக்கமாகப் பயணித்துக் கொண்டுள்ளது.

8.இதரக் கட்சிகளின் நிலை: சாதியப் பின்புலம் கொண்ட கட்சிகளும், சினிமா நடிகர்கள் ஆரம்பித்த பல கட்சிகளும் காலச் சூழ்நிலைக்கு ஏற்பவும், தங்களது அரசியல் ஆதாயத்திற்கு ஏற்பவும் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து, சொற்பத் தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றன அல்லது காற்றில் கரைந்து போகின்றன.

சரி, ஒவ்வொரு கட்சியின் தற்போதைய சூழல், அவற்றின் வியூகங்கள் மற்றும் சாதக பாதகங்களைப் பற்றி விரிவாக அலசலாம்

 திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக): வியூகங்களும் செயல்பாடுகளும்

நாம் அனைவரும் அறிந்தபடி 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் இருந்து வருகின்றது. எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுகவைத் தோற்றுவித்த பிறகு திமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டும் முனைப்பில் தற்போதைய திமுக அரசு உள்ளது. இதற்காக ஆளுங்கட்சிக்குரிய அதிகார பலத்துடனும், மிக வலுவாக இயங்கக்கூடிய தேர்தல் பிரச்சார வியூகக் குழுக்களுடனும் திமுக களம் கண்டுள்ளது.

திட்டமிடலும் தேர்தல் வியூகங்களும்: 

அரசியல் செய்வதில் தங்களுக்கு இணை யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 2021-லேயே 2026 தேர்தலுக்கான ஆயத்தங்களை திமுக தொடங்கிவிட்டது. பல்வேறு தேர்தல் நிபுணர்களின் ஆலோசனையின்படி, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மகளிர் ஆதரவையும், புதிய வாக்காளர்களான இளைய தலைமுறையினரின் வாக்குகளையும் கவரப் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதி உதவி, மற்றும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் இளையோர் மற்றும் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்தே செயல்படுத்தப்படுகின்றன.

ஆட்சி முறையும் விளம்பர அரசியலும்: ஒரு அரசு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசுகள் ஆட்சியில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. இதில் இப்போதைய திமுக அரசு "முனைவர் பட்டம்" (PhD) பெற்றுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி, முதலமைச்சரின் சிகை அலங்காரம், விளம்பர யுத்திகள், மாநில மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும் வகையில் நடத்துவது வரை அனைத்தும் மிக நுட்பமாகத் திட்டமிடப்படுகின்றன. ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தைத் திசை திருப்புவது எப்படி, எந்த அதிகாரிகளை உடன் வைத்திருக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் தீர்மானிக்கப் பெரும் ஊதியம் கொடுத்துப் பல குழுக்களைத் திமுக வைத்துள்ளது.

மக்களுக்கான எச்சரிக்கை: கட்சியும் ஆட்சியும் மக்களுக்காக இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, கட்சியும் ஆட்சியும் நிலைத்திருக்க மக்களை வைத்து எவ்வாறு அரசியல் செய்வது என்ற நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இது ஒரு நீண்டகால அழிவு நிலைக்கு வழிவகுக்கும்.

இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்: இணையத்திலும் அலைபேசியிலும் நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகள், வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே உண்மை என நம்பிவிடாதீர்கள். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதனைத் தீர ஆராய்ந்து, சுயமாக முடிவெடுக்கப் பழகுங்கள். யார் மக்களுக்காக உண்மையாகச் செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அடிப்படை அரசியல் புரிதல் மிகவும் இன்றியமையாதது.

இவ்வாறாக, திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காகச் செயல்படுத்திய திட்டங்களின் வாயிலாகவும், பாரம்பரியமாகத் தங்களுக்கு வாக்களிப்பவர்களைச் சோர்வடைய விடாமல் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டங்களை நடத்திய நம்பிக்கையிலும் களமிறங்குகிறது. "தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றே தீர வேண்டும்" என்ற நோக்கில், பல இடர்பாடுகளைக் கடந்து ஒரு வலுவான கூட்டணியைக் கட்டமைத்து விட்டோம் என்ற நம்பிக்கையுடன் திமுக களம் காண்கிறது.

திமுக-விற்கான சாதகமான அம்சங்கள்:

வலுவான கூட்டணிக் கட்டமைப்பு: "கூட்டணிதான் நமக்கு எப்பொழுதும் பலம்" என்பதை உறுதிபட நம்பும் திமுக, பல சமரசங்களைச் செய்தாவது ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் தோல்வியைச் சந்திக்கக் கூடாது என்ற கணக்கில், தேமுதிக அணியையும், அதிருப்தியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.-க்களையும் கட்சிக்குள் வரவழைத்துள்ளது. "அனைவரும் திமுக பக்கமே இருக்கின்றனர்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது, ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததற்கு இணையான ஒரு அரசியல் நகர்வாகும்.

மத்திய அரசு மீதான விமர்சனமும் மடைமாற்றமும்: எப்பொழுது எது நடந்தாலும் நேரடியாக மத்திய பாஜக அரசைச் சாடும் போக்கு, திமுக அரசின் மீதான அதிருப்தியை மக்களிடம் வெகுவாகக் குறைக்கின்றது. இதனை நன்கு உணர்ந்த திமுக, மத்திய அரசு கொண்டு வந்த "தொகுதி மறுவரையறை மசோதாவை" எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அரசியல் ரீதியாக, இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதி திமுக கொண்டாடித் தீர்த்துவிட்டது.

வாக்குகளாக மாறக்கூடிய திட்டங்கள்: மகளிர் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், தேர்தலின் போது சாதகமான வாக்குகளாக மாறும் என திமுக பெரிதும் நம்புகிறது.

ஒருங்கிணைந்த அதிகார மையம்: மு.. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் எனப் பல அதிகார மையங்களின் கீழ் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் கட்டுக்கோப்பாகச் செயல்படும் தன்மை, திமுக தலைமைக்கு ஒரு பெரிய பலமாக அறியப்படுகிறது.

ஊடகங்களின் ஆதரவு: திமுக-விற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது ஊடகங்களின் ஒரு சார்பு நிலைப்பாடுதான். "நடுநிலையாகச் செய்திகளைத் தருவதே மாண்பு" என்பதைத் தாண்டி, ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதையே பெரும்பாலான ஊடகங்கள் இன்று பின்பற்றுகின்றன. இந்த ஊடகப் பலம் திமுக-விற்கு மிகப்பெரிய சாதகமாக அமைகிறது.

வலிமையான தேர்தல் குழு மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி: திமுக-விற்காகப் பணியாற்றும் தேர்தல் வியூகக் குழு மிகவும் வலிமையாக உள்ளது. கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த முறையும் திமுக-வை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. திமுக-வின் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Wing) எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குவது கூடுதல் பலமாகும். (சமூக வலைதளங்களில் அவர்கள் பரப்பும் கருத்துக்கள் ஆரோக்கியமானவையா அல்லது தரம் தாழ்ந்தவையா என்பது தனி விவாதம்).

பணபலம்: கடைசி நேரப் பணப்பட்டுவாடாவைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான முறையான கட்டமைப்பு மற்றும் பணபலம்.

திமுக-விற்கான பாதகமான அம்சங்கள்

திமுக-விற்குச் சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும், தேர்தல் களத்தில் அவர்களுக்குச் சவாலாக அமையக்கூடிய சில பாதகமான காரணிகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. 

ஊழல் குற்றச்சாட்டுகள்: வழக்கமாக திமுக அரசு மீது முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் இம்முறையும் தொடர்கின்றன. இது மக்கள் மத்தியில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வாரிசு அரசியல் விமர்சனம்: குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் எப்பொழுதும் போலத் தொடர்வது எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக அமைந்துள்ளது. இது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கலாம்.

பாதுகாப்பு குறித்த அச்சம்: பொதுமக்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போதைய ஆட்சியில் வலுப்பெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பான விவாதங்கள் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்.

கடன் சுமை: கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கிய கடன் தொகை மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. இது ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியாக மாறக்கூடும்.

வரி உயர்வு: மின்சாரம், நீர், நிலம் மற்றும் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுகள் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

கூட்டணி வாக்குகள் இடமாற்றம் (Vote Transfer): திமுகவின் கூட்டணி கட்சிகளுடைய வாக்குகள் திமுகவிற்கும், அதேபோல் திமுகவினரின் வாக்குகள் கூட்டணி கட்சிகளுக்கும் முழுமையாகச் சென்றடையுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. வாக்குகள் சிதறும்பட்சத்தில் அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கலாம்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக): மீண்டெழுமா இயக்கம்?

அதிமுக கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கம் என்ற முறையில், தங்களுக்குக் கட்டமைப்பு ரீதியாக இருக்கும் பலத்தைத் தாண்டி, இந்த முறை திமுக அரசின் மீதான மக்களின் கோபமும், அதன் வெளிப்பாடாகக் கிடைக்கக்கூடிய ஆட்சி எதிர்ப்பு வாக்குகளும்' (Anti-incumbency) தங்களை உறுதியாக வெற்றி பெற வைக்கும் என அதிமுக நம்புகின்றது.

கடந்த 2021 தேர்தலில் தவறிய வலுவான கூட்டணியை இம்முறை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு மிகப்பெரிய நம்பிக்கையோடு அதிமுக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், எப்படியும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் கண்கூடாகத் தெரிகிறது.

சவால்களும் ஒருங்கிணைப்பும்: 2021 சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளைப் பெற்று ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருந்தாலும், அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக தனது வாக்கு வங்கியைச் சற்றே இழந்தது. ஒருகட்டத்தில் அந்த வாக்குகள் பாஜக-விற்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், மீண்டும் பல முயற்சிகளை எடுத்து அதிமுக தனது செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொண்டது.

அதே சமயம், 2021 தேர்தலில் அதிமுக-வின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்த டி.டி.வி தினகரன் அவர்களை இம்முறை கூட்டணியில் சேர்த்துக் கொண்டும், பாஜக-வை மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொண்டும் திமுக-விற்குப் பலமான போட்டியைத் தரும் அளவிற்கு அதிமுக தற்போது நிலைபெற்றுள்ளது.

அதிமுக-வின் அணுகுமுறை: "திமுக-விற்கு மாற்று அதிமுக-தான்" என்ற பிம்பத்தையும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் தங்களுக்குத்தான் வரும் என்ற நம்பிக்கையையும் அதிமுக மிகச் சரியாகப் பயன்படுத்தி வருகிறது. இத்தேர்தலை மிகவும் முதிர்ச்சியுடன் அணுகும் அதிமுக, அனைத்துத் தொகுதிகளிலும் மக்களுக்குத் தெரிந்த முகங்களையும், கட்சிக்கு நெடுங்காலமாக உழைக்கக்கூடிய விசுவாசிகளையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

அதிமுக-விற்கான சாதகமான அம்சங்கள்

மறையாத ஆளுமைகளின் செல்வாக்கு: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகழையும், அவர்கள் மக்கள் மனதில் விட்டுச் சென்ற செல்வாக்கையும் அதிமுக இன்றும் ஒரு மிகப்பெரிய பலமாகச் சுமந்து வருகின்றது.

கட்டுக்கோப்பான தலைமை: பல பிளவுகளையும், சோதனைகளையும் கடந்த பிறகு, கட்சி தற்போது ஒருமித்தக் கருத்துடன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஓரணியில் இருப்பது தொண்டர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நிலையான வாக்கு வங்கி: அதிமுக-விற்கென்று எப்போதும் இருக்கக்கூடிய பாரம்பரிய மக்கள் ஆதரவை இம்முறையும் முழுமையாகப் பெற அக்கட்சி எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்கக் கூடும்.

ஆட்சி குறித்த நற்பெயர்: எடப்பாடி பழனிசாமி அவர்களின் முந்தைய ஆட்சிக்காலம் ஒரு நல்லாட்சியாகவே இருந்தது என நடுநிலை வாக்காளர்கள் ஒருசாரார் கருதுவது அவர்களுக்குச் சாதகமான அம்சமாகும்.

வலிமையான தேர்தல் அறிக்கை: அதிமுக வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமபலமான கூட்டணி: திமுக-விற்குக் குறையாத வகையில் ஒரு வலுவான கூட்டணிக் கட்டமைப்பை இம்முறை அதிமுக அமைத்திருப்பது களத்தில் அவர்களுக்குச் சமபலத்தைத் தருகின்றது.

எதார்த்தமான பிரச்சாரம்: வெகுஜன மக்களை எளிதில் சென்றடையக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களின் எளிமையான மற்றும் நேரடியான பிரச்சார முறை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிமுக-விற்கான பாதகமான அம்சங்கள்

கூட்டணி மீதான அதிருப்தி: பாஜக மீதான சில அதிருப்தி நிலைகள், கூட்டணியில் இருப்பதன் காரணமாக அதிமுக-விற்கும் சிறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வாக்குறுதிகள் சென்றடையாத நிலை: "ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்" என்ற அதிமுகவின் முக்கியத் தேர்தல் அறிக்கை, அனைத்துத் தரப்பு மக்களையும் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. (திமுகவின் டோக்கன் முறை மக்களிடம் சென்றடைந்த அளவிற்கு இது சென்றடையவில்லை என்பது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது).

குறைவான ஊடக வெளிச்சம்: ஆளுங்கட்சியுடன் ஒப்பிடும்போது, அதிமுக-வின் செய்திகளும் பிரச்சாரங்களும் ஊடகங்களில் போதிய அளவிற்கு முன்னிலைப்படுத்தப்படாமல் இருப்பது ஒரு பின்னடைவாகும்.

எதிர்மறை கருத்துக்கணிப்புகள்: பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக-விற்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிப்பது, அதிமுக தொண்டர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பரந்துபட்ட பிரச்சார ஆளுமைகள்: முதலமைச்சர் வேட்பாளரைத் தாண்டி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து மக்களைக் கவரக்கூடிய இரண்டாம் கட்டப் பெரிய தலைவர்கள் குறைவாக இருப்பது ஒரு பாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

 தமிழக வெற்றிக் கழகம்: 2026-ன் திருப்புமுனையா ?

இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, 2026 தேர்தலை ஒரு சுவாரசியமான போர்க்களமாக மாற்றிய பெருமை நடிகர் விஜய் அவர்களையே சாரும். இத்தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் போட்டியிடும் விஜய், திமுகவை மிகக் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளையும், அதிமுகவை அதிகம் விமர்சிக்காமல் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தனது முன்மாதிரிகளாகக் குறிப்பிடுவதன் மூலம் அதிமுகவினரின் வாக்குகளையும் பெற முடியும் என நம்புகின்றார். இதன் மூலம் 2026 முதல்வர் போட்டியில் தன்னையும் ஒரு வலுவான வேட்பாளராக அவர் முன்னிறுத்தியுள்ளார்.

உண்மையில், 2026-ஆம் ஆண்டிற்கான தேர்தல் முடிவுகள் இவரைச் சுற்றியே சுழலும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த 10, 15 வருடங்களாகவே அரசியலில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் காட்டி வந்த விஜய், தனது திரைப்படங்களின் வாயிலாக அரசியல் குறியீடுகளை வெளிப்படுத்தத் தவறியதில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிட்டுப் பலர் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதன் நீட்சியாக, இம்முறை "வெற்றி" என்ற ஒரே இலக்குடன், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்ற அதிரடி முடிவுடன் விஜய் களம் காண்கிறார்.

அரசியல் செயல்பாடுகளும் விமர்சனங்களும்: தனது ரசிகர்களுக்கு எத்தகைய அரசியல் வழிமுறைகளையும் மாண்புகளையும் அவர் போதிக்கிறார் என்று பார்த்தால், அதற்கான தெளிவான அறிவுரைகள் இன்னும் தென்படவில்லை. இதுவரை அவர் முன்னெடுத்து வரும் அரசியல் என்பது ஒருவிதச் சினிமா பாணியிலான கவர்ச்சிகரமான செயல்பாடுகளாகவே தெரிகிறது. அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அது அவரைப் பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை.

ஏனெனில், புதியதாகக் களத்திற்கு வருபவர்களுக்கு இருக்கும் அந்த "ஆரம்பகாலச் சாதகமான அம்சம்" விஜய்க்கும் உள்ளது. அதிலும் குறிப்பாக, அவர் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திர அந்தஸ்தில் இருப்பதால், இயல்பாகவே பெரும்பாலான மக்களைக் கவரக்கூடிய சூழல் நிலவுகிறது. இது சரியா தவறா அல்லது நியாயமா அநியாயமா என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, வெற்றிக்குத் தேவையான வெகுஜன வாக்குகளைக் கவர்வதற்கு விஜய்யின் முகமே பிரதான மூலதனமாக அமைந்துள்ளது.

எதிர்காலம் சொல்லும் உண்மை: இருப்பினும், அவரது உண்மையான அரசியல் நிலைப்பாடு மற்றும் கொள்கை உறுதிப்பாடு ஆகியவை பற்றித் தெரிய இன்னும் சில காலம் பிடிக்கும். இந்தத் தேர்தல் முடிந்த பிறகே விஜய் அவர்களின் அரசியல் தெளிவு மற்றும் நிலைத்தன்மை பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். அதுவரை விஜய் அவர்களும் சரி, அவரை நம்பி வந்தவர்களும் சரி, அவருக்கு விழப்போகும் வாக்குகளும் சரி... மே 4-ஆம் தேதி வரை ஒரு புரியாத புதிராகவே நீடிக்கும்.

தமிழக வெற்றிக் கழகம் (விஜய்): சாதகமான அம்சங்கள்

இளம் வாக்காளர்களின் ஆதரவு: 90 சதவீதத்திற்கும் மேலான முதல் தலைமுறை வாக்காளர்கள் (First-time voters) விஜய்க்கு வாக்களிக்க விருப்பம் காட்டுவது அவருக்கு ஒரு மிகப்பெரிய பலமாகும்.

மாற்றத்தை விரும்பும் வாக்குகள்: ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி வாக்களித்துச் சலித்துப் போனவர்களின் வாக்குகள், இம்முறை ஒரு மாற்றத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் திரும்ப வாய்ப்புள்ளது.

பெண் வாக்காளர்கள்: கணிசமான பெண் வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு வர இருப்பது, தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சிறுபான்மையினரின் ஆதரவு: சிறுபான்மையினர், குறிப்பாகத் தலித், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகளைக் கவர்வது விஜய்யின் முக்கிய வியூகமாக உள்ளது.

அடித்தட்டு மக்களின் விருப்பம்: அன்றாடக் கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்களின் ஒரு விருப்பமான தேர்வாக விஜய் உருவெடுத்துள்ளார்.

குடும்பங்களைச் சென்றடைதல்: விஜய்யை விரும்பக்கூடிய சிறுவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வழியாக, அவர்களது பெற்றோர்களிடமும் விஜய் எளிதாகச் சென்றடைகின்றார்.

சமூக வலைதளப் பலம்: சமூக வலைதளங்களில் விஜய்க்கு இருக்கும் மாபெரும் ஆதரவு, அவரது கருத்துக்களை மிக வேகமாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

தொண்டர்களுக்கான உற்சாகம்: தனது வழக்கமான 'பஞ்ச்' வசனங்கள் மற்றும் 'ரோடு ஷோ' (Road Show) மூலமாகத் தன்னைப் பின்பற்றுபவர்களுக்குத் தேவையான உற்சாகத்தை விஜய் மிகச் சரியாகக் கடத்துகின்றார்.

தமிழக வெற்றிக் கழகம் (விஜய்): பாதகமான அம்சங்கள்

முக்கிய நிகழ்வுகளில் அணுகுமுறை: கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைப் போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களைச் சரியாகக் கையாளாமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிரச்சாரத் தீவிரம்: மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது, களத்தில் இறங்கித் தீவிரமான பிரச்சாரத்தில் இன்னும் முழுமையாக ஈடுபடாமல் இருப்பது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்களின் அறிமுகமின்மை: தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மக்களிடத்தில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத முகங்களாக இருப்பது வெற்றிக்குச் சவாலாக அமையலாம்.

கிராமப்புறச் சென்றடைதல்: கட்சியின் பெயரும் அதன் சின்னமும் இன்னும் கிராமப்புறங்களின் மூலை முடுக்குகளுக்குச் சரியாகச் சென்றடையவில்லை என்பது ஒரு பின்னடைவாகும்.

நாம் தமிழர் கட்சி: கொள்கை உறுதியும் சவால்களும்

இறுதியாக, கடந்த பல வருடங்களாக யாருடனும் கூட்டணி வைக்காமல், தான் கொண்ட கொள்கையில் மட்டும் உறுதியாகக் களமாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இந்த முறையும் தனித்தே தேர்தலைச் சந்திக்கின்றார். திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக மட்டுமல்லாமல், ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்துவதே தனது நோக்கம் எனச் சொல்லும் சீமான், வெற்றி தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து களமாடி வருகிறார்.

சாதகமான அம்சங்கள்:

கொள்கை உறுதி: வெற்றி தோல்விகளைக் கடந்தும் 'தமிழ் தேசியம்' என்ற கொள்கையில் சமரசமின்றிப் பயணிப்பது.

வாக்கு வங்கி வளர்ச்சி: ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தைச் சீராகவும் உறுதியாகவும் அதிகரித்து வருவது.

தனித்துவமான பேச்சு: ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் உரையாடி, அந்தப் பழக்கத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது.

கூட்டணி இல்லா அரசியல்: எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று போட்டியிடும் துணிச்சல்.

எழுச்சிமிகு பிரச்சாரம்: சீமான் அவர்களின் ஆவேசமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள்.

தொழில் சார்ந்த பார்வை: கவர்ச்சி அரசியல் இல்லாமல், விவசாயம் மற்றும் அடிப்படைத் தொழில்களை முன்னிறுத்திய ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைப்பது.

நேர்மை: "வாக்கிற்குப் பணம் இல்லை" என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாகப் பயணிப்பது.

பாதகமான அம்சங்கள்:

விஜய்யின் தாக்கம்: நடிகர் விஜய்யின் அரசியல் வரவு, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் (குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளில்) ஒரு சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வேட்பாளர் அறிமுகமின்மை: தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களிடத்தில் முன்கூட்டியே அறிமுகமானவர்களாக இல்லாதது ஒரு பலவீனமாகும்.

வெற்றி குறித்த சந்தேகம்: "சீமான் நன்றாகப் பேசுகிறார், செயல்படுகிறார்; ஆனால் அவர் கட்சி வெற்றி பெறாது" என்ற பொதுவான வெகுஜன மக்களின் எண்ணம், அவர்களை இக்கட்சிக்கு வாக்களிக்கத் தயங்கச் செய்கிறது.

இதரக் கட்சிகளும் கூட்டணிகளும்

இவர்கள் தவிர இன்னும் சில கூட்டணிகளும் அரசியல் களத்தில் உள்ளன. இருப்பினும், அவர்கள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடாத காரணத்தால், நாம் அவர்களைப் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு போட்டியிடக்கூடிய சில கட்சிகள், ஒரு குறிப்பிட்ட கட்சி தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அல்லது தங்களுக்குப் பெரிய கூட்டணிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காகவும், வேறு வழியில்லாமலேயே போட்டியிடுகின்றனர். எனவே, அவர்களைப் பற்றி விரிவான விவாதம் தற்போது தேவையில்லை.

2026-ஆம் ஆண்டிற்கான எனது கருத்தும் கணிப்பும்

திமுக ஆட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் 'அலை' என்று எதுவும் இல்லை என்றாலும் கூட, கணிசமான அளவில் ஆங்காங்கே அதிருப்தி இருக்கத்தான் செய்கின்றது. குறிப்பாக, அதிமுகவிற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய பெண்களின் வாக்குகள், இளைஞர்களின் வாக்குகள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளைத் தங்களின் பக்கம் கொண்டு வர, திமுக முன்னரே திட்டமிட்டுப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது. இதன் மூலமாகவே மீண்டும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், மூன்று மாதங்களுக்கு முன்பு வரை திமுக இருந்தது.

திமுக-வின் தற்காப்பு வியூகங்கள்: தேர்தல் நெருங்க நெருங்க, நிலவக்கூடிய அந்தச் சிறு அதிருப்தியின் காரணமாகத் தங்களுக்கு எவ்விதப் பாதகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் திமுக மிகத் தெளிவாக உள்ளது. இதனால் நன்கு யோசித்து, தனது கூட்டணிக் கட்டமைப்பை இன்னும் பலப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி முகாம்களில் இருந்த முக்கியப் புள்ளிகளைத் தங்கள் கட்சிக்குள் இழுத்து, அதிமுகவிலிருந்து விலகி வந்த சுமார் 20 நபர்களுக்கு இத்தேர்தலில் சீட்டும் கொடுத்துள்ளது. இதன் மூலம், "நாங்கள் மட்டும்தான் தமிழகத்தின் முதன்மை அரசியல் முகம்" என்பதை மக்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்க திமுக முயல்கிறது.

இதனை இன்னும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஒரு வலிமையான தேர்தல் பிரச்சாரக் குழு (Election Strategy Team) திமுகவிற்காகக் களத்தில் செயல்படுகிறது. கூடவே, மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதால், இம்முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்பது திமுகவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அதிமுக: மீண்டெழுவதற்கான வியூகங்களும் கூட்டணிக் கணக்குகளும்

அதிமுகவைப் பொறுத்தவரையில், பத்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகும் கூட கடந்த தேர்தலில் 75 இடங்களைப் பெற முடிந்த நம்மால், இந்த முறை எளிதாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் களம் காண்கின்றனர். "210 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்" என்ற இலக்குடன் அவர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதற்கு வலுசேர்க்கும் வகையில்தான், முந்தைய தேர்தலில் தனித்து நின்ற டி.டி.வி தினகரனை மீண்டும் கூட்டணிக்கு வரவழைத்து, பாமக மற்றும் பாஜகவுடன் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அதிமுக கட்டமைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், திமுகவிற்கு எதிராகப் பெரிய அளவிலான மக்கள் எதிர்ப்பைக் கட்டமைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அதிமுகவிற்கு, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. விஜய் களத்திற்கு வந்த பின்னரே, திமுக அரசு மீதான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இன்னும் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலை அதிமுக எந்த அளவிற்குத் தனக்குச் சாதகமாக அறுவடை செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம்: விஜய்யின் 'நேரடிப் போட்டி' வியூகம்

"இந்த முறை போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையில் தான்; ஒன்று தீய சக்தியான திமுக, இன்னொன்று தூய சக்தியான தமிழக வெற்றிக் கழகம்" என்று எங்கு சென்றாலும் மறக்காமல் கூறி வரும் விஜய், ஒரு தெளிவான வியூகத்துடன் செயல்படுகிறார். அவர் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளையும், அதிமுகவின் பாரம்பரிய ஆதரவு வாக்குகளையும் ஒருசேரக் குறிவைத்துத் தனது காய்களை நகர்த்துகிறார். "உறுதியாக முதலமைச்சர் ஆவோம்" என்ற அதீத நம்பிக்கையுடன் அவர் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டுகிறார்.

நாம் தமிழர் கட்சி: கொள்கை வழிப் பயணம்

"வென்றால் வெற்றி, தோற்றால் அது ஒரு பயிற்சி. கொள்கையும் கோட்பாடுமே எமக்கு முதன்மை" என்று முழங்கி, இம்முறையும் எவ்விதக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிடுகிறார் சீமான். மற்ற கட்சிகள் அதிகாரத்தைக் குறிவைத்து நகரும் வேளையில், தனது இலட்சியப் பாதையில் எவ்வித சமரசமும் இன்றி அவர் தொடர்ந்து களமாடி வருகிறார்.

கட்சிகள் இவ்வாறு நினைக்க, இத்தேர்தல் களம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும், வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் காரணிகளையும் பின்வருமாறு காணலாம்.

கூட்டணிக் கணக்குகளும் பிரச்சார வியூகங்களும்கூட்டணி அமைப்பைப் பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே தங்களது அளவில் சமபலத்துடன் போட்டியளிக்கக்கூடிய கூட்டணிகளை அமைத்துள்ளன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை மடைமாற்றுவதற்கும், தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்வதற்கும் இரண்டு முகாம்களிலும் வலிமையான பிரச்சாரங்களும் விளம்பரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தல் இது என்பதால், வேட்பாளர் தேர்வில் அவர் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

கருத்துக்கணிப்புகளும் அவற்றின் நம்பகத்தன்மையும்: தேர்தல் சமயத்தில் வெளிவரும் பல கருத்துக்கணிப்புகளின் உண்மைத்தன்மை இன்று கேள்விக்குறியாக்கப்படுகிறது. நிதி ஆதாயங்களுக்காகச் சில நிறுவனங்கள் செய்யும் சமரசங்கள், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இத்தகைய கணிப்புகளை உண்மை என நம்பி மக்கள் வாக்களிக்கும் போக்கு நிலவுவதால், அரசியல் கட்சிகள் இதையும் ஒரு வியூகமாகவே பயன்படுத்துகின்றன. இதில் வழக்கம்போல திமுகவே முந்துகின்றனர். நகர்ப்புற வாழ்க்கையை சுற்றி செயல்படும் ஊடகங்கள் திமுகவின் சார்பு நிலைப்பாடு எடுப்பது சிறு சதவிகிதமேனும் திமுகவிற்க்கே சாதகமாக அமைகிறது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்பது போலத்தான் இதுவும். 

மண்டல வாரியான செல்வாக்கு: திமுக மற்றும் அதிமுகவிற்கு அடிப்படை வாக்கு வங்கி வலுவாக உள்ள இடங்களில் அந்தந்தக் கட்சிகளே வெற்றி பெற வாய்ப்புள்ளது.

  • திமுக: சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனக்கிருக்கும் செல்வாக்கைத் தக்கவைக்க முயல்கிறது.
  • அதிமுக: வடமண்டலம் மற்றும் கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்கக் காத்திருக்கிறது.

பெரிய வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு இந்த முறையும் பெரிய பாதிப்பு இருக்காது என்றே தோன்றுகிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய காரணி - விஜய்:
த.வெ.க-வின் வாக்கு சதவீதமும் அதன் அரசியல் விளைவுகளும்:

இந்தத் தேர்தலின் உண்மையான 'கேம் சேஞ்சர்' (Game Changer) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்தான். நடுநிலை வாக்காளர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருப்பவர்களின் வாக்குகளை விஜய் எந்த அளவிற்குப் பிரிக்கிறார் என்பதைப் பொறுத்தே திமுக அல்லது அதிமுகவின் வெற்றி அமையும்.

விஜய் அவர்களின் கட்சியின் தாக்கம், அவர் பெறும் வாக்கு சதவீதத்தைப் பொறுத்து தமிழக அரசியலின் போக்கையே மாற்றக்கூடும். எனது கணிப்பின்படி அதை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறேன்.

நிலை 1: 8% வரையிலான வாக்குகள் (திமுகவிற்கு சாதகமான சூழல்)

தாக்கம்: சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த முறை பெற்ற 8% வாக்குகளில் 2-3% விஜய்க்குச் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளில் ஒரு பகுதியை அவர் பெறுவார்.

விளைவு: புதிதாகப் போட்டியிடும் ஒரு கட்சிக்குக் கிடைக்கும் இந்த இயல்பான 8% வாக்குகள், பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளையே சிதறடிக்கும். இதனால் வாக்குகள் பலமுனைகளாகப் பிரிந்து, திமுக அணிக்குக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எளிதான வெற்றியைத் தேடித்தரும். இது ஆளுங்கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நிலை 2: 8% முதல் 12% வரையிலான வாக்குகள் (அதிமுகவிற்கு சாதகமான சூழல்)

தாக்கம்: இந்த நிலையில், இளைஞர்கள் மட்டுமின்றி நகரங்களில் வாழும் மக்கள் (குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்கள்) மற்றும் பெண்களின் வாக்குகள் கணிசமாக விஜய்க்கு மாறக்கூடும்.

விளைவு: இந்த வாக்கு அதிகரிப்பு என்பது திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு சிறு விரிசலை ஏற்படுத்தும். கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், திமுக பெற வேண்டிய வாக்குகளை விஜய் பிரிப்பதன் மூலம், அதிமுக கூட்டணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளைக் கைப்பற்ற உதவும்.

நிலை 3: 15% மற்றும் அதற்கு மேல் - "விசில் சத்தம்" (அதிமுகவின் பெரும் வெற்றி)

தாக்கம்: அனைத்துத் தொகுதிகளிலும் விஜய்யின் தாக்கம் வலுவாக இருந்து, அவர் 15% வாக்குகள் வரை பெற்றால், அது ஒரு பெரிய அரசியல் அலையாக மாறும்.

விளைவு: இந்தச் சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலின் வாக்கு வங்கிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக, ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள். இதனால் வாக்குகள் மிக அதிகளவில் சிதறி, அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் பெரும் வாய்ப்பாக அமையும்.

ஆய்வை முன்னிலைப்படுத்தும் எனது கணிப்பு : (வரலாற்றுத் தரவுகள் மற்றும் தொகுதி வாரியான கள நிலவரங்களின் துல்லியமான அலசல் )

எனது இந்தக் கணிப்பு என்பது மேலோட்டமான ஒன்றல்ல. ஒவ்வொரு தொகுதியின் வரலாற்றுப் பின்னணி, அங்கு செல்வாக்குமிக்க கட்சிகள் மற்றும் அவற்றின் தொடர்ச்சியான வாக்கு வங்கி ஆகியவற்றை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன்.

குறிப்பாக, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியின் அரசியல் களம் எவ்வாறு மாறுகிறது, வேட்பாளர்களின் பலம், கடந்த இரு தேர்தல்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தின் ஏற்றத்தாழ்வுகள் போன்ற காரணிகளை இதில் கணக்கில் கொண்டுள்ளேன். மேலும், திமுக - அதிமுக நேரடிப் போட்டியா அல்லது பலமுனைப் போட்டியா என்பதையும், அந்தந்த தொகுதிகளின் புவியியல் சூழலை (கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்குகள்) கருத்தில் கொண்டும் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன், நடிகர் விஜய் அவர்கள் பிரிக்கக்கூடிய வாக்குகளின் தாக்கம் மற்றும் தற்போதைய கள நிலவரம் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு மற்றும் இழுபறி நிலை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்ட பின்னரே இந்தத் துல்லியமான எண்ணிக்கையை வழங்கியுள்ளேன். 

உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் எனது கணிப்புகளையும், அந்தத் தரவுகளின் பின்னணியில் உள்ள விரிவான ஆய்வுகளையும் நீங்கள் காணலாம்...




இவ்வாறாக, அனைத்துத் தொகுதிகளையும் விரிவாக ஆராயும்போது, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு 'உறுதியான வெற்றி' அல்லது 'இழுபறியில் சாதகமான' இடங்கள் எவை என்பது இத்தகைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

தொகுதி வகைப்பாடு

திமுக (DMK)

அதிமுக (ADMK)

உறுதியான வெற்றி (Sure Victory)

92

63

சாதகமான தொகுதிகள் (Edge)

24

55







இந்த கணக்கில் விஜய் இவ்வளவு சதவிகிதம் வாங்கினால் என்ன தாக்கம் ஏற்படும் என்பதை பொருத்தி எனது இறுதி கணிப்பு பின்வருமாறு அமைகிறது.

2026 தேர்தல்: எனது துல்லியமான கணிப்பு

எனது தற்போதைய கள நிலவரக் கணிப்பின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 128 தொகுதிகளையும் திமுக 105 தொகுதிகளையும், தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. கடந்த முறையை விட இம்முறை மிகத் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தோராயமான வரம்புகள் ஏதுமின்றி நேரடி எண்ணிக்கையாக இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

2026 Tamilnadu Legislative Assembly Election
2026 தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தல்

உங்களது மேலான கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பகுதியில் எழுதுங்கள்.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பிற்கு நீங்கள் பதிலளிக்க விரும்பினால், உங்களை வரவேற்கிறோம்..


3 comments:

  1. Great Analysis. Much needed. Good post. My wishes to your prediction become true.

    ReplyDelete
  2. Ungal kanipu thappu ayyaa, tvk thaan win pannum,

    ReplyDelete
  3. Nalla blog post aana TVK oda thaakam athigamagathaa irukku nu naa nenaikuren

    ReplyDelete