Sunday, April 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 2

 வணக்கம் !!

ஒவ்வொரு கூட்டணிக்கான பலம் பலவீனங்களை பார்த்துவிட்டு இறுதியாக கருத்துக்கணிப்பின் முடிவுகளை பார்க்கலாம். 


இந்தியா கூட்டணி 

பலம் 

* இந்தியா கூட்டணி என்ற பெயரில் பாஜகவை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கூட்டணி கடந்த இரண்டு தேர்தல்களை விடவும் பாஜகவிற்கு கடும் போட்டியாக அமைவதால் பலம்.

* தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்தது. 

* கடந்த முறை அமைத்த அதே கூட்டணியை தொடர்வது.

* திமுகவிற்கான கட்டமைப்பு பலம், ஆட்சி பலம்.

* ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என அதிகார மையங்களின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வது, பிரச்சார திட்டமிடல்.

* தொகுதிகளில் அமைச்சராக உள்ள (அ) முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுவதால் அந்த தொகுதியை மட்டும் குறி வைத்து வேலை செய்யும் தலைவர்கள். 

* பத்தாண்டுகால ஆட்சிக்கு இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும் பொருட்டு திமுக மத்திய அரசை கடுமையாக எதிர்ப்பது.

* பாஜக எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி கமலின் மக்கள் நீதி மையம் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது.

* வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து அளித்திருப்பது. 

* அச்சு ஊடக, காட்சி ஊடக, இணைய ஊடகத்தில் விளம்பரம் செய்வதில் முன்னிலை பெறுவது.   

* பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை முன்னிலைப்படுத்தி ஓட்டு கேட்பது.

*சென்னையை உள்ளடக்கிய மத்திய மண்டலம்  வழக்கம்போலவும், கூடவே தென் மண்டலமும் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது. 

பலவீனம் 

* வாரிசு அரசியல், ஊழல் கட்சி என திமுக மீது வைக்கப்படும் விமர்சனம்.

* கடந்த முறை வெற்றி பெற்ற எம்.பிக்களால் உபயோகம் இல்லாமல் போனது.

* பெரும்பாலான எம்.பிக்கள் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தது. 

* எப்படி இருந்தாலும் மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என நம்பப்படுவதால் பாதகமாக அமைவது.

* பெண்களுக்கான திட்டங்கள் பல அனைவரிடத்திலும் சென்று சேராமல் இருப்பது.

* போன முறை ஆட்சிக்கு வருவதற்கு திமுக கையிலெடுத்த "நீட் ரகசியம்" ,"எய்ம்ஸ் மருத்துவமனை" இம்முறை அவர்களுக்கு எதிராக திரும்பியிருப்பது. 

* சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகள். (திருச்சியில் மதிமுகவின் துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் & நாமக்கல்லில் எதிர்ப்பு காரணமாக வேட்பாளரை மாற்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)

*கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பல நிறைவேற்றப்படாமல் இருப்பது.

அதிமுக கூட்டணி 

பலம் 

* கட்சி ரீதியான கட்டமைப்பு பலம். 

* அதிமுகவை கபளீகரம் செய்யும் முனைப்பில் இருந்த பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியது. 

* பாஜக பிரிவுக்கு பின் தலைமையின் தொடர் பிரச்சாரத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்திருப்பது.

* கூட்டணியில் உள்ள தேமுதிக விஜய்காந்த் மறைவிற்கு பின் எழுச்சியுடன் களம் காண்பது.

* கூட்டணியில் பாஜக இல்லாததால் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவது.

* 2019 இல் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளால் சிதறிப்போன வாக்குகள் மீண்டும் வர ஆரம்பித்திருப்பது.

* முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்பட்டு விளம்பரத்தில் முந்துவது

* புள்ளி விவரத்துடனும், திமுகவுக்கு ஆதாரத்துடன் காணொளி வாயிலாக தக்க பதிலடியும் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், இது ரொம்ப புதுசா இருக்கே என்ற வகையில் அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேடை பிரச்சாரத்தில் முன்பை விட முன்னேறி வருவது.   

* ஆதரவுக்கரம் நீட்டும் கொங்கு மண்டலம். 

பலவீனம் 

* நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லாதது 

* பாமக, தமாகா உட்பட சில கட்சிகளை கூட்டணிக்கும் வைக்கமுடியாமல் போனது 

* தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகள் தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என பிரிந்து செல்வது 

* முக்கிய தலைவர்கள் யாரும் இத்தேர்தலில் போட்டியிடாதது. 

* வடக்கு மண்டலத்தில் பாமக பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவிற்கு ஏற்படும் வாக்கு இழப்பு. 

* சட்ட சிக்கலை தாண்டி, கட்சி பிளவுகளை தாண்டி, அதிமுகவிற்கு நிலையான ஒரு தலைமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உருவாவதற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய காலம்.

தேசிய ஜனநாயக கூட்டணி 

பலம் 

* மோடியின் முகமும் அண்ணாமலையின் பரப்புரையும் 

* திமுகவிற்கு எதிரி நாங்கள்தான் என முன்னிறுத்துவது 

* அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என சொல்ல தொடங்கி இருப்பது (திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் தங்கள் வசம் வர)

* இறுதியாக அதிமுக, திமுக இல்லாமல் கூட்டணியை உருவாக்கி இருப்பது 

* தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடியின் தொடர் விஜயம்.

* பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் களத்தில் இருப்பது 

* இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சில தொகுதிகளை குறி வைத்து வேலை செய்வது (நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை உட்பட )

* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலமும், இந்துத்துவா அடிப்படையில் திரளும் வாக்குகளும். 

பலவீனம் 

* தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாக்கு கொண்ட கட்சிகளாக கூட்டணிக்கட்சிகள் இல்லாதது (தென் தமிழகத்தில் அமமுக, வட தமிழகத்தில் பாமக, கொங்கு பகுதியில் பாஜக, அதே போல் மற்ற கூட்டணி கட்சிகளும் ) 

* கூட்டணியில் இருக்கும் அணிகளின் வாக்குகள் அனைத்தும் ஒரு தொகுதியில் ஒருசேர திரள்வதற்கான வாய்ப்பில்லாதது. 

* பாமக வாக்குகள் இம்முறை முழுவதுமாக கூட்டணி கட்சிகளுக்கு பரிமாற்றம் அடையாமல்  இன்னும் சொல்லப்போனால் பாமாவிற்கே கிடைக்குமா என தொக்கி நிற்கும் கேள்வி ?

நாம் தமிழர் 

பலம் 

* சீமான் பேச்சும் பிரச்சாரமும் 

* கடைக்கோடி, பாமர மக்களின் ஆதரவு 

* கணிசமான முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு 

* சமூக வலைதள ஆதரவும் பிரச்சாரமும் 

* எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே களம் காண்பது.

* மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக கருதப்படுவது 

* தேர்தலுக்கு தேர்தல் பெருகி வரும் ஆதரவு 

* மக்கள் நீதி மையம் போட்டியிடாததால் அங்கிருந்து பெறப்போகும் வாக்குகள் 

* ஆண்ட கட்சிகளின் மீதான வெறுப்பை அறுவடை செய்யும் கட்சியாக இருப்பது 

பலவீனம் 

* வேட்பாளர் தேர்வு பல இடங்களில் சரியாக அமையாதது 

* இரண்டாம் கட்ட தலைவர்களோ, தொகுதியில் வலிமை பெற்ற தலைவர்களாகவோ யாரும் உருவாகாமல் இருப்பது. 

* கரும்பு விவசாயி சின்னத்தை பெற முடியாமல் போனது 

* சீமான் பேச்சை மட்டும் நம்பி இருப்பது 

* சில இடங்களில் கோபமாகி தன் நிலையிலிருந்து தவறி நடந்துகொள்ளும் கட்சித்தலைமை 

தொகுதிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும் 

39 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில் 32 தொகுதிகள் பொதுத்தொகுதியாகவும் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் போட்டியிடுவதற்கான தனித்தொகுதிகளாகவும் உள்ளன. தென்காசி, நாகப்பட்டினம், சிதம்பரம், நீலகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம்,  
திருவள்ளூர் ஆகியன தனித்தொகுதிகள் ஆகும். 


நான்குமுனை போட்டியில் யாருக்கு வெற்றி 

இத்தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சியிம்   வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும் ஒரு கட்சிக்கு ஆதரவான அலையோ எதிரான அலையோ இல்லாததாலும் போட்டி கடுமையாகவே  உள்ளது. நாம் தமிழர் கட்சி கடும் போட்டியை கொடுத்தாலும் வெற்றி பெற கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லாததால் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை மையப்படுத்தியே கணிப்பையும் செய்ய முடிகிறது. ஆளும் திமுகவை பொறுத்தவரை பெரிய புள்ளிகள் களத்தில் இருப்பதால் அவர்கள் நிற்கக்கூடிய தொகுதியில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாலும் பணம் செலவழிக்க முடியாத நிலையிலும் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது வெற்றி பெறுவதற்கு. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கடும் உழைப்பை கொடுத்தாலும் கொங்கு மண்டல பகுதிகளிலும் சில தனித்தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கே அவர்களுக்கு வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளில் நெருக்கடியை தரலாம். பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் கட்சிக்கான அடையாளத்தை தாண்டி தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை கொண்டவர்களுக்கே வெற்றி கிட்டலாம். அந்த வகையில் கோவை(அண்ணாமலை ), தருமபுரி(சௌமியா), தேனி(தினகரன்) பாஜகவிற்கு சாதகமாக இருக்கலாம். இது தவிர எல்.முருகன், வினோஜ் பி.செல்வம், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தராஜன், ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகியோர் மதிப்புக்குரிய வாக்குகள் வாங்கலாம்.

இழுபறியாகும் தொகுதிகள் 

நம் கணிப்பின்படி, 14 தொகுதிகளை தவிர மீதி உள்ள தொகுதிகளில் இழுபறி இருப்பதாகவே தெரிகிறது.  சில தொகுதிகளில் இருமுனை போட்டியாகவும் சில தொகுதிகளில் மும்முனை போட்டியாகவும் வேறு வேறு கட்சிகளுக்கு இடையிலும் அமைகிறது. அதன்படி 

8 தொகுதிகளில் திமுக(கூ) - அதிமுக(கூ) - பாஜக(கூ) 
திருநெல்வேலி, கடலூர், இராமநாதபுரம், தேனி, தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி), பெரம்பலூர் உட்பட 8 தொகுதிகளில் மூன்று கூட்டணிக்கு இடையிலும் போட்டி நிலவுகிறது.  

14 தொகுதிகளில் திமுக(கூ) -அதிமுக(கூ)
கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நாமக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆரணி, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), தருமபுரி, திண்டுக்கல் உட்பட 14 தொகுதிகளில் திமுகவுடன் மல்லுக்கட்டுகிறது அதிமுக. 

2 தொகுதிகளில் பாஜக(கூ) - அதிமுக(கூ)
கோயம்புத்தூர், தென்காசி (தனி) - இங்கு போட்டியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது திமுக.

1 தொகுதியில் பாஜக(கூ) - திமுக(கூ)
கன்னியாகுமரியில் போட்டி காங்கிரசுக்கும் பாஜவிற்கும்தான். மூன்றாவதே அதிமுக. 

கருத்துக்கணிப்பு முடிவு 

நான் இதுவரை தந்த தரவுகள் அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் பின்வருமாறு அமைகிறது என் கருத்துக்கணிப்பு. 



அதாவது ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் முழு மூச்சுடன் வேலை செய்யும் பட்சத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 28 திமுகவிற்கும், 9 அதிமுகவிற்கும், 2 பாஜகவிற்கும் செல்லலாம். ஆனால் நாம் இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதிமுக எந்த தேசிய கட்சியுடனும் இணைந்து போட்டியிட வில்லை என்பதாலும் பாஜகவிற்கு போன முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்பதாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை பொறுத்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சில இழுபறி தொகுதிகளில் பறிபோகலாம். அதாவது 9-ல் இருந்து குறையலாம். அப்படி குறையும்போது அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிக்கு போகலாம். அதாவது 28-ல் இருந்து அதிகரிக்கலாம். எவ்வளவு குறைகிறது அல்லது அதிகரிக்கிறது என்பதை ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுதான் சொல்ல முடியும். 

இத்தேர்தலை பொறுத்தவரை, இன்றைய சூழ்நிலையில்,  ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றி எது ? மாபெரும் வெற்றி எது ?

திமுக(கூ) - நான் மேலே குறிப்பிட்ட 28-ஐ பெற்றால் வெற்றி. 35-க்கு மேல் பெற்றால் மாபெரும் வெற்றி. 

அதிமுக(கூ) - அனைத்து தொகுதிகளிலும் கடும் நெருக்கடி அளித்து 2-ஐ பெற்றாலே வெற்றிதான். 9-ஐயும் பெற்றால் மாபெரும் வெற்றி. 2026 சட்டமன்ற வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். 

பாஜக(கூ) - இம்முறை வாக்கு சதவிகிதம் 8 - 12 சதவிகிதத்தை தொட்டால் வெற்றி. 2 தொகுதிகளில் வெற்றியோ (எ) வாக்கு சதவிகிதம் 15-ஐ தொட்டாலோ மாபெரும் வெற்றி. 

நாம் தமிழர் - போன முறை வாங்கியதை விட அதிகம் பெற்றால் வெற்றி. ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றிக்கு அருகாமையில் வந்தால் மாபெரும் வெற்றி. 
 

நான் சொல்ல விரும்புவது 

சுய அறிவுக்குட்பட்டு சிந்தித்து அனைவரது நலன் காக்கும் பொருட்டு அறத்தின் அடிப்படையில்தான்  வாக்களிக்கின்றீர்களா என உறுதி செய்து கொண்டு வாக்களியுங்கள். நோட்டாவை தவிருங்கள். 

ஏப்ரல் 19 - மறவாமல் வாக்களிப்போம் 
ஒற்றை விரலால் அறம் காப்போம். 

நன்றி வணக்கம் ! உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவிடுங்கள். 

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 1

வணக்கம். 

முந்தைய இரண்டு பதிவுகளை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான, முக்கியமாக தமிழ்நாட்டிற்கான, தேர்தலுக்கு முந்தைய என்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் வெளியிடுவதற்காகவே இப்பதிவு. 

சரியாக அமைந்த 2021ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு 

2021-ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது என்னுடைய கணிப்பு மிகவும் சரியாக இருந்ததே இப்பதிவை நான் இடுவதற்கு உந்துதலாக அமைகிறது.   2021-ஆம் ஆண்டு வாக்குப்பதிவு 06-04-2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 02-05-2021 அன்றும் நடைபெற்றது. வாக்குபதிவிற்கு முன் 17-03-2021 அன்று நான் வெளியிட்ட பதிவில் திமுக மற்றும் அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் தொகுதிகள் எனவும் இழுபறி தொகுதிகள் எனவும் கீழ்க்கண்டவாறு கணித்தேன்.


அதன்பிறகு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன் 29-04-2021 அன்று இழுபறி தொகுதிகளில் 70 சதவிகிதம் திமுகவிற்கு சாதகமாக அமையும் எனவும் கணித்தேன். 
                                                                     
இக்கணக்குப்படி,  மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், உறுதியாக கிடைக்கும் என நான் கணித்த எண்ணிக்கையில் திமுகவிற்கு 90-ம் அதிமுகவிற்கு 60-ம் போக மீதி உள்ள 84 இழுபறி தொகுதிகளில் 70 சதவிகித கணக்குப்படி திமுகவிற்கு 59-ம் அதிமுகவிற்கு 25-ம் செல்ல கீழ்க்கண்டவாறு அமைந்தது எனது கணிப்பும் வெளிவந்த முடிவும். 


நான் கணித்ததற்கும் தேர்தல் முடிவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வெறும் 10 மட்டுமே. இதன் அடிப்படையிலேயே அமைகிறது இம்முறை நான் முன்வைக்கும் கருத்துகளும் கணிப்புகளும்.

தேர்தல் அட்டவணை 

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் - தமிழ்நாட்டிற்கான தேர்தல் அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். 

தேதி

நிகழ்வு

20 மார்ச் 2024

மனுத்தாக்கல் ஆரம்பம்

27 மார்ச் 2024

மனுத்தாக்கல் முடிவு

28 மார்ச் 2024

வேட்புமனு ஆய்வு ஆரம்பம்

30 மார்ச் 2024

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்

19 ஏப்ரல் 2024

வாக்குப்பதிவு

04 ஜூன் 2024

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு


அறிவாலும் அனுபவத்தாலும் நான் தரும் கணிப்பு 

நான் மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். நான் இப்பதிவு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல கணிப்புகளை அச்சு  ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், இணைய ஊடகங்களும், தனியார் நிறுவனங்களும் மாநில அளவிலும் சரி தேசிய அரசியலிலும் சரி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் வெளியிடுகின்றன. இவற்றில் பல கருத்துக்கணிப்புகள் ஊடக வெளிச்சத்திற்க்காகவும், ஒரு கட்சியின் வெற்றிக்காக/வளர்ச்சிக்காக போலியான பிம்பத்தை உருவாக்குவதற்காகவும், பணத்தை பெற்றுக்கொண்டு உள்நோக்கத்துடனும், சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ஒரு கருத்துக்கணிப்பை அப்படியே பிரதியெடுத்தும்,  மக்களே சிரிக்கும் வகையில் சம்பந்தமில்லாமலும் அமைவது உள்ளபடியே வருந்தத்தக்கதாகவும் கருத்துக்கணிப்பின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும் உள்ளது. அப்படி இல்லாமல் உண்மையாகவே இதற்காக மெனக்கெட்டு உழைத்து கருத்துக்கணிப்பை வெளியிட்டர்வர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் தரும் கருத்துக்கணிப்பு கடந்த கால அரசியல் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்ததின் அடிப்படையிலும், தரவுகளை அலசியதின் அடிப்படையிலும், கடந்த 20 நாட்களாக ஒவ்வொரு நாளும் களம் எவ்வாறு மாறுகிறது என்பதன் அடிப்படையிலும், ஒவ்வொரு தொகுதியும் வாழையடி வாழையாக அரசியலை எதிர்கொள்ளும் தன்மையின் அடிப்படையிலும், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த இரு கட்சிகளுக்கிடையே போட்டி என்பதன் அடிப்படையிலும் அமைகிறது. இது சரியாக அமையும் பட்சத்தில் எனக்கு கிடைக்கும் ஆதாயம் ஒரு நிமிட மகிழ்ச்சியும், பெருமையும் மற்றும் அடுத்த பதிவை இடுவதற்கான உத்வேகமும் மட்டுமே. 

ஏன் சவாலாக அமைகிறது இம்முறை கருத்துக்கணிப்பு 

பொதுவாக எந்த செயலாக்கத்திற்கும் அடித்தளமாக ஒரு ஆரம்பப்புள்ளியோ / மையப்புள்ளியோ இருக்க வேண்டுமல்லவா ? அதே போல் இந்நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கருத்துக்கணிப்போ, ஓட்டளிக்கப்போகும் மக்களின் மனமாற்றமோ எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால், மத்தியில் இம்முறை யார் ஆட்சிக்கு வர வேண்டும் (அ) யார் ஆட்சிக்கு வரக்கூடாது என தீர்க்கமாக களத்தில் பரவும் கருத்துக்களிலிருந்தும், யார் ஆட்சிக்கு வருவார்கள் (அ) யார் ஆட்சிக்கு வரமாட்டார்கள் போன்ற விடைதேடும் வினாக்களிலிருந்தும் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்தாலும் நாமும் இங்கிருந்துதான் தொடங்கவேண்டி உள்ளது. கடந்த கால வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு கட்சியையும்  நாடாளுமன்றத்திற்கு இன்னொரு கட்சியையும் தேர்ந்தெடுக்கும் தன்மைதான் உள்ளது.  ஆக மத்தியில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என பெரும்பான்மையினர் அளிக்கும் வாக்குகள்தான் கட்சிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன. 

ஒரே மனநிலையை எதிரொலிக்கும் தமிழ்நாடு 

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒரு கட்சிக்கோ / ஆட்சிக்கோ ஆதரவான அலையோ அல்லது எதிர்ப்பலையோ அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் தமிழ்நாடு முழுக்க எதிரொலித்து உள்ளதைத்தான் கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் முடிவுகள் ஒரு கட்சிக்கே/கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள சிக்கல் 

எளிதில் சொல்ல முடியாத அளவுக்கு  இத்தேர்தல் பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருப்பதால் எனக்கும் இது ஒரு சவாலான காரியமாகவே உள்ளது. 

தேசிய அளவில் பிரதானமாக போட்டிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே இருந்திருந்தாலும், கடந்த இரண்டு தேர்தல்களிலும் மிக பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாகவும், பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் ஒற்றை முகமாகவும் உலக நாடுகளிடத்தில் சக்தி வாய்ந்த தலைவராகவும் பிரபலமான உலகத்தலைவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். எனவே, பாஜக காங்கிரஸ் என்றிருந்த நிலை மாறி தற்சமயம் பாஜக (மோடி) மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லை வரக்கூடாதா என்ற ஒற்றை புள்ளியில் இணைகிறது அனைத்து கூட்டணிகளும் கள சூழ்நிலைகளும் செயல்பாடுகளும். காங்கிரசை பொறுத்தவரையில் தாங்கள் செல்வாக்கு இழந்து வருவதை உணர்ந்ததால் நேரு குடும்பத்தினரான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வகித்த காங்கிரஸ் தலைவர் பதவி சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே வசம் வந்தது. அத்துடன் எப்படியாவது பாஜகவை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கமுடியாத நிலையில் மாநிலக்கட்சிகள் பலத்துடன் "இந்தியா  கூட்டணி" என்ற பெயரில் கூட்டணி  அமைத்து போட்டியிடுகிறது. 

தேசிய கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளாக வாக்கு பலத்துடன் இருப்பவை திமுகவும் அதிமுகவும். 2021-ஆம் ஆண்டில் இருந்து ஆளும் கட்சியாகவும், 2019-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றி பெற்ற உத்வேகத்தில் உள்ள திமுகவும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களாலும் பிளவுகளாலும் நிலைகுலைந்த அதிமுக அதிலிருந்து மீண்டெழும் தீவிரத்துடனும் தேர்தல் களத்தில் மோதுகின்றன. 

கணிப்பில் அனைத்து கூட்டணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் என்ன ?

இப்படிப்பட்ட நிலையில், இத்தேர்தலில் திமுக + காங்கிரஸ் ஓர் அணியிலும், அதிமுக ஓர் அணியிலும், பாஜக ஓர் அணியிலும், வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி தனியாகவும் தமிழ்நாடு முழுவதும் களம் காண்கின்றன.  நான்கு கூட்டணி அதனால் நான்கு முனை போட்டி என்று பெயரளவுக்கு இல்லாமல் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதால் யாரையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அதற்கான காரணம் பின்வருமாறு.

காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட்டணியில் உள்ள திமுக ஆளும்கட்சியாக வலுவான நிலையில்  உள்ளதாலும் தேசிய அளவில் 'இந்தியா கூட்டணி' அமைப்பதில் முக்கிய பங்காற்றுவதாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மத்திய அரசில் அங்கம் பெற முடியும் என்ற நிலையில் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு ஏற்ப போட்டியில் முதன்மையாக நிற்கின்றனர்.

மற்ற எந்த கட்சிகளை விடவும் தொண்டர்கள் பலத்தில் எப்பொழுதும் வலுவாக இருப்பது அதிமுக. நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியது போல, ஒவ்வொரு கட்சியும் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கும் பட்சத்தில், அதிமுகவே வெற்றி பெறும். அதனாலேயே தனித்து நின்றாலும் 2014-இல் 37 தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. இம்முறை தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும் தீவிரமாக பணியாற்றுவதால்  அவர்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. 

கடந்த 10 வருடங்களாக பாஜக ஆட்சியில் இருந்ததால், தமிழ்நாட்டில் பாஜகவினை எப்படியெல்லாம் வளர்க்க முடியுமோ அத்துனை வழிகளிலும் முயற்சி செய்தனர்.  இம்முறையும் பாஜக ஆட்சிதான் என நம்பப்படுவதாலும், மோடியின் முகமும், அண்ணாமலையின் வரவும், அவரது களப்பணியும், "என் மண் என் மக்கள்" யாத்திரையும் தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு மாற்று சக்தியாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது என்றால் உண்மைதான். இவர்கள் அமைத்துள்ள கூட்டணியும் கைகொடுக்கும் பட்சத்தில் சில தொகுதியில் வெற்றியும் பல தொகுதியில் கடும் நெருக்கடியும்  கொடுக்க முடியும் என்பதால் இவர்களும் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட வேண்டியவர்கள்தான் கருத்துக்கணிப்பில். 

எப்பொழுதும் தனித்தே போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவிகிதம் பெறுவதால் ஒரு கட்சி வெற்றி பெறுவதையும் தோல்வி அடைவதையும் பல தொகுதிகளில் இவர்களே தீர்மானிக்கின்றனர்.  அவர்களே நாம் தமிழர் கட்சி. வெற்றி பெற முடியாவிட்டாலும் மற்ற கட்சிகளுக்கு வாக்குகள் செல்வதை செவ்வனே தடுத்து மாற்றத்துக்காக நிற்பதால் இவர்களையும் போட்டியில் வைப்பதே நியாயம். இவர்கள் வாங்கும் வாக்குகளை பொறுத்தே இழுபறி தொகுதிகளின் முடிவு. 

ஆக யார் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதை எளிதாக கணிக்கமுடிந்தாலும் கூட, வெற்றி பெற கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை கணிப்பதில் உள்ளபடியே இந்நான்குமுனை போட்டியில் சற்று கடினமாகவே உள்ளது. 

கூட்டணி கணக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் 

கூட்டணி எப்படி அமைகிறது 
1. கொள்கை அடிப்படையில் அமைகிறது.
2. பெரும்பாலான கட்சி தொண்டர்களின் முடிவுக்கு ஏற்ப அமைகிறது.
3. மாநில, தேச நலனை முன்னிறுத்தி அமைகிறது 

போன்ற செய்திகளை நீங்களும் நம்புகின்றீர்களா ? தயவுசெய்து நம்பிவிடாதீர்கள். 

உண்மையாலுமே கீழ்காணும் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே அமைகிறது கூட்டணி 
1. யாருடன் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இணையும் கட்சிகள். 
2. எங்கு சேர்ந்தால் மத்திய அமைச்சர் பதவி, மாநிலங்களவையில் இடம் , ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்பதன் அடிப்படையில் இணையும் கட்சிகள்.   
3. அதிக பணம் தருபவருடன் மட்டுமே கூட்டணி என்பதன் அடிப்படியில் இணையும் கட்சிகள்.
4. அடுத்து வர கூடிய சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இணையும் கட்சிகள்.
5. ஒவ்வொரு  தொகுதியிலும் யாருக்கு செல்வாக்கு, எந்த கட்சிக்கு பலம், வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி எது, அச்சாதிக்கான கட்சி எது என்பதெல்லாம் ஆராய்ந்து கூட்டணிக்குள் இழுக்கப்படும் கட்சிகள்.  
6. வழக்கு, சோதனைகளிலிருந்து தப்பிக்க கூட்டணியில் சேர்ந்து சமரசம் செய்து கொள்ளும் கட்சிகள்.
7.  அதே வழக்கு, சோதனை நடத்தப்படும் மற்றும் எதிர்கால வாழ்க்கை சீர்குலைக்கப்படும் என கட்டாயப்படுத்தப்பட்டு நிர்பந்திக்கப்பட்டு கூட்டணியில் இணைப்படும் கட்சிகள். 
8. ஒரு கூட்டணியில் இடம் இல்லை என்பதால் இன்னொரு கூட்டணியில் இடம் பெரும் கட்சிகள். 
9. தங்கள் இருப்பை காட்டி கொள்ள கூட்டணியில் இணையும் கட்சிகள் / ஆதரவளிக்கும் காட்சிகள்  
10. வேடந்தாங்கல் பறவை போல தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து ஆர்ப்பரிக்கும் சில செல்வந்தர்களின் கட்சிகளும் கூட்டணியில் அடக்கம். 
11. இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக (கட்சி தோல்வியடைந்தாலும் கட்சித்தலைவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டும், பதவி கிடைக்க வேண்டும் போன்ற  அரசியல் ஆதாயத்திற்காக) கூட்டணி கணக்கை திட்டமிடும் கட்சிகள்.

இது தவிர இன்னும் பல பல அழுக்கான காரணங்கள்தான் ஒவ்வொரு கூட்டணிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கின்றன. 

இதுபோன்ற காரணங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கீழ்கண்ட கூட்டணிக்கு பின்னாலும் இருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

இந்தியா கூட்டணி
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளே இம்முறையும் கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக கடந்த முறை தனித்து களம் கண்டு கவனம் ஈர்த்த கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் இம்முறை ஆளும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் திமுகவில்  இணைந்துள்ளது. பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை இணைத்து தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டிலும் திமுக தலைமையின் கீழ் தொடர்கிறது. கூட்டணியில் இணைந்துள்ள அணைத்து கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகம் கேட்டதாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெறுவதில் விடாப்பிடியாக இருந்ததாலும், சொந்த சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருந்ததாலும் தொகுதிப்பங்கீடு சற்றே காலதாமதமானாலும் கீழே கண்டவாறு பகிரப்பட்டுள்ளது. 


அதிமுக கூட்டணி
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பல பிளவுகளால் கட்சி சிதைவுண்டு வருவதை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க திட்டமிட்டது  அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக. அதனால் திமுகவின் உண்மையான எதிரி நாங்கள் தான் என திமுக எதிர்ப்பை மிகவும் தீவிரமாக கையில் எடுத்து அதிமுக சார்பு வாக்குகளை பெற முயற்சித்தனர். பாஜகவை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல முயற்சியாகவே என்னால் பார்க்க முடிந்தது. ஓரளவு இதில் அவர்கள் வெற்றியும் பெற்றதாகவே நான் கருதுகிறேன். இது அதிமுகவிற்கும் தலைமைக்கும் தெரிந்திருந்தாலும் கூட மத்தியில் மோடி ஆட்சியில் இருப்பதால் வேறு வழி இல்லாமல் மௌனம் காத்த அதிமுக, இதற்கு மேல் விட்டால் கட்சி மேலும் வலுவிழந்து விடும் என்பதாலும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற நிலையிலும் துணிச்சலாக முடிவெடுத்து கடந்த வருடம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறி வந்த அதிமுக கூட்டணிக்கதவுகளை திறந்தே வைத்திருந்தது. முக்கியமாக பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் போன முறை கூட்டணியில் இருந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களை தக்க வைக்க முயற்சிகள் எடுத்தனர். அதிக தொகுதிகளை கேட்டதன் அடிப்படையில் நீடித்துக்கொண்டே போன தொகுதிப்பங்கீட்டில் இறுதியில் தேமுதிக மட்டும் அதிமுக பக்கம் வந்தது. இது தவிர புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ  கட்சிகளையும்  சேர்த்து அதிமுகவும் கூட்டணியாகவே போட்டியிடுகிறது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணி

போன முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 4 சட்டமன்ற தொகுதிகளை பெற்றிருந்த பாஜக இம்முறை நாடாளுமன்றை தேர்தலை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தது. மாநிலத்தில் அதிமுக ஆதரவுடனும், மத்தியில் எப்படியும் மோடிதான் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கை அடிப்படையிலும் தீவிர களப்பணியாற்றிய அண்ணாமலை மற்றும் பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது வெளியே சொல்லாமல் இருந்தாலும் உண்மையில் வருத்தப்படக்கூடிய செய்தியாகத்தான் இருந்திருக்கும். அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு வரவழைக்க தேசிய தலைமை வரை முயன்றும் சாத்தியப்படாததால் எப்படியும் ஒரு மெகா கூட்டணியை அமைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து விதமான தங்களது அதிகாரங்களையும்  வியூகங்களையும் பயன்படுத்தி பாமக(அன்புமணி ), தமாகா(வாசன் ), அமமுக (தினகரன்), பன்னீர்செல்வம் (சுயேச்சை) உட்பட சிறிய கட்சிகளையும் உள்ளிழுத்து ஒரு பெரும் கூட்டணியாக கட்டமைத்துள்ளனர். இது இல்லாமல் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார் சரத்குமார்.    


தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி
தனித்து நிற்பது எளிதானதல்ல. ஆனால் அதை சாத்தியப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. அதற்க்காகவே இக்கட்சிக்கு வாக்களிக்க கூடியவர்கள் ஏராளம். அதே போல் பிற்படுத்தப்பட்டோருக்காக இயங்கக்கூடிய தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து களம் இறங்குகிறது. தமிழகம் முழுவதும் சேர்த்து தோராயமாக இரண்டு லட்சம் வாக்குகள் இவர்களுக்காக உள்ளது. 


வேட்பாளர் பட்டியல்
    39 தொகுதிகளிலும் போட்டியிடும் நான்கு முனை போட்டியில் மல்லுக்கட்டும் வேட்பாளர்களை கீழே காணலாம். 


எங்கிருந்து பிரிந்து எங்கு செல்கிறது வாக்குகள்: மக்களின் மனநிலை மாற்றமும், ஒருசேர திரளும் (அ) பரிமாற்றத்தால் பகிரப்படும் வாக்குகளும் 

1. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான மனநிலை எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்பு வாக்குகள் எங்கு செல்கிறது?
2. நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள். இது எந்த கட்சிக்கு செல்கிறது?
3. கட்சியின் செயல்பாடுகளால் திருப்தியில்லாத / உற்சாகமடையாத கட்சி உறுப்பினர்களின், தொண்டர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
4. முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ? இளைஞர்கள் வாக்குகள் எங்கு செல்கிறது?
5. நகர்ப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ? கிராமப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ?
6.  அதிகமாக கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதிலை  பொறுத்து முடிவு செய்யப்படும் வாக்குகள். ஓட்டுக்கு பணம் வந்துவிட்டதா ?
7. பெரும்பாலான மக்களின் மன ஓட்டத்தில் இருந்து, கருத்துக்கணிப்பில் இருந்து இவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் நமது ஓட்டை ஏன் வீணடிக்க வேண்டும் என வாக்களிப்பவர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
8. கண்களுக்கும் காதுகளுக்கும் முக்கியமாக ஆழ்மனதிற்கும் நினைவகத்திற்கும் செல்லும் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஏராளம். இப்படியாக மாறும் வாக்குகள் எந்த கட்சிக்கு அதிகம் சென்றடைகிறது ? 
9. தமக்கோ, தமது தொகுதிக்கோ யார் வந்தால் நல்லது என்பதன் அடிப்படையில் செலுத்தும் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
10. உள்ளபடியே யார் நல்லது செய்தார்கள் (அ) யார் நல்லது செய்வார்கள் என்பதன் அடிப்படையில் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
11. அரசியல் புரிதலின்மை , அரசியல் ஆர்வமின்மை, அரசியல் குழப்பம், அரசியல் மடமை, அரசியல் அலட்சியம், அரசியல் வெறுப்பு உட்பட்ட காரணிகளால் யாருக்கு வாக்களித்தால் என்னாக போகிறது ? என அளிக்கப்படும் வாக்குகள் எங்கு  செல்கிறது ?  
12. மதத்தின் அடிப்படையிலான, ஜாதி அடிப்படையிலான வாக்குகள் எங்கு செல்கிறது ?

இக்கேள்விகளுக்கான பதிலே யார் ஆட்சிக்கு வரமுடியும் என்பதற்கான பதிலாகவும் இருக்க முடியும். வாருங்கள் இதற்கு என்ன பதிலாக இருக்க முடியும் என்பதை யூகிக்கலாம். 

இம்மனநிலை மாற்றத்தால் பலன் அடையும் கூட்டணி  எது ? நம் பதில்கள் என்ன ?

1. பதில் : கட்சிக்கு எதிராக இருக்கும் வாக்குகள்  பல்வேறு வகைகளில் பிரியலாம். முக்கியமாக பிரதான எதிர்கட்சிக்கோ, மாற்றத்திற்காக நிற்கும் கட்சிகளுக்கு ஒருவாய்ப்பை தரலாம் என்ற நோக்கிலோ, வளர்ச்சி அடைந்து வரும் கட்சிக்கோ, யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்களோ அங்கெல்லாம் செல்லலாம். தமிழ்நாட்டை பொறுத்தளவில் இது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் திமுகவை பொறுத்தவரையில் மிகப்பெரிய அதிர்வலை  இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் இருக்கத்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லையென்பதால் எதிர்ப்பு இல்லை. அதே சமயம் ஆதரவும் இல்லை. பாஜகவை பொறுத்தவரையில் 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்தால் அது பாஜகவினை பாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் பாஜக வளரவே தொடங்கி இருக்கிறது. ஒருவேளை பாதித்தால் அது பாஜகவில் உள்ள கூட்டணி கட்சிகளையே பாதிக்க வாய்ப்புள்ளது.  தேசிய கட்சிகள்  எதனுடனும் கூட்டணி இல்லாமல் திமுக எதிர்ப்புடன் தனித்து போட்டியிடும் அதிமுகவில் பிரிவதற்கு எதுவும் இல்லை. வருவதற்கே உள்ளது. ஆக, திமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும்  நாம் தமிழருக்கும்,  பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கும், பாஜக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கும் செல்ல வாய்ப்புள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் கடந்த முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் திமுக கூட்டணிக்கு குறைவாகவும் பாஜகவிற்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது. திமுகவிற்கு எவ்வளவு குறைகிறது மற்றும் பாஜகவிற்கு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பொறுத்தே அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதும் குறைவதும்.  

2. பதில் : காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கவே இடம் இல்லாமல் மோடி ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்பதே முன்னிலையில் இருப்பதால் ஆதாயம் பெறப்போவது பாஜக மட்டுமே. பாஜக எதிர்ப்பு வலுப்பெற்றால் திமுக வாக்குகள் சிதறடிக்கப்படாமலும் நடுநிலை வாக்காளர்களினுடைய வாக்குகளும் திமுகவிற்கும் கிடைக்கும். அதிமுக இந்த கேள்விக்கான பதிலில் இல்லை. 

3. பதில் : தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை, நிறுத்தியிருக்கும் வேட்பாளருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை, உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகள் சரி வர வேலை செய்வதில்லை, தலைமையின் மேல் அதிருப்தி, பிரச்சாரம் எடுபடவில்லை போன்ற காரணங்களுக்காக சோர்ந்திருக்கும் தொண்டர்கள் உள்ளடி வேலைகள் செய்து யாருக்கு வாக்களித்தால் தங்கள் எதிர்ப்பை காட்டமுடியுமா அவர்களுக்கும், பலபேர் தங்களுக்கு பிடித்த இரண்டாவது கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியை விடவும் அதிமுக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதை காண முடிகிறது.  இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உட்கட்சி பூசலிலும், மதிமுக திமுகவுடனும் சுமூகமாக வேலை செய்ய முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவில் இணைந்துள்ள பாமக மற்றும் தினகரனின் அமமுகவை கட்சிக்காரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. 

4. பதில் : முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்காளர்களின் வாக்குகள் நோட்டாவிற்கும், இதுவரை ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் இருக்கும் கட்சிக்கும், மாற்றத்திற்காக பார்க்கப்படும் கட்சிக்கும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கும் செல்கிறது. தமிழ்நாட்டில் இவ்வாக்கினை பெறுவதில் முதன்மை இடத்தில இருப்பது நாம் தமிழர் கட்சி. அடுத்தபடியாக மோடி, அண்ணாமலை கவர்ச்சிக்காக பாஜகவிற்கும் , கமல் ஆதரிப்பதால் திமுகவிற்கும் கணிசமான வாக்குகள் செல்லலாம். 

5. பதில் : இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நகரங்கள் திமுகவிற்கும் கிராமங்கள் அதிமுகவிற்கும் சாதகமாக இருந்துள்ளன. இதை தாண்டி, இங்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று பார்த்தால், அனைத்து இடங்களிலும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அதிகமாக பெறுகின்றனர் நாம் தமிழர். பாஜகவை பொறுத்தவரையில் மாற்றத்தை விரும்பும் மற்றும் இந்திய அளவில் உலக அளவில் யோசிக்க கூடிய படித்த நகர இளைஞர்களின் வாக்குகளையும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பலரது வாக்குகளை பல இடங்களில் இருந்தும் பெற முடிகிறது. நகர்புறத்தில் அதிகம் பெறுகிறது மக்கள் நீதி மையம். 

6. பதில் : தமிழ்நாட்டின் அரசியலை அழுக்காக்கியதில் முக்கிய பங்காற்றியதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம். ஏதோ ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நடைமுறைபடுத்தப்பட்ட  இக்கலாச்சாரம் இப்பொழுது காணும் இடங்களில் எல்லாம் கரைபுரண்டோடுகிறது. 2017ஆம் ஆண்டு நடந்த சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு ஆளும்கட்சியான அதிமுகவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சென்னையை தங்கள் கோட்டை என சொல்லும் திமுகவை டெபாசிட் இழக்க செய்தது ஓட்டுக்கு பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உலகத்துக்கே பேருதாரணமாக அமைந்தது. தேர்தல் வந்தால் குதூகலமாகி ஓட்டுக்கு பணம் வரும் என்று மக்களும் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் பணம் வந்தால்தான் ஓட்டே அளிப்போம் என்ற நிலையில் இருக்கின்றார்கள் என்றால் இதை அரசியல் அவலம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல ? தங்களது சக்திக்கேற்ப அனைத்து கட்சிகளும் இதை செய்யும் என்றாலும் கூட அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள கட்சிகளால் இதை திறம்பட செயல்படுத்த முடிகிறது. ஆளும் கட்சியாக இருந்தால் இன்னும் பலம். 
இடைத்தேர்தலுக்கு ஒருகுடும்பத்திற்கு 10000 முதல் 20000 வரையும், சட்டமன்ற தேர்தலெனில் 4000 முதல் 6000 வரையும் நாடாளுமன்ற தேர்தலெனில் இன்னும் கொஞ்சம் குறைவாகவும் கொடுக்கப்படுவதாக செய்தி. யாரை குறிவைத்து பணப்பட்டுவாடா நடக்கிறது என்று பார்த்தால் அன்றாட கூலியை நம்புவர்களையும், வறுமைக்கோட்டில் இருப்பவர்களையும் எளிதாக அணுகி தங்களது கைப்பாவையாக மாற்ற முடியும் என்பதால் அவர்களே முதல்குறி. இவர்களே எந்த கட்சி மாநாடு போட்டாலும் அதனை வெற்றி மாநாடாக மாற்றுபவர்கள். இரண்டாவது, தமது கட்சிக்கு வாக்களிப்பவர்களாக அறியப்படும் வாக்காளர்களை/ குடும்பத்தை கட்சிக்காரர்களின் மூலமாக அறிந்து அவர்களை நோக்கிய பணப்பரிமாற்றம். யார் பணத்தை செலவு செய்வது என்ற கேள்வியை முன்வைத்தால், வெற்றி பெற்றால் யாருக்கு ஆதாயம் கிடைக்கிறதோ அவர்கள் செலவு செய்வர். கட்சி எந்த உதவியும் செய்யாத பட்சத்தில் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு பணபரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் பாஜகவிற்கு முக்கிய தேர்தல் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்தே சில தொகுதிகளை குறி வைத்து செயல்படுவதால் அங்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது கூட நெல்லையில் நான்கு கோடி  கைப்பற்றப்பட்டுள்ளது. திமுகவினை பொறுத்தவரையில் ஏற்கனவே எம்.பி ஆக இருந்தவர்களும், மத்திய அமைச்சராக இருந்தவர்களும், முக்கிய தலைவர்களின் மகன்களும் போட்டியிடுவதால் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் சொந்த செலவில் பணப்பட்டுவாடா நடக்கலாம். காரணம் என்னவென்றால் ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அதிமுகவினை பொறுத்தவரை இம்முறை செலவு செய்வது வீண். சட்டமன்ற தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கலாம். அதன் காரணமாகவோ என்னவோ முக்கிய தலைவர்கள் பல பேர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை போலும். கட்சித்தலைமைக்கும் இதே எண்ணம் இருக்கலாம்.  ஆக மொத்தத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வது கடினம் என்றாலும் கூட, எந்த கட்சியால் தொகுதியில் கட்சிக்காரர்களை தாண்டி அனைத்து பகுதிகளுக்கும் பிரச்சினை எதுவும் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்ய முடிகிறதோ அவர்களுக்கே வாக்குகள் செல்லும். 

7. பதில் : நான் முன்னரே சொன்னது போல் கருத்துக்கணிப்பு பல உள்நோக்கங்களை கொண்டு வெளியிடப்படுகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் தென்படும் பல போலி கருத்துக்கணிப்புகள் உள்பட. அதில் முக்கியமான ஒன்று இந்த கட்சிதான் வெற்றி பெரும் என்று திட்டமிடப்பட்டு பரப்பப்படுவது. அதோடு, தன் குடும்பத்தினர் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம் நண்பர்கள் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம்மை சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் எதற்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதன் அடிப்படையிலும் ஒரு தனிமனித ஓட்டு தீர்மானிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தேசிய அளவில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் பெரும்பாலான கருத்துக்கணிப்பில் இருப்பதால் அவர்களே இக்கேள்விக்கான பதிலில் முந்துகின்றனர். சமூக வலைதள பக்கத்தில் ஆதரவுக்கரம் நாம் தமிழர் பக்கமே நீள்கிறது. ஆனால் நகரத்தை தாண்டி முக்கியமாக கடைக்கோடியில் வாழும் மக்களிடத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை இம்முறை ஏற்படுத்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

8. பதில் : தேர்தல் காலத்தில் ஊர் ஊராக வரும் பிரச்சார வாகன ஒலிபெருக்கியின் அலறல் கேட்டவுடன் அதன்  பின்னால் ஓடி ஓடி ஒவ்வொரு கட்சியினுடைய துண்டு பிரசுரங்களை வாங்கியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படி நடந்த தேர்தல் பிரச்சாரம் இப்பொழுது நவீன காலத்திற்கேற்ப தொலைக்காட்சி விளம்பரங்களிலும், இணையதள பக்க விளம்பரங்களிலும், செய்தித்தாள் விளம்பரங்களிலும், திரையரங்குகளிலும் அமோகமாக நடக்கிறது. அது தவிர பிரச்சார வாகனங்களும் ஊர் ஊரக சென்று கொண்டுதான் உள்ளன. எது எப்படியோ தினமும் ஏதாவது ஒரு வகையில் மக்களின் காதுகளிலும் கண்களில் படும் வகையில் பிரச்சாரத்தை கட்டமைப்பதே ஒவ்வொரு கட்சியினுடைய தகவல் தொழில்நுட்ப பிரிவின் தாரக மந்திரமாக உள்ளது. இதைவிட ஒரு படி மேலே சென்று விளம்பரத்தை வெறும் வெற்று விளம்பரமாக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு கருத்தோடு படத்தை போலவே கதை திரைக்கதையோடு மிகவும் ரசிக்கும்படியாக தமது கட்சியினை போற்றும் வகையிலோ எதிர்கட்சியினரை கிண்டலடிக்கும் வகையியலோ எடுக்கப்படும் ஒரு நிமிட படக்காட்சிகள் விரைவாக பேசுபொருளாகின்றன. ஆனால் இதற்கு பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் சிறிய கட்சிகளுக்கு எப்பொழுதும் ஆட்டோ பிரச்சாரமே கைகொடுக்கின்றன.  தேர்தல் அறிவித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரத்தில் முதலில் முந்தியது அதிமுக. அதனால் சுத்தகரித்துக்கொண்ட திமுக, அந்த காலம் முதலே விளம்பரத்திற்கு பெயர் போன திமுக, தற்பொழுதும்  பல்வேறு விளம்பர யுக்திகளை பின்பற்றி இணையதள பக்கங்கள் வரை விளம்பரப்படுத்துகின்றனர். பாஜகவும் விடுவதாக இல்லை. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே இதனடிப்படையில் விழும் வாக்குகள் திமுக, அதிமுக, பாஜக விற்கு செல்லலாம். வெளியூர் வேட்பாளரும், அறிமுகமே ஆகாத வேட்பாளரும் வெற்றி பெற முடிகிறது என்று சொன்னால் இந்த கேள்விக்கான பதிலும் ஒரு காரணம். 

இணையத்தில் மட்டும் அரசியல் செய்தால் போதுமா ? என்ற கேள்விக்கு இன்னொரு 40 (அ) 50 வருடங்களுக்கு பிறகு ஆ ம் என்ற பதில் ஒருவேளை போதுமானதாக மாறலாம். 

9. பதில் :  இந்த கேள்விக்கான பதில் மிக எளிமையானது. எந்த வேட்பாளர் எளிதில் அணுகக்கூடியவராக இருக்கிறார், எந்த வேட்பாளர் தொகுதிக்காக போராடி திட்டங்களை பெறுவார், எந்த வேட்பாளரின் கட்சி அந்த தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கும் என யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் அத்தொகுதி சார்ந்த வேட்பாளருக்கும், கடந்த கால வரலாற்றில் நல்ல இடம் பிடித்த வேட்பாளருக்கும், அந்த தொகுதியை பற்றி அடிக்கடி பேசி  தொகுதிக்கு வருகை தரும் கட்சியின் வேட்பாளருக்கும் செல்லலாம். இது தொகுதி சார்ந்து இருப்பதால் கட்சி சார்ந்து வகைப்படுத்த முடியாது. ஆனால் திமுகவை பொறுத்தவரை ஒரு தொகுதியில் பல முறை போட்டியிட்டு வென்றவர்கள் பலபேர் இம்முறையும் பல தொகுதிகளில் போட்டியிடுவது அவர்களுக்கு சாதகம். பாஜகவை பொறுத்தவரை முன்னணி தலைவர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதனால் வாக்கு சதவிகிதம் சற்று அதிகரிக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சில தொகுதிகளில் வேட்பாளர்களின் தனி செல்வாக்கால் முன்னணி பெறுகின்றனர். (குறிப்பாக கோவை )

10. பதில் : போன கேள்வியும் இந்த கேள்வியும் ஒரே மாதிரி தெரிந்தாலும் இது நேரடியாக கட்சி தலைமையையும் ஆட்சி நடத்தும் திறனையும் சார்ந்துள்ளது. என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தால் ஏதேனும் வகையில் நாம் பயன் அடைந்தோமா ? நடக்கும் ஆட்சி திருப்திகரமாக இருக்கிறதா ? வாழ்வதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? நீண்டகால கோரிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டனவா ? குடும்பத்துக்கான, ஊழலுக்கான ஆட்சியாக இருக்கிறதா இல்லை மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறதா ? இப்படியான பல கேள்விகளுக்கான பதிலை யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் உள்ளபடியே நல்லது செய்யும் கட்சிக்குத்தான் செல்லும். ஆனால் நடைமுறையில் இதற்கு மாறான ஒரு யோசனையும் இருக்கத்தான் செய்கிறது. என்னவென்றால், குறைந்தபட்சம் நல்லவருக்கு வாக்களிப்பது. அதாவது இவருக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை என்ற ரீதியில் வாக்களிப்பது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பெண்களின் வாக்குகளை பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கான மாத உதவித்தொகை ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை பொறுத்து திமுகவிற்கு வாக்குகள் கூடலாம். (வெளியில் இருந்து பார்க்கும்போது நல்ல திட்டங்கள் போல் இருந்தாலும், வாக்குக்காக செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் தேவையா என்பது விவாதத்துக்கு உரியது) 

11. பதில் : படித்தவர்களின் வாக்குகள் பலனில்லாத நோட்டாவிற்கும், படிக்காத பாமரனின் வாக்குகள் சுயேட்சைகளுக்கு அதிர்ஷ்டமாகவும் அமைகின்றன. 

12. பதில் : மதத்தினை பொறுத்தவரையில், சிறுபான்மையினர் காவலராக தங்களை எப்பொழுதும் காட்டி கொள்ள முற்படும் திமுக கிறித்துவ, இஸ்லாமியர்களின் வாக்குகளை கணிசமாக பெறலாம். பாஜகவில் இருந்து பிரிந்த பின்னர் அதிமுகவிற்கும்  சிறுபான்மையினர் வாக்குகள் வர கூடிய சூழல் உள்ளது. அதே சமயம் திமுக செய்த அதே வேலையை தற்போதைய பாஜகவும் செய்வதால், அதாவது இந்துக்களுக்கான கட்சியாக, தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தும் கட்சியாக தங்களை காட்டிக்கொள்வதால் பெரும்பான்மையான இந்துக்களில் குறிப்பிடத்தகுந்த சதவிகிதம் பாஜகவிற்கு வரலாம். பெரும் சதவிகிதம் கட்சி சார்ந்து பிரியலாம். மதத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் அரசியல் சுற்றுவது சாதியை மையத்தில் வைத்தே. பல்வேறு சாதிகள், ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பிரியும் வாக்குகள் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ தொகுதிகளை கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விடுகின்றனர் பெரிய கட்சிகள். தங்களது சாதியை முன்னேற்ற வழிவகை செய்யாமல் சாதியை ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வர நினைப்பவர்களே அதிகம். சாதிப்பிரிவினையை மறைமுகமாக தூண்டி  சாதிய பற்றுதலை சாதிய வெறியாக்குகின்றனர் தங்களது சுயநலத்துக்காக. சாதியை பற்றி பேசாமல் இருந்தாலே, சாதிய பற்றுதல் காலப்போக்கில் கழிந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் அதை அப்படியே விட்டால் இவர்களது பலத்தை எப்படி காட்டுவது எப்படி சீட்டுகளை பெறுவது ? அதற்காகவே சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியை போல தெரிந்தோ தெரியாமலோ மனித சமுதாயத்துடன் ஒட்டி வந்த சாதி எனும் தூசியை அவர்களை காக்கும் கவசமாகவும் கௌரவமாகவும் வசதிக்கேற்ப மாற்றிவிட்டனர். ஒரு நல்ல சாதிய தலைவரின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சாதிய நல்லிணக்கத்திற்கு போராடுபவராகவும் தனது சாதியில் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள மனிதர்களை மேலே தூக்கி விடுவதற்க்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.  சாதி ஒழிய வேண்டும், மத சார்பற்ற கூட்டணி, சமூக நீதி என்று பேசுபவர்கள் உட்பட அனைத்து கட்சியினரும்  தொகுதிகளில் சாதியை மையப்படுத்தியே வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே சாதி சார்ந்த வாக்குகள் தத்தமது சாதி சார்ந்த கட்சி மற்றும் சாதி சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவாகவும் தத்தமது கட்சிக்கு எதிரான பகைசாதி சார்ந்த கட்சி மற்றும் பகைசாதி சார்ந்த வேட்பாளருக்கு எதிராகவும் செல்கிறது. 

அடுத்து நேரடியாக கருத்துக்கணிப்பிற்குள் செல்லலாம். நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புள்ள கூட்டணி எது ? 


2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (கடந்த கால வரலாறு)

வணக்கம்.

எந்திரமயமாக்கப்பட்ட இன்றைய வாழ்க்கை முறையில் நம்மை பற்றி கூட சிந்திக்க நேரம் இல்லாமல் அனைவரும் பணத்தை நோக்கியும் அதன் பிறகு சம்பாதித்த பணத்தை செலவழிக்க மருத்துவமனையை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கையில் நம் முன்னோர்களை பற்றியோ, நம் மொழியை பற்றியோ, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றியோ, ஒரு மாநிலமோ தேசமோ அல்லது நாம் வாழும் பகுதியோ ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு வளர்ச்சி பெற்றது/எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பதை பற்றியோ நாம் அறிய முற்படுகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதுதான் நமக்கு கிடைக்ககூடிய சத்தமான பதில். 

பழைய வரலாறுகளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், இது நேர விரையமல்லவா என நீங்கள் மனதிற்குள் ஒருவேளை நினைத்தால், அதற்கும் பதில் தர விரும்புகிறேன். நிகழ்காலமோ எதிர்காலமோ அது கடந்த காலத்தின் தொடர்ச்சிதான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எவர் ஒருவர் கடந்த காலத்தினை தெளிவாக மனதில் நிலைநிறுத்தி நினைவுகூர்ந்து ஆராய்ந்து அதிலிருந்து படிப்பினையை பெறுகிறாரோ அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி மற்றவர்களை காட்டிலும் உச்சபட்ச ஆளுமையை சரியான பாதையில் செலுத்த முடியும். 

இது அரசியலுக்கும் பொருந்தும். அரசியலை பற்றியே தெரியாத பல பேர் அரசியல் வரலாற்றை பற்றி தெரிந்திருக்க கண்டிப்பாக வாய்ப்பில்லை. போன பதிவில் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட நீங்கள், இப்பதிவில் ஒவ்வொரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதும் முக்கியமாக தமிழ்நாட்டில் அரசியல் எவ்வாறு இருந்துள்ளது எப்படி மாற்றம் பெற்றுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேற்கொண்டு வாசியுங்கள். 


17 முறை

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 17 முறை நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. (1951 முதல் 2019 வரை). இதில் கிட்டத்தட்ட முதல் 8 தேர்தல்களிலும் போட்டியே இல்லாமல் அரசியல் களமாடியது காங்கிரஸ் கட்சி. அடுத்த நடந்த 7 பொதுத்தேர்தலில் காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்தன கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன். கடைசி 2 பொதுத்தேர்தலில் (2014, 2019) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது பாஜக. இப்பொழுது 2024-ஆம் ஆண்டு நடக்க கூடியது 18ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல். 

ஆரம்பத்தில் கோலோச்சிய காங்கிரஸ் (1951 to 1984)

கற்றவர்களுக்கு அரசியல் பொறுப்பை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பின்னாளில் சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டது. காங்கிரஸ் கட்சியில், தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கி இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நம் அனைவராலும் அறியப்படுகிற இந்திய தேசத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்கு எதிராக நிறவெறி இனப்பாகுபாட்டுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய மக்களிடத்தில் நன்கு அறியப்பட்ட காந்தியால் சுதந்திர போராட்டத்தின் வீரியத்தை அதிகரித்து நாடு முழுவதும் மூலை  முடுக்குகளில் எல்லாம் சுதந்திர உணர்வை எழுச்சியை உண்டாக்க முடிந்தது. போராட்டத்தில் வெற்றியும் பெற்று சுதந்திரம் கிடைத்தது வரலாறு. இவ்வாறான வரலாற்றை கொண்ட காங்கிரஸ் கட்சியால் முதல் 8 தேர்தல்களில் போட்டியே இல்லாமல் வெற்றி பெற முடிந்தது என்றால் அது புரிந்து கொள்ள கூடியதுதான். பொதுவுடமை தத்துவத்தை பின்பற்றி 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தி இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

விதிவிலக்கான 6ஆவது தேர்தல் (1977) - இந்திராவின் நெருக்கடி நிலை 

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1951) வாகை சூடிய காங்கிரஸில் இருந்து முதல் பிரதமரானார் ஜவகர்லால் நேரு. சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே இந்தியா விடுதலை பெற்ற பின் நேருவே பிரதமராக பொறுப்பில் வீற்றிருந்தார்(1947-1952). கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த நேருவின் மறைவிற்கு (1964) பின் அவரது இடத்திற்கு வந்து பிரதமராகவும்(1967) பதவியேற்றார் நேருவின் மகள் இந்திராகாந்தி.  அதன் பின்னர் ஆளுநர் நியமனத்தில் வந்த பிரச்சனையில் கட்சிக்குள்ளேயே  இந்திராவிற்கு அதிருப்தி ஏற்பட்ட சமயத்தில் துணிச்சலாக முடிவெடுப்பதற்கு பெயர் போன இந்திராகாந்தி கட்சியிலிருந்து மூத்த தலைவர்களை ஓரம்கட்டினார். இது இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுபட (இந்திரா காங்கிரஸ்-இந்திரா, நிறுவன காங்கிரஸ்-காமராஜர்) வழிவகுத்தது. வலுவாக இருந்த இந்திரா காங்கிரஸ் 1971-ஆம் ஆண்டு பெரும் வெற்றியை பெற்றது.  அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால், ஜூன் 12, 1975-ல் அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்திரா காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் (ஜூன் 24,1975), அவர் பிரதமராக தொடர அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே, இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு குடியரசு தலைவரால் பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரா காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. இதனால் செல்வாக்கிழந்த இந்திரா 1977-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். 1977 பொதுத் தேர்தலில் நிறுவன காங்கிரசு, பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வென்று காங்கிரசில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமரானார். 1980-ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது. பின்பு 1980-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார். மீண்டும் ஒரு தடாலடி முடிவெடுத்து பிரச்சனை ஏற்பட்ட பொழுது ஒட்டுமொத்த பஞ்சாப் சீக்கியர்களின் கோபம் பிரதமர் இந்திரா காந்தி நோக்கி இருந்ததால், அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி 1984-ல் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் அரசியலால் பெரிதும் ஆர்வம் இல்லாமல் இருந்த, 1981-ஆம் ஆண்டே அரசியலுக்குள் வந்த இந்திரா காந்தியின் மகனான ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். 

காங்கிரசுக்கு நிகரான பாரதிய ஜனதா கட்சி (1989 to 2009)

ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவாக 1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் 1977-ஆம் ஆண்டு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கி காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு பிரதமரை கொண்டுவர உதவியது. அதன்பிறகு ஜனதா கட்சி கலைக்கப்பட்டு 1980-ல் உதயமானது பாரதீய ஜனதா கட்சி.  1989-ல் தற்கொலைப்படை தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மறைவுக்குப்பின் 1989-ல் மூன்றாவது இடத்தை பிடித்த  பிடித்த பாரதிய ஜனதா கட்சி 1991-ல் இரண்டாவது இடத்தை பிடித்து காங்கிரஸ் கட்சிக்கு நிகரான கட்சியாக வளர தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சி மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் மாநில கட்சிகளும் மக்களிடத்தில் அங்கீகாரம் பெற ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து அடுத்த நடந்த ஐந்து பொதுத்தேர்தல்களிலும் தனிப்பெரும்பானமை கிடைக்கவில்லை என்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மூன்று முறை பாரதிய ஜனதா கட்சியும் (1996, 1998, 1999) இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் (2004, 2009) ஆட்சிக்கு வந்தன. 

தனிப்பெரும்பான்மையுடன் பாஜக Vs வலுவிழந்த காங்கிரஸ் Vs ஆதிக்கம் செலுத்தும் மாநில கட்சிகள்

குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அசுர வளர்ச்சி கண்டது பாஜக. அதே சமயம் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி அவர்களுக்கு கட்சிக்குள்ளேயே செல்வாக்கு குறைய தொடங்கியது. இதனை பயன்படுத்திக்கொண்ட மாநில கட்சிகள் தங்கள் சக்திக்கேற்ப தத்தமது மாநிலங்களில் கட்சியை வளர்க்க தொடங்கினர். காங்கிரஸ் Vs பாஜக என்றிருந்த நிலை மாறி பாஜக Vs மாநில கட்சிகள் என்ற நிலையில் நடந்ததுதான் 2014 மற்றும் 2019 பொதுத்தேர்தல். இதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தனர் பாஜக. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தொகுதிகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்று 2014இல் அதிமுகவும் 2019இல் திமுகவும் மாற்றத்திற்கான சக்தியாக மாநில கட்சிகளும் இருக்கின்றோம் என பிரகடனப்படுத்தினர்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்படி? 

மாநில கட்சியின் பரிணாமம்(1951 to 1971)

1951 - சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தது.  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. முன்னரே தேசிய அரசியலுக்கு சொன்னது போல், மாநிலத்திலும் போட்டியே இல்லாமல் காங்கிரஸ் முதலிலும், இரண்டாவது இடத்தில் கம்யூனிஸ்டும் இருந்தன. 

1957 - 1951-ஆம் ஆண்டு நிலையே இம்முறையும் தொடர்ந்தாலும் கூட, திமுக இரண்டு தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றது கவனிக்கப்பட வேண்டியது. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் சென்னை மாகாணத்தில் அப்போவே வளர ஆரம்பித்தது மாநிலக்கட்சி திமுக. தேர்தல் அரசியலில் உடன்பாடு இல்லாத பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949-ஆம் பேரறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் திமுக. சினிமா வசனங்களின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும், நடிகர்களின் மூலமாகவும் கட்சி வேகமாக வளர்ந்தது என்றால் மிகையல்ல.  

1962 - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக சந்தித்த இத்தேர்தலில் பிரதானமாக இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்டை தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தது திமுக. 2-ல் இருந்து 7 இடங்களை பெற்றது திமுக. வழக்கபோல் காங்கிரஸ் முதலிடத்தில். 

1967 - திமுகவின் வளர்ச்சியை புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) மற்றும் இதர கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, வழக்கம்போல் காங்கிரஸ் தனியாக காலம் காண, இம்முறை 3 இடங்களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது காங்கிரஸ். 

1971 - காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு நடந்த இத்தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் காமராஜரின் எதிர்ப்பை சமாளிக்க இதுவரை தனித்து களம்கண்ட காங்கிரஸ் இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க, கர்மவீரர் காமராஜ் தலைமையிலான நிறுவன காங்கிரஸ் மற்றொரு கூட்டணி அமைத்தது. மிகப்பெரிய வெற்றி பெற்றது திமுக கூட்டணி . ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றார் காமராஜர். 

உதித்த அதிமுக & கட்சிகளை கட்டுக்குள் வைத்த காங்கிரஸ் (1977 to 1991)

அண்ணாவின் இதயக்கனியாக திமுகவின் வளர்ச்சிக்கு பக்கபலமாக கருணாநிதி முதல்வராக உறுதுணையாக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன்  கட்சியின் பொருளாளராக கணக்கு கேட்டதின் அடிப்படையில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதின் விளைவாக 1972-ஆம் ஆண்டு உதயமானது அதிமுக. பின்னர் 1973-ல் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல்லில் மிகப்பெரிய வெற்றியை பெற்று களத்தில் இனிமேல் நாங்களும்தான் என வந்தது அதிமுக.  

1977 - 1975 to 1977 வரை இருந்த நெருக்கடி நிலை பிரகடனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சூழ்நிலை நிலவி மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தாலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காரணம் வலுப்பெற்று கொண்டிருந்த அதிமுகவுடன் செய்து கொண்ட கூட்டணிதான். 

1980 - 1979-ல் நடந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவு தர எம்ஜிஆர் மறுத்ததால் இம்முறை திமுகவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார் இந்திராகாந்தி. மிகப்பெரிய வெற்றி பெற்றது திமுக கூட்டணி. 

1984, 1987, 1991 - உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆருக்கு இந்திராகாந்தி உதவியதால் மீண்டும் 1984-ல் இணைந்த கூட்டணி எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னரும் கூட 1996 தேர்தல் வரை தொடர்ந்தது. இத்தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இக்கூட்டணி 1984, 1987 மற்றும் 1991 இல் எதிர் கூட்டணிக்கு முறையே  2, 1 மற்றும் 0 தொகுதிகளை மட்டும் ஆறுதல் பரிசாக அளித்தனர். 

இக்காலகட்டத்தின் இறுதியில்தான்  பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி துளிர்விட தொடங்கியது. 


கூட்டணி கணக்கும் நிர்ணய சக்திகளாக மாறிய மாநில கட்சிகளும் (1996 to 2009)

தேசிய கட்சிகளுக்கு தலைவலியாக எப்படி திமுக மற்றும் அதிமுக மாறியதோ அதே போல் திமுக அதிமுகவிற்கு தலைவலியாக உதித்தன மற்றும் பல மாநில கட்சிகள். முன்னரே துளிர்விட ஆரம்பித்த பிஜேபி, பாமாகவுடன் இக்காலகட்டத்தில் போட்டிக்கு வந்தன பல கட்சிகள். அதிமுகவுடன் கூட்டணி வைக்க மேலிடம் நிர்ப்பந்தித்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்து பிரிந்து திமுகவை ஆதரிக்கும் நோக்குடன்  தனது ஆதரவாளர்களுடன்  1996-ல் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார் ஜி.கே.மூப்பனார். 1982-ஆம் ஆண்டே தலித்துகளுக்கான இயக்கமாக தோற்றுவிக்கப்பட்டாலும் கூட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாறி 1999-ல் தேர்தல் களத்திற்குள் நுழைந்தது. திமுகவின் போர்வாளாக இருந்த வைகோ கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகி 1994-ல் மதிமுகவை தோற்றுவித்தார். இது தவிர சாதியத்தை வைத்து பல்வேறு கட்சிகள் தோன்றின. ஆக, கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன  அனைத்து கட்சிகளும்.

1996 - அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மீதான அதிருப்தியும், அதனால் காங்கிரசுக்கு மாற்றாக தமிழ் மாநில காங்கிரஸ் பார்க்கப்பட்டதும் அதிமுக+காங்கிரஸ் கூட்டணி படுதோல்விக்கு காரணங்களாக அமைந்தன. தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணி அமைத்த திமுக எளிதாக வென்றது. இதுதவிர மதிமுக - சிபிஐ கூட்டணியும் பாமக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. திமுகவை சார்ந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஜி.வெங்கட்ராமன்  - மத்திய அமைச்சர்கள்.     

1998 - திமுக + தாமாகா  + சிபிஐ கூட்டணியே 1996ஐ போல இம்முறையும் தொடர்ந்தாலும் கூட, கூட்டணியில் முந்திய அதிமுக இம்முறை வென்றது. அதிமுக கூட்டணியில் இருந்த பிஜேபி, பாமக , மதிமுக கணிசமான தொகுதிகளை வென்று முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால்பதித்தனர். (அதிமுகவை சேர்ந்த மு.தம்பிதுரை மற்றும் சேடப்பட்டி முத்தையா மத்திய அமைச்சர்களானர்.) 

1999 - போன முறை தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்ததாலும், இம்முறையும் மத்தியில் ஆட்சிக்கு பாஜக வந்துவிடும் என்பதாலும்  அமைச்சரவையில் பங்குபெற என்ன செய்ய என யோசித்த திமுக, போன முறை வென்ற  அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தன்வசமாக்கியது (பாஜக,பாமக, மதிமுக). பாஜக உள்ளே வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் இம்முறை தனித்து கூட்டணி அமைத்து களம்  கண்டது. அதிமுக காங்கிரஸ் உடன் இணைந்தது. முடிவு திமுக - 26, அதிமுக -13, திமுகவை சார்ந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு - மத்திய அமைச்சர்கள்.     (முரசொலி மாறன் கருணாநிதியின் அக்கா மகன் ஆவார்).


தனித்து களம் கண்ட அதிமுக & தலைவர்களின் மறைவு

2004 - நான்குமுனை போட்டி நிலவிய இத்தேர்தலில் முக்கியமான மாநில கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக. அதிமுக பாஜகவுடன் மட்டும்.  இதுதவிர இரண்டு சாதாரண கூட்டணிகள்(இதில் விசிக மட்டுமே சற்று பெரிய கட்சி). இப்போட்டியில்  மிகப்பெரிய வெற்றி பெற்றது காங்கிரஸ்+திமுக கூட்டணி. வெகு நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரதமர் பதவிக்கு வந்தார் மன்மோகன் சிங். திமுகவை சார்ந்த டி.ஆர்.பாலு, ஆண்டிமுத்து ராஜா, தயாநிதி மாறன் மற்றும் பாமகவை சார்ந்த அன்புமணி ராமதாஸ்  - மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.

2009 - மீண்டும் காங்கிரஸ் + திமுக கூட்டணி. போனமுறை தனித்து போட்டியிட்ட விசிக-வை கூட்டணிக்குள் இழுத்தது திமுக. அதனால் திமுகவை விட்டு வெளியேறியது பாமக. (பாமக வளர்கிறது. அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வேறு கொடுத்தாகி விட்டது. எனவே அவர்களை வெளியேற்ற வேண்டுமெனில் விசிகவை இழுத்துதானே ஆகவேண்டும்). ஆதலால் அதிமுகவில் ஐக்கியம் ஆகினர் பாமகவும் மதிமுகவும். தேமுதிக அரசியல் களத்திற்கு வந்து கணிசமான ஓட்டுக்களை வாங்கினர். முடிவு : திமுக - 27, அதிமுக - 12. திமுகவை சார்ந்த தயாநிதி மாறன், ஆண்டிமுத்து ராஜா, மு.க.அழகிரி  - மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். (மு.க.அழகிரி-கருணாநிதியின் மகன், தயாநிதி மாறன் - கருணாநிதியின் அக்கா பேரன்)

2014 - தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாநிலக்கட்சி முதன்முறையாக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது என்ற  வரலாற்றை சொந்தமாகியது அதிமுக. 2004-ஆம் ஆண்டே பாஜகவை மட்டும் கூட்டணியில் சேர்த்து இதுபோன்றதொரு முயற்சியை மேற்கொண்ட அதிமுக இம்முறை நாடு முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசினாலும் தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து தனித்தே களம் கண்டது "லேடியா மோடியா" என்ற முழக்கத்துடன். காங்கிரஸ் இல்லாமல் களம் கண்டது திமுக. மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நல கூட்டணியில் பாஜகவும், தனித்தே காங்கிரசும் களம் கண்டன. 

2019 - திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம்பெற்றன. இச்சமயத்தில் கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி உயிரோடு இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் கட்சியிலும் ஆட்சியிலும் யார் பொறுப்புக்கு வருவது என்பதில் தொடங்கி ஏற்பட்ட பல சலசலப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும்  பின்னர் இத்தேர்தல் நடந்ததாலும்  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி தேர்தலில் தனியே போட்டியிட்டதாலும் கள சூழல் அதிமுகவிற்கு எதிராகவே இருந்தது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என அடையாளம் காட்டப்பட்டு விட்டதாலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்து கொண்டிருந்த அதிமுகவின் மீதான சலிப்பும் திமுக எளிதில் வெற்றிபெற வழிவகுத்தது. இது தவிர வாக்குகளை பிரிக்கும் சக்தியாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையமும் முக்கிய பங்காற்றினர். 


2024 ?

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பலம் பலவீனங்கள் பற்றியும் வெற்றி பெற போகும் கட்சி/கூட்டணி எது என்பதற்கான கருத்துக்களையும் கணிப்புகளையும் அடுத்த பதிவில் காணலாம். 

இப்பதிவிற்கான உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவிடவும்.

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ?, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (அரசியல் அறிவோம்)

 வாசகர்களுக்கு வணக்கம் 

தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்நேரத்தில் மீண்டும் உங்களை இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் உள்ளபடியே மகிழ்கிறேன். சமீப காலமாக இத்தளத்தில் எந்த விதமான பதிவும் இடாமல் இருந்தாலும் கூட என்னுள் இருக்கும் அரசியல் அணு என்னை விடுவதாக இல்லை. அதனால் சம கால தேர்தல் அரசியலை என்னறிவிற்கு உட்பட்டு விளக்குவதற்காகவும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அடிப்படை அரசியலை அறிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு பதிவாக இது இருக்கும் என்பதாலும் இப்பதிவு. அரசியல் தேர்தலில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ளது. உங்களது குடும்பத்திலும், நீங்கள் வசிக்கும் இடத்திலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலும் ஒவ்வொரு நகர்வையும், நிகழ்வையும் தீர்மானிப்பது அரசியலே. ஆக அதை அறிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணத்துடன் இப்பதிவை நீங்கள் படிக்கும் பட்சத்தில் நான் சொல்ல கூடிய கருத்துக்களை சிரமமின்றி உள்வாங்கிக்கொள்வதோடு உங்களது வாழ்க்கையுடனும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும்.  

கீழ்க்கண்ட சிலப்பதிகார வரியுடன் தொடங்க ஆசைப்படுகிறேன் . 

விளக்கம் கேட்கின்றீர்களா? இதற்கான உள்ளார்ந்த பொருளை இப்பதிவினை படித்தவுடன் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நிச்சயம் நான் நம்புகிறேன். 

அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என பட்டும்படாமல் பேசினாலும், அரசியல் ஒரு சாக்கடை தள்ளி இருப்பதே நல்லது என வெறுப்பாக பேசினாலும், நானாச்சு என் வேலையாச்சு என் வாழ்கையாச்சு என சுயசார்பாக பேசினாலும், அரசியலில் ஆர்வம் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட நாம் அனைவருமே அரசியல் வலைகளில் உள்ள ஆயிரமாயிரம் அரசியல் முடிச்சுகளுக்கு இடையே கட்டுண்டு உள்ளவர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கட்சியிலோ ஆட்சியிலோ பங்கு பெரும் ஒரு சராசரி அரசியல்வாதியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்று கண்டிப்பாக நான் சொல்லப்போவது இல்லை. வெறுமனே ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதும், அரசியல் புரிதல் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதும், தலைவரின் பண்பு, செயல்பாடு எப்படி இருந்தாலும் அவரின் அல்லக்கையாக இருப்பதும், கட்சியின் கொள்கை புரிகிறதோ இல்லையோ உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ முரண்பாடாய் தெரிகிறதோ இல்லையோ அவைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் பெரும்பாலான அரசியல்வாதிகளின் பழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நாம் அந்த மாதிரியான அரசியல் அமைப்புக்குள் சென்று அரசியல்வாதியாக இருக்க வேண்டும் / மாற வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. ஆனால் அந்த அரசியல் அமைப்பின் அர்த்தம் புரியாமல் அரசியலில் பெரும் வெற்றி பெறுவதாலையே நான் பெரும் அரசியல்வாதி, சாணக்கியன் என நினைக்கும் அரசியல்வாதிகளிடத்தில் மன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதியாகத்தான் மாற வேண்டும் என்பதல்ல. (அரசியலுக்கு வர விருப்பம் உள்ள பட்சத்தில் ஒரு அரசியல்வாதியாக மாறி ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை நீங்கள் முன்னெடுக்கலாம். அது வேறு கதை). ஆனால் அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும், ஒவ்வொருவரும் அரசியல் ஆர்வலராக, அரசியலை அறிந்து கொள்பவராக, அரசியலை ஆராய்பவராக, அரசியல் விமர்சகராக மாற வேண்டும். இதுவே நாட்டினுடைய குடிமகனாக ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தன்மைகளாக  நான் பார்க்கிறேன். ஒவ்வொரு குடிமகனும் இத்தகைய தன்மைகளுடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் செலுத்தக்கூடிய ஒவ்வொரு வாக்கும் உண்மையாலுமே ஒரு விரல் புரட்சிக்கு இட்டுச்செல்லும். அதுவே, அரசியல் சாக்கடையில் ஊறிப்போனவர்களை சிந்திக்க வைக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கும்இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டுவரவும் பயன்படும் என்றால் அது மிகையல்ல. முடிவாக, நடைமுறையில் பார்க்கும்போது ஒரு மனிதன் தனது பெற்றோர் மற்றும் சுற்றம் இல்லாமல் வாழ்ந்து விட முடியும் ஆனால் ஒரு மொழி இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா ? அது போலத்தான் அரசியலற்று நம் வாழ்வும் சாத்தியமில்லை. அதற்கு முதலில் அரசியல் என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டும். பார்க்கலாமா ?

அரசியலை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்க பட்டுள்ள உதாரணத்தை(கற்பனையானதுதான்) கவனியுங்கள். 

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் அவரது மனைவி என இரண்டு பேர் வீதம் மொத்தம் 100 குடும்பங்கள் உள்ளன. இதில் 70 குடும்பங்கள் ஒரு சமூகத்தையும் (சமூகம் 1), 30 குடும்பங்கள் மற்றொரு சமூகத்தையும் (சமூகம் 2) சார்ந்தவர்களாக உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்களே குடும்பத்தலைவர். அவர்கள் சொல்வதை அவர்கள் மனைவி  கேட்பதே பழக்கத்தில் உள்ளது. பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களினுடைய  சமூகத்தின் மேல் தீவிர பற்றுதல் உண்டு அதற்கே முன்னரிமையும் அளிப்பர். இவ்விரு சமூகத்திற்கும் சமூகம் சார்ந்து தனியே கோரிக்கை ஒன்று உண்டு. இது தவிர ஒரு தரமான சாலை வசதி என்பது அக்கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கான கோரிக்கை. 

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களாக மொத்தம் 4 பேர் களத்தில் இறங்கினர். 

வேட்பாளர் 1 - சமூகம்-1 இல் இருந்து அவரது சமூகம் சார்ந்த கோரிக்கையை முதலில் நிறைவேற்றுவேன் என்ற உத்திரவாதத்துடன். 

.வேட்பாளர் 2 - சமூகம்-1 இல் இருந்து தரமான சாலைக்கே முதலில் முன்னுரிமை என்ற உத்திரவாதத்துடன்.
 
வேட்பாளர் 3 - சமூகம்-2 இல் இருந்து அவரது சமூகம் சார்ந்த கோரிக்கையை முதலில் நிறைவேற்றுவேன் என்ற உத்திரவாதத்துடன்.
 
வேட்பாளர் 4 - சமூகம்-2 இல் இருந்து தரமான சாலைக்கே முதலில் முன்னுரிமை என்ற உத்திரவாதத்துடன்.

இவ்வாறு இருக்க தேர்தல் நடந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது. யார் வெற்றி பெற்று இருப்பார்கள் ? 


உங்கள் பதிலை தேர்ந்தெடுத்துவிட்டு படிக்க தொடரவும். 

ஆம். நீங்கள் கணித்தது போலவே எந்தவித சந்தேகமும் இன்றி வேட்பாளர்-1 மிக எளிதாக வெற்றி பெற்று இருப்பார்.

ஆனால் இக்கிராமத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு மூன்றாம் மனிதனாக நாம் இச்சூழ்நிலையை கவனித்தால் யார் நியாயமாக வெற்றி பெற்று இருந்திருக்க வேண்டும். 


இதையும் முடிவு செய்துவிட்டு படிக்க தொடரவும்.

ஆம். நீங்கள் நினைத்ததே. வேட்பாளர்-2 அல்லது வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருந்திருக்க வேண்டும் அல்லவா. காரணம் அவர்களே அனைவருக்குமானவர்களாக இருக்கிறார்கள். நமக்கும் சரி என்று தோன்றுகிறது.

இதிலிருந்து நாம் அறிய வருவது, எந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்க பட்டாலும் (அவர் நல்லவரோ இல்லை  கெட்டவரோ) அதற்கு காரணம் பெரும்பான்மையான  பொதுமக்கள் எடுக்கும் முடிவுகளே.

எனவே நான் அரசியலை இவ்வாறு வரையறுக்கிறேன். 


நடைமுறை அரசியலும் நாம் விரும்பும் அரசியலும் 

மேலே சொன்ன உதாரணத்தில் யார் நல்ல வேட்பாளர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மிக எளிதாக சொல்ல முடிகிறது. ஆனால் நடைமுறையில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. 

ஒரு வேட்பாளர் கெட்டவர் அல்லது நமக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார் என்று தெரிந்து எந்த ஒரு குடிமகனும் அவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. இன்றைய கால நடைமுறை அரசியலில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கும் ஒரே நோக்கத்தில் பல்வேறு விதமான காரணிகளையும் சூழ்நிலைகளையும் தங்களுடைய ஆயுதங்களாக்கி செயல்படுத்திக்கொண்டுள்ளனர். மக்கள் யோசித்தால்தானே பிரச்சினை எனக்கருதி அதற்கு சற்றும் இடம் தராமல் மக்களுடைய சாதிய, மத, இன, மொழி, மாநில, தேசிய உணர்வுகளை தூண்டியும் ஒவ்வொரு சராசரி குடிமகனுக்கும் உரித்தான பயம், கோபம், நம்பிக்கை, வெறுப்பு, இரக்கம், கருணை, அனுதாபம், ஆசை முதலான மனித குணங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் முக்கியமாக இந்திய போன்ற வளரும் நாடுகளில் பெரும்பிரச்சனையாக உள்ள வறுமையை வசதியாக பயன்படுத்தியுமே அரசியல் செய்கின்றனர் இக்கால அரசியல்வாதிகள். இவைகளில் இருந்து தப்பி பிழைத்து சுயமாக சிந்திக்க ஒரு சராசரி அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களால் முடியுமா என்ன ? 

படித்தவர்கள் கூட யோசிப்பதில்லையா என்கின்றீர்களா? படித்தவர்களும் இத்தகைய குழப்பமான விளம்பர, சினிமா பாணி மற்றும் வலைதள அரசியலில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்றால் அது நூறு சதவிகித உண்மை. வீட்டுக்குள்ளேயே முழு நேரமும் முடங்கி இருக்கும் இளைஞர்களுக்கு வலைதளத்தில் வருவதே செய்தி. அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பிவிடவும் பழக்கப்பட்டு விட்டனர். கற்பனை வார்த்தைகளுக்கும் மதி மயங்க பழகி விட்டனர். இந்த அரிய வாய்ப்பை விடுவார்களா அரசியல் கட்சிகள்?. எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும் "தகவல் தொழில்நுட்ப பிரிவு" அமைத்து முழு நேரமும் சமூக வலைதளங்களில் மிக தீவிரமாக செயல்படுகின்றனர். அதிலும் முக்கியமாக தேர்தல் நேரங்களில் கட்சிகளினுடைய பிரச்சாரத்தை திட்டமிடவும் வெற்றி வியூகங்களை வகுத்து கொடுக்கவும் அதில் கைதேர்ந்த பல நிறுவனங்களுக்கு கட்சிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே. 

வசதி படைத்த வர்க்கத்தினரை பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை என நினைக்கின்றீர்களா? ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியலில் ஈடுபடுபவர்களும், ஏதாவது ஒரு வகையில் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல் ஆளுமை மிக்கவர்களும், அரசியலால் பலன் அடைவர்களும் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாகவே இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் வாக்காளர்களாக இருப்பதை விடவும் வாக்கினை பெறுபவர்களாக இருக்கின்றனர். அப்படி இருப்பதையே பெருமையாகவும் வசதியாகவும் கருதுகிறார்கள் போலும். எனவேதான் வாக்காளர் கணக்கில் அவர்களை என்னால் வைக்க முடியவில்லை. 

கொள்கைக்காக, உரிமைக்காக, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராட்ட குணத்ததுடன் இருந்த கட்சிகள்தான் ஆரம்பத்தில் கள அரசியலில் இருந்தன. அப்படிப்பட்ட அரசியல் அமைப்பில்  பொது நலம் விலகி காலப்போக்கில் சுயநலம் உள்ளே வர வர அடிப்படை அரசியல் அமைப்பே அடியோடு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட அரசியலை  மிகவும் சாதாரணமாக கடந்த 50 வருடங்களாக மக்கள் பார்க்க தொடங்கியதும் கடந்து போகவும்  தொடங்கியதன் விளைவுதான் இந்த மக்களிடத்தில் எப்பேர்பட்ட சித்து விளையாட்டையும் அரங்கேற்றி ஏமாற்ற முடியும்  என அரசியல்வாதிகள் சிந்திக்கவும் அதனை காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியுடன் திறம்பட செயல்படுத்தவும் வைத்தது. அபாயகரமான விளிம்பில் இன்னும் தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. அதாவது நல்லது செய்ய/நல்லது செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலை மாறி ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும் (அல்லது) என்ன செய்தாலும் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற நிலைக்கு கட்சிகளும் ஆட்சியாளர்களும் மாறி பல தலைமுறைகள் ஆகிவிட்டன. அதனாலேயே "சிஸ்டம் சரி இல்லை", "அடிப்படை அரசியல் மாற்றம்" என அரசியல் வட்டாரத்தில் பலர் கூற நாம் அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறோம். 

ஆக, இத்தகைய மன ஓட்டத்தில்தான் அரசியலில் ஒவ்வொரு செயலும் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் அரசியல் சூழ்நிலைகளும் கட்டமைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நான் முன்னரே கூறியது போல் ஒவ்வொருவரை சுற்றிலும் பல அரசியல் முடிச்சுகள் தெரிந்தோ தெரியாமலோ கட்டப்படுகின்றன. இம்முடிச்சுகளினால் குழப்பம் அடையும் வேட்பாளர்களால் / தாம் கட்டப்பட்டிருக்கிறோம் என தெரியாமலேயே வாக்களிக்கும் வேட்பாளர்களால் தெளிவான முடிவை எடுக்க முடிவதில்லை. அதனால்தான் நல்லவர் தூய்மையானவர் என்று இன்றளவும் போற்றப்படக்கூடிய காமராஜர் உட்பட பலர் தேர்தலில் தோல்வியடையந்தனர். அப்படி ஒன்றும் நல்லவர் இல்லை என சொல்லப்பட்டவர்கள் பலர் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றனர். 

இம்முடிச்சுகளினால் குழப்பம் அடையாமல் ஒவ்வொருவரும் உள்ளபடியே சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது ? நான் மேற்கூறியது போல் அரசியலில்  இம்மியளவேனும் ஆர்வம் கொண்டு, அணுகி ஆராய்ந்து குறைந்தபட்சம் வீட்டிலும் சுற்றி இருப்பவர்களிடமாவது விமர்சனம் செய்ய / விவாதிக்க பழக வேண்டும். 

நான் மேற்கூறிய உதாரணத்தில், அந்த கிராமத்தில் நீங்கள் ஒருவர் என வைத்துக்கொண்டு சற்று பொறுப்புடன் யோசியுங்கள். அங்கு அனைவருக்குமானவராக இருக்கும் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனில் அங்கு என்ன நடந்திருக்க வேண்டும் என உங்களால் யூகிக்க முடிந்தால் அதுவே நல்அரசியல். 

யூகித்து விட்டீர்களா ? என்ன நடந்திருக்க வேண்டும் ? 

என் பார்வையில்/உங்கள் பார்வையில்  ,
ஒன்று, சமுதாயப்பற்று கொண்ட பெரும்பான்மை ஆண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை கடந்து மனிதர்களை கடந்துதான் சாதி, சமுதாயம் என நினைத்திருப்பார்கள் என்று சொன்னால் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருப்பார் .

இரண்டு, ஒவ்வொரு வீட்டு பெண்களும் சுயமாக முடிவு எடுத்து வீட்டை கடந்து ரோட்டுக்காக யோசித்திருப்பார்கள் என்று சொன்னால் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருப்பார். 

ஆக இந்த நல்ல அரசியலுக்கு உங்களது எண்ணமும் செயலும் ஏதேனும் ஒரு வகையில் துணை நிற்கின்றது என்றால் அதுவே அரசியலில் உங்களது அறம். அத்தகைய அறத்துடன் ஒவ்வொரு நொடியும் வாழ்வது நல்வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி புனிதமானது. எனவே, வாக்களிப்பது மட்டும் அரசியல் அல்ல. ஆட்சி அதிகாரத்தில் பெயரளவில் இருப்பதும் அரசியலில் இருப்பது போல் ஆகாது. வாக்காளராக இருக்கும் பட்சத்தில் ஓட்டளிக்கும் முன் வேட்பாளர், கொள்கை மற்றும் திட்டங்களின் நிறை குறைகளை சீர் தூக்கி பார்த்து சிந்தித்து முடிவெடுத்தலும், ஆட்சியாளராக இருக்கும் பட்சத்தில் அரசியல் சாசனத்தின் படியம் அதிகார வரம்புக்கு உட்பட்டும் செயல்படுதலே ஒரு நல்ல அரசியலுக்கு இட்டுச் செல்லும். 

அரசியல் ஓர் சாக்கடை, சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் பெரும்பாலானோர் மற்றும் இலவச அரசியல் அறிவுரை வழங்குபவர்கள் அரசியலை நான் மேற்கூறியவாறுதான் பார்க்கின்றார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. நாம் நம்மை மாற்றிக்கொள்ளாதவரை அரசியல் மாறப்போவதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அரசியலமைப்பை பற்றி திரும்ப திரும்ப குறை கூறியும் எந்த பயனுமில்லை. கடைக்கோடி குடிமகனிடத்தில் எப்பொழுது அரசியல் புரிதல் வருகிறதோ அந்நொடியே  நல்லரசியல் உதயமாகும்.

எனவே, நல்லதோர் அரசியலை நான் எப்படி வரையறுப்பேன் என்றால் 



அரசியலில் மாற்றம் சாத்தியமா ?

எந்தவொரு மாற்றமாக இருக்கட்டும் அது ஓரிரவில் நடந்து விடுவதல்ல. மக்கள் சிந்திப்பதற்கேற்ப கருத்து பரிமாற்றத்தின் வேகத்திற்கேற்ப கால ஓட்டத்தில் மாற்றத்திற்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது. தசாப்தங்கள் தேவைப்படுகின்றன. ஏன் பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படலாம். யாரோ ஒருவரிடத்தில் உதிக்கும் நல்ல சிந்தனைதான் பரவி பரவி ஒரு சமூக மாற்றமாக உருப்பெறுகிறது. அப்படித்தான் பல மூட பழக்க வழக்கங்களில் இருந்து இன்று நாம் வெளிவந்துள்ளோம். உதாரணத்திற்கு முன்பு பழக்கத்தில் இருந்த விதவைகள் வெள்ளை சேலை அணிய வேண்டும் மற்றும் பொட்டு வைக்க கூடாது போன்ற மூட பழக்கங்கள்  இப்பொழுது காணாமல் போய்விட்டது என்று சொன்னால் அதற்கு காரணம் யாரோ சிலரிடத்தில் உதித்த நற்சிந்தனை சமூகத்தில் அனைவரிடத்திலும் பரவலாக்கப்பட்டதுதான். எனவே நமக்கு நல்லது என்று பட்டால் அதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் சலிப்பு பாராமல். ஆண்டுகள் பல ஆனாலும் அக்கருத்து வலுப்பெறும் என்றாவது ஒருநாள். 

மேலே சொன்னவாறு அல்லாமல், மாற்றங்கள் வேகமாக நடக்க வழியில்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி ஒன்று உண்டு. 


நாம் எவ்வளவு படித்தாலும் ஆயிரம் பேர் சொல்லக்கேட்டாலும் நம் அனுபவத்தின் வாயிலாகவும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்தும் கற்றுக்கொள்வதுதான் ஏராளம். "பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்" என்று சொன்னால்தான் சாலப்பொருத்தம். ஆக, மாற்றம் சட்டென நிகழ வேண்டுமெனில்/நம் புத்திக்கு சட்டென உரைக்க வேண்டுமெனில் பட்டால்தான் நடக்கும். இதை எளிதில் விளக்க மிகப்பெரிய உதாரணமாக அமைந்ததுதான் கொரோனா. எதைப்பற்றியும் சிந்திக்காமல் வேகமாக ஓடிக்கொண்டிருந்த மக்களை சட்டென நிறுத்தி ஓராண்டு காலம் வீட்டுக்குள் முடக்கி சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை, சமூக பிணைப்புகளின் பலத்தை, உள்ளூர் சந்தைகளின் அவசியத்தை, சொந்த தொழில் செய்வதின் சாதகத்தை, தொழில்நுட்ப முன்னேற்றத்தை, மன வலிமையின் வீரியத்தை உணரச்செய்தது என்று சொன்னால் அதுவே கொரோனா செய்த நன்மையாக உடனடி மாற்றத்திற்கான வித்தாகவும் நான் பார்க்கிறேன். 

நான் எதற்காக இதையெல்லாம் சொல்ல வேண்டியது உள்ளதெனில், மேற்கூறியது போல படித்தாலும் சரி பட்டாலும் சரி இந்த அரசியலில் மட்டும்தான் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவருவது இயலாத ஒன்றாகவே  இருக்கிறது. 

முதலில் இந்த அரசியலில் மாற்றம் எவ்வாறு பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கப்படுவதால் மாற்றத்தின் முடிவு எவ்வாறு அமைகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மாற்றத்தினை பற்றிய தெளிவான புரிதல் இல்லையென்றாலும் கூட, ஏதாவது மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் தோராயமாக 30-40 சதவிகித்தனர் வரை இருக்கலாம். அவர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றால்,

1. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு பிரதான எதிரியாக இருக்கும் இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால்.
2. அச்சமயத்தில் பேசுபொருளாக உள்ள கட்சிக்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால்.
3. எதிர்ப்பை காட்டுவதற்காகவோ இல்லை வேறு சில காரணங்களுக்காகவோ நோட்டாவிற்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால். 

இது தவிர மாற்றத்தை பற்றி பெரிதாக கவலைப்படாமல் வாக்களிப்பவர்களையும் நம்மால் பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது. 

1. கட்சிக்காக, சாதிக்காக, மதத்திற்காக காலம் காலமாக கண்ணை மூடி வாக்களிப்பவர்கள்.(ஓட்டுக்கு பணமே வாங்கினாலும் கூட)
2. கட்சி சார்ந்திருந்தாலும், உட்கட்சி பூசல் காரணமாக, கூட்டணி கட்சி(கள்) பிடிக்காததன் காரணமாக, தனிப்பட்ட விரோதம் காரணமாக தான் சார்ந்த கட்சி/கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களிப்பவர்கள்.
3.  வாங்கிய பணத்துக்கு நேர்மையாக இருந்துவிடுவோம் என வாக்களிப்பவர்கள்.
4. கவர்ச்சிகரமான அரசியல் பேச்சுக்கள், தேர்தல் அறிக்கைகள், உறுதிமொழிகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கவரப்பட்டு வாக்களிப்பவர்கள் .
5. நண்பரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது யாரோ ஒருவரின் சொல்லிற்கு இணங்க அல்லது நிர்பந்தத்திற்கு உட்பட்டு வாக்களிப்பவர்கள். 
6. ஓட்டு போட வேண்டும் அவ்வளவுதான் எந்த கட்சியா இருந்தா என்ன யார் வேட்பாளரா இருந்தா என்ன என வாக்களிப்பவர்கள். 

இதுதவிர, அரசியலின் மேல் நம்பிக்கையற்று (அல்லது) வெட்டி வேலை, நேர விரயம்தானே இது என நினைத்து (அல்லது) விடுமுறை அன்றும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டுமா என பொறுப்பில்லாமால் வாக்களிக்க செல்லாமல் இருப்பவர்களும் ஏராளம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எப்பொழுதும் சிட்டாய் பறந்து திரிந்து கொண்டு தேர்தல் நாளன்று மட்டும் ஓய்வெடுக்கும் பெரும்பாலான நகரவாசிகள் இந்த ரகம்தான். 

இதையெல்லாம் தாண்டி மிக சொற்பளவே இருக்கும் கடைசி வகைதான் "அறத்தின் பால் வாக்களிப்பவர்கள்". இவர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்.  நேர்மையானவர்கள். யாருடைய உந்துதலுக்கும் ஆட்படாதவர்கள். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அனைத்து வகைகளிலும் அரசியலை அலசி ஆராய்ந்து சீர் தூக்கி பார்த்து சமூக அக்கறையுடன் அனைவருக்காகவும் சிந்தித்து வாக்களிப்பவர்கள். வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள். 

அரசியல் வலையில் அறம் படும்பாடு 

நல்ல மாற்றத்தின் தொடக்கம் மக்கள் சிந்திக்கும்பொழுதே தொடங்குகிறது. அப்படி அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பித்தலாட்ட அரசியல்வாதிகளின் நிலைமை என்னாவது? அதனால் படிப்படியாக அரசியல் அமைப்பையே தங்கள் வசதிக்கேற்ப மாற்றி மக்கள் மனங்களில் எளிதாக ஊடுருவி தாங்கள் நினைப்பதையே மக்கள் செய்யுமளவிற்கு மக்களை ஓட்டளிக்கும் வெறும் ஒரு உயிருள்ள கருவியாக மட்டுமே மாற்றி விட்டனர் என்றால் தயவு செய்து நம்புங்கள்.   

முன்னரே சொன்னதுபோல் நல்லது செய்வதற்கு ஆட்சி வேண்டும் என்பது போய் ஆட்சிக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என எப்பொழுது ஆட்சியாளர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுது சீர்கெட்டு தலைகுனிய தொடங்கிய அரசியல் அமைப்பால் இப்பொழுது வரை நிமிர முடியவில்லை. இப்படி தடம் புரண்ட அரசியலில் என்னவெல்லாம் நடக்கிறது என பார்ப்போம். 

திட்டமிட்ட கருத்துருவாக்கம் 

பேசி பேசி, பாடி பாடி வளர்ந்த கட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அப்பேற்பட்ட கட்சிகளால் அரை நூற்றாண்டை கடந்தும் முக்கால் நூற்றாண்டை கடந்தும் இன்னமும் களத்தில் வலுவாக நிற்க முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் அவர்கள் மக்களுடைய உணர்வில் நேரடியாக கலந்ததுதான்.   இது உள்ளபடியே நல்லதுதான் என்றாலும், நல்லதை போலவே கெட்ட கருத்துக்களும் வேகமாக பரவத்தான் செய்யும் என்ற கணக்கில்  நல்ல கருத்தோ கேட்ட கருத்தோ அதனை மக்களினுடைய உணர்வில் கலந்தால்தான் அரசியல் செய்ய முடியும் ஆட்சிக்கு வர முடியும் என்பதால் இதனை ஆயுதமாக எடுத்து பேசுவதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, சொல்வதை சாத்தியப்படுத்த முடியுமோ இல்லையோ, பேச்சில் நாகரிகம் உள்ளதோ இல்லையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடி பொய்களையும் புரட்டுகளையும் அள்ளிவிட்டும் (மற்றும்) போலியான, சாத்தியமில்லாத மற்றும் முரணான கருத்துகளால் குழப்பியும் (மற்றும்) ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகும் என்ற கணக்கில் ஏதோ ஒரு கருத்தை வலுவாக உருவாக்கம் செய்து அதை கொள்கைபிடிப்பு போதையாக, கவர்ச்சிகர போதையாக, உணர்வு போதையாக மக்களிடத்தில் செலுத்துகின்றனர். இதில் மூளைச்சலவையடையும் மக்களால் போதையிலிருந்து விடுபட முடியாமல்  மனக்கண்ணை மூடிக்கொண்டுதானே வாக்களிக்க முடியும். 

அவர்கள்தான் இவர்களா ?

உதாரணமாக தங்களை ஊழலுக்கு எதிரான கட்சியாக, மத சார்பற்ற கட்சியாக, சமூகநீதிக்கான கட்சியாக, தொழிலாளர்களுக்கான கட்சியாக,  சிறுபான்மையினருக்கான கட்சியாக, மாநில உரிமைக்கான கட்சியாக, தாய்மொழியை தூக்கிப்பிடிக்கும் கட்சியாக, ஆன்மீகத்தை போற்றும் கட்சியாக ஏழை அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக காட்டிக்கொள்ள முற்படும் பல கட்சிகள் உள்ளபடியே அதற்கு தங்களின் செயல் மூலமாக நியாயம் சேர்க்காமல் திரும்ப திரும்ப அதை சொல்லி சொல்லி உண்மைக்கு புறம்பாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தவே முயல்கின்றனர்.   அதனால்தான் இதனை "திட்டமிடப்பட்ட கருத்துருவாக்கம்" என்ற அளவில் மட்டும் என்னால் பார்க்க முடிகிறது. 

அட ஆமாங்க..  எதிர்க்கட்சியில்  இருந்தால் ஊழல்வாதி. தம் கட்சிக்கு வந்துவிட்டால் நிரபராதி என்றிருக்கும் கட்சி தங்களை ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால்  நம்பமுடிகிறதா ?

ஒரு குறிப்பிட்ட மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், மற்ற மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் கட்சி தங்களை  மத சார்பற்ற கட்சி என்று சொன்னால் என்ன செய்வது ? 

வெற்றிக்காக தொகுதியில் செல்வாக்குள்ள ஒரு சாதிக்கட்சியை கூட்டணிக்குள் வளைத்து போட்டு, சாதி சார்ந்தவரை வேட்பாளராகவும் நிறுத்திவிட்டு சாதிய தீண்டாமையை ஒழிக்கும் கட்சி நாங்கள்தான் என்றால் எப்படி ?

தலைவர் வெற்றி பெற, தலைவர் கைகாட்டியவர் வெற்றி பெற  கடும் உழைப்பை கொடுத்து வேலை செய்யும் ஏழை எளிய தொண்டர்கள் நிறைந்த கட்சியில் , தொண்டர்கள் மென்மேலும் ஏழையாக தலைவரின் சொத்து மட்டும் எகிறிக்கொண்டு போகிறது என்று சொன்னால், இவர்களா தொழிலாளர்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் இருக்க போகிறார்கள் ?

அரசு வேலைவாய்ப்பில் விவாதத்திற்குரிய இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசும் கட்சிகள், உள்ளபடியே கட்சி பதவிக்கும், உயர்பொறுப்பிற்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் இதே போல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமே. ஏன் கண்டுகொள்வதில்லை. இவர்கள்தான் சமூக நீதியை காப்பவர்கள் ஆயிற்றே.
 
ஓர் அமைச்சர் பதவிக்காக, சுய நலன்களுக்காக  பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொடுக்க முடிகிறது, மாநில பகுதிகளை தாரை வார்க்க முடிகிறது, சொந்த கட்சியையே அடகு வைக்க முடிகிறது என்று சொன்னால் இதற்கு பெயர் சந்தர்ப்பவாதம். இச்சந்தர்ப்பவாத கட்சிகள்தான் மாநில சுயாட்சியை , மாநில உரிமைகளை காக்க போராடுபவர்களா?
 
சர்வதேச அளவிலான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளை நடத்துவதும், தமிழ் படித்தால் முன்னுரிமை என சடங்குக்காக ஊருக்கு உபதேசித்துவிட்டு தமது பிள்ளைகளை வெளிநாட்டிலும் சர்வதேச தரத்திலான பள்ளிகளில் படிக்க வைப்பதும்,  தமிழ் படிக்க தெரியாத வேட்பாளர்களை களத்தில் இறக்குவதும், தமிழரே அல்லாத வேட்பாளர்களை களத்தில் இறக்குவதும் யார் என்று நினைக்கிறீர்கள்? தமிழர், தமிழர் பண்பாடு, தமிழ்நாடு, தமிழ் தேசியம், தமிழ் வாழ்க என்று கூறி முதன்மைப்படுத்தும் கட்சிகள்தான். இதனை எப்படி வரையறுக்க. கொள்கைமுரணா ? அரசியல்முரணா?  அடையாளமுரணா ? புரியவில்லைதான் எனக்கும். நான் கேட்க விரும்புவது, தமிழுக்காக இவ்வளவு பேசும் கட்சிகள் , காணுமிடமெங்கும் தென்படும் பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் தமிழும் இடம்பெற வேண்டுமென ஏன் சொல்லமுடிவதில்லை. அப்படி செய்தால் அதுவே ஒரு பெரிய புரட்சிதானே.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, இந்த அரசியலுக்குள் கடவுள்களையும் இழுத்துவிட்டனர் என்பதே மிகவும் வருந்தத்தக்க செய்தி. செய்வது ஒன்று சொல்வது ஒன்றாக இருக்கும் அவர்கள்தான் இவர்கள் என்பதை அவர்களின் கடவுளோ (அ) நாம் வணங்கும் கடவுளோ தான் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும். கடவுளுடன் சேர்ந்து நாமும் தப்பித்து கொள்ள பிரார்த்திப்போம் .  

முன்னிறுத்தப்படும்  முகங்கள் 

வாக்குகளை கவருவதற்காக மேற்சொன்னவாறு எப்படி கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகிறதோ அதே போல் ஈர்ப்பு உள்ள முகங்களை முன்னிறுத்தி பெயர்களை அடையாளப்படுத்தி வாக்குகளை கவரும் காட்சிகளை அன்றிலிருந்து இன்றுவரை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சினிமாவுடன் தொடர்புடனே இருந்துள்ளது. திராவிட கட்சிகளின் கொள்கைகளை வசனத்தின் மூலம் கருணாநிதி அவர்கள் பரப்பினார் என்றால் அதனை வெகுஜன மக்களிடத்தில் காட்சி ஊடகத்தின் வாயிலாக கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியது எம்.ஜி.ராமச்சந்திரனின் முகமே. இந்த முகம்தான் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெறுவதற்கு அடித்தளமிட்டது. இதை ஆரம்பத்திலேயே உணர்ந்த கருணாநிதி அவர்கள் தனது மகன்களான முத்து , ஸ்டாலின் அனைவரையும் திரையில் நடிக்க வைத்தார். இன்னொரு மகன் தமிழரசு தயாரிப்பாளர் ஆனார். அதன் தொடர்ச்சியாக தான் இன்று கருணாநிதி பேரன்கள்(உதயநிதி,அருள்நிதி, தயாநிதி), அக்கா மகன்கள்(கலாநிதி) உட்பட அனைவரும் நடிகராகவோ, தயாரிப்பாளர்களாகவோ சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  இதே போலவே எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் சினிமா துறையில் வெற்றி பெற்றிருந்த ஜெயலலிதா அவர்கள் அரசியலிலும் வளர ஆரம்பத்தில் அடித்தளமாக இருந்தது அவரது முகம்தான். இதே போன்று அவர்களின் பெயரை அடையாளப்படுத்துவதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. பொதுவாகவே சினிமா நடிகரை பிரபலப்படுத்தும் விதமாக புனைபெயரை கொண்டு அழைக்கும் வழக்கம் அன்று முதல் இன்று வரை தேவையில்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது அரசியலுக்கும் பொருந்தும். உதாரணமாக பகுத்தறிவு பகலவன் பெரியார் , பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், தளபதி ஸ்டாலின், சின்னம்மா, மக்கள் செல்வர் உட்பட புனைபெயர்கள் ஏராளம்.   கடந்த இருபது  வருடங்களாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் கூட தலைவர்களின் முகங்களும் பெயர்களும் இடம்பெறுவது வாடிக்கையாகி விட்டது. உதாரணமாக கலைஞர் வண்ணத்தொலைக்காட்சி திட்டம், அம்மா மடிக்கணினி, அம்மா உணவகம் உட்பட பல திட்டங்கள். இது தவிர தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்குவதும், தலைவர்களுக்கு ஆங்காங்கு சிலை வைப்பதும், தெருக்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உட்பட பல இடங்களுக்கு தலைவர்கள் பெயரை வைப்பதும், தலைவர்களை புகழ்பாட சினிமா கலைஞர்களை கொண்டு விழா எடுப்பதும் அடங்கும். தற்கால அரசியலில் நீங்கள் காணக்கூடிய வாசகங்களான "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்", "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" எல்லாமே கட்சியின் ஒற்றை முகமாக தன்னை முன்னிறுத்தி பெயருக்கான வலிமையை கூட்டுவதே. இதில் சமகால அரசியலில் முன்னிடத்தில் இருப்பவர்தான் பிரதமர் மோடி. குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 13 வருடங்கள் தொடர்ச்சியாக முதல் அமைச்சராக இருந்த மோடி பாஜகவின் முகமாக இருந்ததால் பிரதமர் போட்டிக்கு வந்தார். அவர் வந்த பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்ததால் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிடத்தில் கூட மோடியின் முகம் பரிச்சயமானதுடன் பெயரும் பிரபலமானது. அப்படிப்பட்ட மோடியின் முகத்தையும் பெயரையும் வைத்து மட்டுமே பாஜக இத்தேர்தலை பெரும்பாலான மாநிலங்களில் முக்கியமாக தென்னிந்தியாவில் சந்திக்கிறது என்று சொன்னால் இது தற்செயலாக நடப்பது அல்ல. அரசியல் செய்வதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டு செய்யப்படும் செயல்களில் இதுவும் ஒன்று. கொள்கைகள் வலுவிழந்த பட்சத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் முகங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவரின் முகம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் பெயர் திரும்ப திரும்ப உச்சரிக்கப்படுவதால் அவரை வலிமையான தலைவராக வல்லவராக மக்கள் பார்ப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் கணக்கா, ஒருவர் கோர்வையா வசீகரமா பேசிவிட்டால் போதும் அவர் எது பேசினாலும் உண்மைதான் நல்லது செய்வான் என்று நினைக்கக்கூடிய சமூக பழக்கத்தில் முகத்திற்கும், பேச்சுக்கும், உடல் மொழிக்கும் வலிமை இருக்கத்தானே செய்யும்.  இந்த அரசியல்தான் வாக்குகளை அறுவடை செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிநபரை முன்னிறுத்துவது போலவே, ஒருவருடைய  அடையாளங்கள் கட்டமைக்கப்படுவதும் , அரசியலாக்கப்படுவதும் சராசரி அரசியலின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. ஒரு உதாரணத்திற்கு, 2021 தேர்தலுக்கு முன்பாக அரசியல் ஆலோசகரின் ஆலோசனைப்படி ஸ்டாலின் அவர்களுக்கு செய்யப்பட்ட சிகை அலங்காரம் உள்ளபடியே ஒரு தலைவருக்குண்டான மதிப்பை கூட்டி வாக்குகளை பெறுவதில் ஒரு சிறிய பங்களித்தது என்றால் என்னால் இப்படித்தான் சொல்ல முடிகிறது அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதோ இல்லையோ முகத்தின் அழகு வாக்குகளில் தெரியும் வரலாற்றில் அடையாளமாகும். ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா அவர்கள் ஜெயலலிதா அவர்களை போன்றே உடையணிந்து பவனி வந்தார் என்று சொன்னால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கட்சியை தாண்டி கொள்கைகளை தாண்டி நலத்திட்டங்களை தாண்டி ஒரு தலைவரின் முகத்தை வைத்து, உடல்மொழியை வைத்து, மக்கள் மனங்களில் எப்படி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை  வைத்து இங்கு செய்யப்படக்கூடிய அரசியல் வானளவிற்கு நீளும். ரத்தினசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது  அம்மா வழியில் நடக்கும் ஆட்சி, கலைஞர் கருணாநிதி மகன் ஸ்டாலின் பேசுகிறேன், வேண்டும் மோடி மீண்டும் மோடி போன்ற முழக்கங்களை நீங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள் என்றால் மீண்டும் ஒருமுறை தலைப்பினை பார்த்துவிடுங்கள்.    

குறிப்பு  : கடந்த கால வரலாறு நமக்கு சொல்வது ஒன்றுதான். தேர்தலில் வெற்றி பெற நல்லவராகவோ, திறமையாளராகவோ இருப்பதை விட வல்லவராக இருத்தலே முக்கியம். திறமையாளராக இருந்தால் இறந்த பிறகு ஒரு பத்ம விருது கிடைக்கலாம். நல்லவராக இருந்தால் இறந்த பிறகு நாலுபேர் நான்கு சொட்டு கண்ணீர் விடலாம். உயிருடன் இருக்கும்போது எதுவும் கிடைக்காது. இதுவே இன்றைய எதார்த்த அரசியல். 

தலைதூக்கும் வாரிசு அரசியல் & வலுவிழக்கும் கருத்து சுதந்திரம்

தனிநபர் சார்ந்து அவர்களை முன்னிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று கேட்டால், நான் மேற்சொன்னது போல் தன்னை முன்னிலைப்படுத்தி வலிமை பெற கூடிய தலைவர்கள் கட்சியில் யாரும் தனக்கு நிகராக வர கூடாது என்பதில் உறுதி காட்டுவதை பல நேரங்களில் கண்கூடாக கண்டிருக்கிறோம்.  தன் மகனுக்கு போட்டியாக வந்துவிடுவார் என்ற அச்சத்தின் அடிப்படையில் திமுகவின் போர்வாளாக பிரச்சார பீரங்கியாக வலம் வந்த வைகோ அவர்கள் கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தனிக்கட்சி தொடங்கி வாரிசு அரசியலை கடுமையாக சாடிய வைகோ மீண்டும் திமுகவுடன் இணைந்து அரசியலிலே இல்லாமல் இருந்த தனது மகனை கட்சியின் தலைமை நிலைய செயலாளராக்கி இன்று கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதியிலும் தன் மகனை நிறுத்தியுள்ளார் என்றால் இதுதான் அரசியல்முரண். அதே போலத்தான் 1982இல் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். பின் 1984இல் மாநிலங்களவை உறுப்பினராக பதிவியேற்று மத்திய தலைவர்கள் பலருடன் நட்பு பாராட்டியதால் ஜெயலலிதா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற செல்வாக்கை எம்.ஜி.ஆர் அவர்களே விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இது போல் பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கட்சியில் ஒருவர் செல்வாக்கு பெற்றால் (அ ) தனக்கு நிகராக ஒருவர் கட்சியினரால் பார்க்கப்பட்டால் தனக்கு ஆபத்து என்ற நிலையில் தான் ஜனநாயகத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பல்வேறு வகைகளில் தங்களை கட்சியின் முகமாக்க முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர் கட்சி தலைவர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் கட்சியின் முக்கிய பொறுப்புகளும் ,  மாநில செயலாளர் பதவியும்  தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது. தலைவனை போல தொண்டன் என்ற அடிப்படையில், மாநில செயலாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை பல்வேறு பதவிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். இதன் விளைவாகத்தான் நேர்மையானவர்கள், நல்லவர்கள், ஜனநாயகவாதிகள்  கட்சிப் பதவிக்கு வரமுடியாமல் சொம்படிப்பவர்களும், செலவு செய்பவர்களும்தான்  கட்சிப்பதவிக்கும்,  வேட்பாளராகவும் வர முடிகிறது. இப்பேற்பட்டவர்களுக்கு உள்ளபடியே கட்சியில் பதவியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாததால் வெற்றி பெறுவதற்கு வரம்புக்கு மீறி செலவு செய்வதையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் அரங்கேற்றுகின்றனர். இப்படி செலவு செய்பவர்கள் வெற்றி பெற்றவுடன் ஆட்சி முடிவதற்குள் அதிகபட்சம் எவ்வளவு ஈட்டமுடியுமோ அதற்கான வேலைகளிலேயே ஈடுபடுகின்றனர். அங்கிருந்து ஊற்றெடுக்க ஆரம்பித்ததுதான் ஊழல். திரும்பவும் தேர்தல் வரும்பொழுது போன முறை கொடுத்ததை விட சற்று அதிகம் கொடுக்கும்பொழுது மீண்டும் வெற்றி கிட்டுகிறது. திரும்பவும் ஊழல் அதிகரிக்கிறது. ஊழல் செய்வதற்கு ஏதுவாக கட்சிக்கு நிதியும் கட்சித்தலைமைக்கு கமிஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த நிதியும், கமிசனாக கிடைத்த கருப்புப்பணமும் தான் தேர்தல் மாநாட்டுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அரசியல்தான் தற்பொழுது அனைவராலும் சராசரி நிகழ்வாக பார்க்கப்படும் நடைமுறை அரசியலாக மாறியுள்ளது. இப்படி அரசியல் மாற்றப்பட்டதின் விளைவுதான் ஜன நாயகம் கேள்விக்குறியானதுக்கும், வாரிசு அரசியலுக்கும் வழிவகுத்துள்ளன. 

இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு தோன்றுவது போலவே எனக்கும் ஞாபகத்திற்கு வருவது உதயநிதி ஸ்டாலின்தான். எங்கள் குடும்பத்தில் இருந்து சத்தியமாக யாரும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் சொன்ன பிறகு இரண்டே வருடத்தில் அதாவது 2018-ஆம் வருடம் தனது 40ஆவது வயதில் அரசியலுக்குள் நுழைந்த உதயநிதி அவர்கள் 2019இல் இளைஞர் அணி செயலாளர், 2021 இல் சட்ட மன்ற உறுப்பினர், 2022இல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், 2023 இல் கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலும், கட்சி தொண்டர்களின் சட்டை பைகளிலும், ஒட்டப்படும் சுவரொட்டிகளிலும் வீற்றிருக்கிறார் என்றால் இதே நிலை தொடர்ந்தால் 2026இல் முதலமைச்சரும் இவரே. ஸ்டாலினை விட அனுபவம் வாய்ந்த, அறிவிற் சிறந்த, 60 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கூட அரசியலில் 5 வருடமே அனுபவம் கொண்ட  உதயநிதிக்கு கீழ் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் ஜனநாயகம் என்ற வார்த்தை நாட்டுக்கு மட்டும்தானா கட்சிக்குள் இல்லையா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. அனைவருக்கும் எளிதாக புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணத்தை சொல்ல வேண்டியதாயிற்று. இதே போலத்தான் ஒவ்வொரு கட்சியும் தங்களது வசதிக்கேற்ப தங்களது சக்திக்கேற்ப ஜனநாயகத்தை வளையோ வளையென வளைக்கின்றனர். 

வளர்ச்சி அரசியலுக்கு மாறாக வாக்கு அரசியல் 

முன்பெல்லாம் சாலை போட்டு தந்துள்ளோம், குடிநீர் வசதி செய்து தந்துள்ளோம் என்றெல்லாம் சொல்லி ஒட்டு கேட்டதை நாம் பார்த்திருக்கிறோம். தாங்கள் செய்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என சொல்லி ஓட்டு கேட்டார்கள். அதில் நம்பிக்கையை பெற்றவர்கள் மக்களிடையே செல்வாக்கை பெற்று வெற்றியடைந்து வந்தனர் . பெரும்பாலும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்திய (எ) சமூக வளர்ச்சியை மையப்படுத்தியே இருந்தது முன்பிருந்த அரசியல். அது இப்பொழுது எப்படி தடம் புரண்டுவிட்டது என்றால் ஆட்சிக்கு வருவதற்கு வாக்குகளை பெறுவதற்கு அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மாறிவிட்டது.   இன்னும் சொல்ல போனால் ஆட்சிக்கு வருவதற்கு என்ன வேணாலும் செய்யலாம் என்ற மன நிலைக்கு அரசிய கட்சிகள் வந்துவிட்டன என்றால் மிகையல்ல. இதன் அடிப்படையிலேயே பல அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தன் கட்சிக்கு இதுதான் கொள்கை என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அதற்கு நேரெதிரான கொள்கை கொண்ட கட்சியுடன் கூட்டணி வைக்கிறது என்று சொன்னால் அங்கு வெற்றி பெறுவதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர நல்லரசியல் நீர்த்து போகிறது. இது வெறும் வாக்கு அரசியலே. வெற்றியோ தோல்வியோ கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதல்லவோ நம்பிக்கைக்குரிய அரசியல். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை உயர்த்துவதற்கான திட்டங்களை, ஏழை எளியோருக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களை தந்த காலம் மறைந்து, வெகுஜன மக்களை வாக்குகளுக்காக ஈர்ப்பதற்கான திட்டங்கள் பல அறிவிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பெண்களை குறிவைத்து இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை இது போன்ற திட்டங்கள் பெண் வாக்காளர்களை குறிவைத்தே நடைமுறை படுத்தப்படுகிறது. அதாவது போதுமான வேலைவாய்ப்பு, தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சாலை வசதிகள், தரமான உட்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காரணிகளை தடுத்தல், தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு, மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகள்,  சிக்கலின்றி தினசரி வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்தல் போன்றவற்றை ஒரு அரசு கவனத்தில் எடுத்து முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களில் முதலீடு செய்து வளர்ச்சி அரசியலுக்கு வழி  கோணாமல்  மக்களிடமிருந்து வரியை பெற்று திரும்பவும் மக்களின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது என்பது எப்படிப்பட்ட அரசியல் ?  மாதம் தோறும் அரசு நமக்கு பணம் தருகிறது என்ற எண்ணத்தை மக்களிடத்தில் உருவாக்கி தினசரி வருமானம் முக்கியம் என்றிருக்கும் ஏழை நடுத்தர குடும்பங்களின் வாக்குகளை பெறுவதற்கான வாக்கு அரசியல் தானே இது ? இலவச பேருந்துகளுக்கு பதிலாக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, நியாயமான பேருந்து கட்டணத்தை வசூலித்து வளர்ச்சி அரசியல் செய்யலாம். வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி அதன் மூலம் பெண்களை உள்ளே வரவைத்து பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுத்தால் அது அவர்களுக்கு சமுதாயத்தில் உரிமையை தாண்டி மரியாதையையும் கொடுக்கும். மாநிலமும் வளர்ச்சி அடையும் நாடும் வளர்ச்சி அடையும். இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என்பது எவ்வளவு வேடிக்கை. அதிலும் மாணவர்களுக்கு இல்லை என்பது என்ன கணக்கோ? இந்த செயல்களை எல்லாம் வாக்குகளுக்காக செய்யப்படும் அரசியலாக இல்லாமல் வேறு எப்படி பார்க்க முடியும் ? இதே போலத்தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் அது நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கிறதா என்று பார்க்காமல் அதனால் வாக்கு வங்கிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என தெளிவுடன் பார்த்து கொள்கின்றனர். இதில் அரசியல்வாதிகளை மட்டும் தவறு சொல்லி பயனில்லை.  அதற்கு இடம் கொடுப்பதே பெரும்பாலான மக்கள்தானே. பரந்துபட்ட மன நிலையில் யோசிக்காமல் தான், தன் குடும்பம் என குறுகிய வட்டத்திற்குள் யோசிப்பதனாலேயே வளர்ச்சி என்பது என்ன என்பதும் புரிவதில்லை. வாக்குகளை பெற எப்படி அரசியல் செய்கின்றர்கள் என்பதும் புரிவதில்லை.

வாக்குக்கு பணமும் கட்சிக்கு நிதியும் ஆட்சிக்கு ஊழலும் 

தேர்தல் நேரத்தில் எப்படி தெரியாமல் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதோ, அதற்கு கிட்டத்தட்ட நிகரானதுதான் மேல சொன்னதை போல் திட்டங்கள் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படக்கூடிய பணம். இதனை எல்லாம் மக்கள் சாதாரணமாக எடுத்து கொண்டதின் விளைவுதான் காலத்திற்கு ஏற்ப பல்வேறு முறைகளில் ஓட்டுக்கு பணம் அளிக்கும் கலாச்சாரம் பெருகி கொண்டே வருகிறது. ஒரு ஓட்டுக்கு 500இல் இருந்து ஆரம்பித்து 5000 வரை செலவிடப்படுகிறது வேட்பாளரின் செல்வாக்கை பொருத்தும் மக்களின் எதிர்பார்ப்பை பொருத்தும் நடைபெறக்கூடியது இடைதேர்தலா, சட்டமன்ற தேர்தலா, உள்ளாட்சி தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா என்பதை பொருத்தும் அமைகிறது. பணத்திற்கு பதில் பொருளாக கொடுப்பதும், டோக்கன் சிஸ்டம் முறையில் டோக்கனை கொடுத்தால் பொருளை வாங்கி கொள்ளலாம் என்பதும் அரசியலில் கைதேர்ந்தவர்கள் பாணியாக உள்ளது. மாநாடு நடந்தால் பிரியாணி, குவாட்டர் சேர்த்து 200இல் இருந்து 500 வரை கொடுக்கப்படுவதும் நாம் அறிந்ததே. அதுவும் இடைத்தேர்தல் வந்துவிட்டால் மக்களுக்கு கொண்டாட்டம்தான். பட்டி கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டதும் இடைத்தேர்தலில்தான். அதாவது வேறு எந்த கட்சி வேட்பாளரும் மக்களை நெருங்காதபடி அவர்களை ஆடுகளை அடைப்பது போல் பட்டிக்குள் அடைத்து வைத்து தினமும் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விடுவது. இந்த மாதிரியான செலவுகளை செய்வதற்கு கட்சிக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி எப்படி வருகிறது என்று சொன்னால் தேர்தலில் நின்று வெற்றி பெறுபவர்களும், மாநில செயலாளர்களும், பெரும்தொழில் செய்யக்கூடிய செல்வந்தர்களும் தங்களுடைய வளர்ச்சி எக்காரணத்தினாலும் தடைபட்டுவிட கூடாது என்ற நோக்கில் ஆட்சியினரின் அபிமானத்தை பெரும் வகையில் கட்சிக்கு நிதி அளிக்கின்றனர். தேர்தல் பத்திரம் வாயிலாக ஒவ்வொரு கட்சியும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து எவ்வளவு நிதி பெற்றிருக்கிறார்கள் என்பது சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (அதிகமாக தேர்தல் நிதி வாங்கியதில் தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும் முதன்மையில் உள்ளனர்). இவ்வாறு கட்சிக்கு நிதி வர வேண்டுமெனில் கட்சிக்கு நிதி அளிப்பவர்களுக்கு சாதகமாக  ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். கட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது செலவு செய்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், கட்சிக்கு நிதி கொடுத்தால்தான் நமக்கு சீட்டு கிடைக்கும் என்ற நோக்கிலும் ஊழலில் ஈடுபடுகின்றனர். இதனால் நிரந்தர ஆதாயம் அடையப்போவது ஆட்சியாளர்களும், கட்சிக்காரர்களும், பெரும் முதலாளிகளுமே. பாதிக்கப்பட போவதென்னமோ வாக்காளர்களாகிய நாம்தான். கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நீங்கள் உற்று நோக்கினால் எங்கு பார்த்தாலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு துறை நடத்தும் சோதனைகளை நீங்கள் அறிய முடியும். இது வருடா வருடம் அதிகரித்து கொண்டு செல்வது எதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று சொன்னால் அதிகரித்து கொண்டு செல்லும் முறைகேடுகளையும் ஊழலையும்தான். ஆனால் எப்படியோ தப்பித்து கொள்கிறார்கள். விசாரணை நடக்கிறதே தவிர யாரும் தண்டிக்கப்பட்டதாக செய்தியில்லை என்பது உள்ளபடியே இந்த விசாரணை அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கவே செய்கிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த அமைப்புகள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் பட்சத்தில் பல ஊழல்வாதிகள் சிறைக்குள்ளே  செல்வார்கள் என்பதுதான் உண்மை. ஆக இதனை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். 


தெருக்கோடியும் பல கோடியும் 

ஊழல் தடுக்க முடியவில்லை என்று சொன்னால், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதையும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதையும் யாரும் தடுக்க முடியாது. ஒரு பெரிய இடைவெளியை மக்களுக்கு இடையில் ஏற்படுத்தும் அபாயத்தையும் கொண்டதுதான் இந்த ஊழல். மேலே சொன்னது போல் தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்ததும் ஆசை வார்த்தை காட்டியும் மக்களை வாக்களிப்பதற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு பெரும் நிறுவனங்களுடனும் தொழில் அதிபர்களுடனும் , செல்வந்தர்களுடனும் சுமூகமான உறவை கையாண்டு அவர்களுக்காகவே அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. ஏழைகளுக்கு ஆயிரங்களில் கடன்கள் கொடுப்பதை பெருமையாக சொல்லி அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள் சத்தமே இல்லாமல் முதலாளிகளுக்கு  கோடிகளில் கடனை தள்ளுபடி செய்வது எதன் அடிப்படையில்? ஆட்சியில் இருப்பவர்களும் செல்வந்தர்களும் பரஸ்பரம் பலனடையும் வகையில்தானே இருக்க முடியும். தாங்கள் ஈட்டும் கருப்பு பணத்தை பதுக்குவதற்கும், வெள்ளையாக மாற்றுவதற்கும் என்ன என்ன செய்கிறார்கள் என்பது நாம் கண்கூடாக அறிந்ததுதான். கருப்பு பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதும், பினாமி மூலமாக நிர்வகிப்பதும், சினிமா நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் மூலமாக கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதும் அரசியல்வாதிகளின் அன்றாட வேலை. ஒன்றுமே இல்லாமல் அரசியலுக்கு வந்தவர்கள் இன்று ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆனதும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு ஒவ்வொரு முறை தேர்தல் பிரமான பத்திரம்  தாக்கல் செய்யும்பொழுதும் 100%, 200% சதவிகிதம் அதற்கும் மேலாகவும் எப்படி அதிகரிக்கிறது என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆண்டவனுக்கே  வெளிச்சம். இது ஒருபுறமிருக்க, பட்டினியில் விவசாயிகள் இறப்பதும் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், கூலிக்கு மீறிய வேலையும், பண வீக்கமும், விலைவாசி உயர்வும், பசிக்கொடுமையால் பிச்சையெடுப்பதும் மற்றொருபுறம் அதிகரித்துக்கொண்டுள்ளன. அதாவது மேல்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தால் அபாயத்திலேயே முடியும். இது தொடரும் பட்சத்தில் மக்களுக்கு இடையில் குழப்பங்களும் சண்டைகளும் அதிகரித்து அடக்குமுறையும், தீவிரவாதமும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. நீங்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவராக செய்தித்தாள்களை தினமும் புரட்டுபவராக இருந்தால் உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடக்கும் செயல்களை விட பெரும்பாலான கொலை கொள்ளைகளுக்கு சமூக பிரச்சனைகளே காரணமாக உள்ளது. ஒருவர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் சர்வ சாதாரணமாக திருட்டு, கொலை , கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.கூலிப்படையாகவும் மாற்றுகின்றனர்.  அதே போல் ஏதேனும் ஒரு வகையில் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்று நினைக்கும் மக்கள் படிப்படியாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். உட்சபட்சமாக தற்கொலைப்படையாகவும் மாறுகின்றனர். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இப்பேற்பட்ட குற்றச்செயல்கள் இந்திய போன்ற சிறிய பரப்பளவு கொண்ட நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப வரும்காலத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கலாம். ஒரு நல்ல அரசு என்றால் இதனை கவனிக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும். இல்லையென்றால் இது வருங்காலத்தில் உள்நாட்டு பிரச்சைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் உருவாவதற்கும் வழி  வகுக்கும். அப்படி நிகழும்போது சில நாடுகளில் உள்ளதை போல் சுதந்திரத்தை பறிகொடுத்து நாட்டுக்குள்ளேயே அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாடுகளுக்கிடையே போர் நடக்கும் சூழலும் வரலாம். 

ஊழலில் ஆரம்பிச்சு போருக்கு வந்திடுச்சா ?  என்னடா கதை கதையா விடுற என்று கேட்க தோன்றுகிறதா?.

ஆம். கருத்து சுதந்திரம் இல்லாதபொழுது, தனி மனித பொருளாதாரம் சிதைக்கப்படும்போது, உரிமைகள் பறிபோகும்பொழுது, இவையனைத்திற்கும் காரணமாக ஆட்சியில் உள்ள ஒரு கட்சியே இருக்கும்போது, அதை ஆட்சியாளர்கள் உணர தவரும்பொழுது இன்று நாளையோ உடனடியாக இல்லையென்றாலும் கூட அரை நூற்றாண்டுக்கு பிறகோ, ஒரு நூற்றாண்டுக்கு பிறகோ நாடுகளுக்கு இடையில் சமூகம் இல்லாமல் போகலாம். அதை பயன்படுத்திக்கொண்டு நாட்டை ஆக்கிரமிக்க  மற்ற நாடுகள் முனையலாம்.

பிரித்தாளும் அரசியல் & பழிவாங்கும் அரசியல் 

நாம் மட்டுமே ஆள வேண்டும், நம் குடும்பம் மட்டுமே தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று ஒரு கட்சி நினைத்தால் அது ஜனநாயகத்தின் அழிவிற்கு இட்டுச்செல்வதாகவே இருக்கும். எதிர் கட்சிக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதை விடுத்து கட்சியையே அழித்து விட வேண்டும் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அப்படிப்பட்ட நிலைமையே நிலவுகிறது. எதிர்க்கட்சியில் உள்ளவர்களை தம் கட்சிக்கு இழுப்பதும், எதிர்க்கட்சிகளின் மேல் வழக்கு போடுவதும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பில் தலையிடுவதும், எதிர்க்கட்சியில் பிளவை உருவாக்கி தமக்கு சாதகமாக்குவதும் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு அழகல்ல. அதே போல், பல்வேறு மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் உள்ளடக்கிய பன்முகத்தன்மைக்கு இலக்கணமாக உள்ள நாட்டில் தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரே மொழி, ஒரே தேர்தல் என திணிப்பது சரியானதும் அல்ல. ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான உறுப்பினர்களின் பலம் இருந்தாலும், அதை பொது தளத்தில் வைத்து அந்த சட்டத்தின் சாதக பாதகங்களை ஆரோக்கியமான முறையில் விவாதித்து முறைப்படி நிறைவேற்ற ஒரு கட்சி நினைக்குமானால் அவர்களை எத்தனை முறை வேணாலும் அரியணையில் ஏற்றலாம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தாங்கள் நினைக்கும் எதனையும் செய்யலாம் என்று ஒரு கட்சி நினைப்பதும், அதற்கு எதிர்ப்பு வரும் பட்சத்தில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதும், பழிவாங்கவும் செய்யலாம் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுத்துவிடும் செயல்.   

மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும் 

மாற்றமோ / புரட்சியோ சமூகத்தில் ஏற்பட வேண்டும் என்று சொன்னால்  ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தனிமனிதரிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக மிக மோசமான ஒரு நிலையை பரவலாக ஒரு சமூகம் சந்திக்கும்பொழுதே தனிமனிதரிடத்தில் மாற்றம் வருகிறது. அப்படி அல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ, அரசியலிலோ ஒரு முடிவு எடுக்கப்படும்பொழுது அதனை எளிதாக கடந்து செல்லாமல் சற்றே நம் அறிவை கொண்டு ஆராய்ந்து விவாதித்து அந்த முடிவை சுற்றியுள்ள அரசியலை விளங்கிக்கொண்டு நமது நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கும் கடத்த வேண்டும். நாம் நினைப்பதா நடக்க போகிறது என்றில்லாமல், யாராவது நியாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று காத்திருக்காமல் நமக்கு சரி என்று படுவதை முழங்க வேண்டும். அப்படி நாம் சொல்லக்கூடிய கருத்து எவர் சார்பும் இல்லாமல் அனைவருக்குமானதாக அறத்துடன் இருத்தல் மிக அவசியம். 

காலத்திற்கு ஏற்ற அரசியல் எது ?

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான அரசியல் தேவைப்படுகிறது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சியாக மாற ஜனநாயக அரசியல் தேவைப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் சுதந்திரம் பெற அடக்குமுறையை எதிர்க்க அகிம்சை அரசியலும் போராட்ட அரசியலும் தேவைப்பட்டது. காலம் காலமாக இருந்து வரும் மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க பகுத்தறிவு அரசியல் தேவைப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற சமத்துவ அரசியல் தேவைப்பட்டது. வீட்டுக்குள் முடங்கி இருந்த பெண்களை வெளியே கொண்டுவர பெண் முன்னேற்ற அரசியல் தேவைப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில்  நாம் காணக்கூடிய அரசியல் என்ன தெரியுமா ? நமக்கு தேவையே இல்லாத, நம்மை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டிருக்க கூடிய, ஜனநாயகத்தை சிதைக்கக்கூடிய ஆதிக்க அரசியலும் ஊழல் அரசியலும், வாரிசு அரசியலும்தான். 

ஆக இதிலிருந்து நாட்டை மீட்பதோடு மட்டுமல்லாமல், நாமும் மீண்டு வர மக்களாகிய நாம் இன்றைய அளவில் கையில் எடுக்கவேண்டிய அரசியல் ஊழலுக்கு எதிரான அரசியல். 

இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் நாட்டிற்கு நலன் கிடைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அரசியல்தான் நான் மேற்சொன்ன பல்வேறு நன் அரசியல்களுக்கெல்லாம் தொடக்கமாக இருக்கக்கூடிய அறம் சார்ந்த அரசியல். அதாவது நாம் சார்ந்துள்ள அரசியலில் நேர்மை, தூய்மை, ஒழுக்கம், வாய்மையுடன் வாழ்ந்து அனைவருக்கானவராகவும் இருப்பதே அது. ஒருவேளை அரசியலில் அறம் இல்லை என்று சொன்னால் அநீதி மேலேங்கும். அதர்மம் எழுந்தாடும். நன்மக்கள் துன்பப்படுவர். இஃது அழிவையும் அக்கிரமத்தையும் விளைவிக்கும்.  

அப்படியென்றால் தற்கால அரசியலில் அறம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் நாம் முதலில் அறத்துடன்தான் நடந்து கொள்கிறோமா என்ற இன்னொரு கேள்விதான். தனிமனிதனில் இருந்துதான் தொடங்குகிறது சமூக மாற்றமாகட்டும் அரசியல் மாற்றமாகட்டும். நம் அளவில் சரியாக இருப்பதே நாம் அரசியலில் காட்டும் அறம். 

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" வரிக்கான பொருள் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 


அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் செய்வது. அரசியலில் இருந்து தான் நீதி, நியாயம், தர்மம் என்ற அனைத்தும் உற்பத்தியாகின்றன என்ற பேருண்மையை உணர்ந்து, எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக எழுதப்பட்ட  "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற விடயத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும், குடிமகனும் தம்முள் ஆழப்பதிவு செய்தல் வேண்டும். முன்னரே சொன்னதுபோல் தேர்தலில் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திலும், உங்கள் பணியிடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் பல்வேறு அரசியல்கள் இருக்கின்றன. அங்கு நீங்கள் காட்டும் அறம்தான் உங்கள் வாழ்வினுக்கு அழகு சேர்க்கும் உங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என்பதையும் தயவுகூர்ந்து மனதில் வைத்து செயலாற்றுங்கள்.   


மறக்காமல் வாக்களிப்போம் ! அறம் காப்போம் !


மறக்காமல் வாக்களிப்போம் ! அறம் காப்போம் !


உங்களது மேலான கருத்துகளை கீழே பதிவிடவும். நன்றி .

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்