1. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான மனநிலை எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்பு வாக்குகள் எங்கு செல்கிறது?
2. நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள். இது எந்த கட்சிக்கு செல்கிறது?
3. கட்சியின் செயல்பாடுகளால் திருப்தியில்லாத / உற்சாகமடையாத கட்சி உறுப்பினர்களின், தொண்டர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
4. முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ? இளைஞர்கள் வாக்குகள் எங்கு செல்கிறது?
5. நகர்ப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ? கிராமப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ?
6. அதிகமாக கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதிலை பொறுத்து முடிவு செய்யப்படும் வாக்குகள். ஓட்டுக்கு பணம் வந்துவிட்டதா ?
7. பெரும்பாலான மக்களின் மன ஓட்டத்தில் இருந்து, கருத்துக்கணிப்பில் இருந்து இவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் நமது ஓட்டை ஏன் வீணடிக்க வேண்டும் என வாக்களிப்பவர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
8. கண்களுக்கும் காதுகளுக்கும் முக்கியமாக ஆழ்மனதிற்கும் நினைவகத்திற்கும் செல்லும் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஏராளம். இப்படியாக மாறும் வாக்குகள் எந்த கட்சிக்கு அதிகம் சென்றடைகிறது ?
9. தமக்கோ, தமது தொகுதிக்கோ யார் வந்தால் நல்லது என்பதன் அடிப்படையில் செலுத்தும் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
10. உள்ளபடியே யார் நல்லது செய்தார்கள் (அ) யார் நல்லது செய்வார்கள் என்பதன் அடிப்படையில் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
11. அரசியல் புரிதலின்மை , அரசியல் ஆர்வமின்மை, அரசியல் குழப்பம், அரசியல் மடமை, அரசியல் அலட்சியம், அரசியல் வெறுப்பு உட்பட்ட காரணிகளால் யாருக்கு வாக்களித்தால் என்னாக போகிறது ? என அளிக்கப்படும் வாக்குகள் எங்கு செல்கிறது ?
12. மதத்தின் அடிப்படையிலான, ஜாதி அடிப்படையிலான வாக்குகள் எங்கு செல்கிறது ?
இக்கேள்விகளுக்கான பதிலே யார் ஆட்சிக்கு வரமுடியும் என்பதற்கான பதிலாகவும் இருக்க முடியும். வாருங்கள் இதற்கு என்ன பதிலாக இருக்க முடியும் என்பதை யூகிக்கலாம்.
இம்மனநிலை மாற்றத்தால் பலன் அடையும் கூட்டணி எது ? நம் பதில்கள் என்ன ?
1. பதில் : கட்சிக்கு எதிராக இருக்கும் வாக்குகள் பல்வேறு வகைகளில் பிரியலாம். முக்கியமாக பிரதான எதிர்கட்சிக்கோ, மாற்றத்திற்காக நிற்கும் கட்சிகளுக்கு ஒருவாய்ப்பை தரலாம் என்ற நோக்கிலோ, வளர்ச்சி அடைந்து வரும் கட்சிக்கோ, யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்களோ அங்கெல்லாம் செல்லலாம். தமிழ்நாட்டை பொறுத்தளவில் இது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் திமுகவை பொறுத்தவரையில் மிகப்பெரிய அதிர்வலை இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் இருக்கத்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லையென்பதால் எதிர்ப்பு இல்லை. அதே சமயம் ஆதரவும் இல்லை. பாஜகவை பொறுத்தவரையில் 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்தால் அது பாஜகவினை பாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் பாஜக வளரவே தொடங்கி இருக்கிறது. ஒருவேளை பாதித்தால் அது பாஜகவில் உள்ள கூட்டணி கட்சிகளையே பாதிக்க வாய்ப்புள்ளது. தேசிய கட்சிகள் எதனுடனும் கூட்டணி இல்லாமல் திமுக எதிர்ப்புடன் தனித்து போட்டியிடும் அதிமுகவில் பிரிவதற்கு எதுவும் இல்லை. வருவதற்கே உள்ளது. ஆக, திமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் நாம் தமிழருக்கும், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கும், பாஜக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கும் செல்ல வாய்ப்புள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் கடந்த முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் திமுக கூட்டணிக்கு குறைவாகவும் பாஜகவிற்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது. திமுகவிற்கு எவ்வளவு குறைகிறது மற்றும் பாஜகவிற்கு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பொறுத்தே அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதும் குறைவதும்.
2. பதில் : காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கவே இடம் இல்லாமல் மோடி ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்பதே முன்னிலையில் இருப்பதால் ஆதாயம் பெறப்போவது பாஜக மட்டுமே. பாஜக எதிர்ப்பு வலுப்பெற்றால் திமுக வாக்குகள் சிதறடிக்கப்படாமலும் நடுநிலை வாக்காளர்களினுடைய வாக்குகளும் திமுகவிற்கும் கிடைக்கும். அதிமுக இந்த கேள்விக்கான பதிலில் இல்லை.
3. பதில் : தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை, நிறுத்தியிருக்கும் வேட்பாளருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை, உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகள் சரி வர வேலை செய்வதில்லை, தலைமையின் மேல் அதிருப்தி, பிரச்சாரம் எடுபடவில்லை போன்ற காரணங்களுக்காக சோர்ந்திருக்கும் தொண்டர்கள் உள்ளடி வேலைகள் செய்து யாருக்கு வாக்களித்தால் தங்கள் எதிர்ப்பை காட்டமுடியுமா அவர்களுக்கும், பலபேர் தங்களுக்கு பிடித்த இரண்டாவது கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியை விடவும் அதிமுக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதை காண முடிகிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உட்கட்சி பூசலிலும், மதிமுக திமுகவுடனும் சுமூகமாக வேலை செய்ய முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவில் இணைந்துள்ள பாமக மற்றும் தினகரனின் அமமுகவை கட்சிக்காரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை.
4. பதில் : முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்காளர்களின் வாக்குகள் நோட்டாவிற்கும், இதுவரை ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் இருக்கும் கட்சிக்கும், மாற்றத்திற்காக பார்க்கப்படும் கட்சிக்கும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கும் செல்கிறது. தமிழ்நாட்டில் இவ்வாக்கினை பெறுவதில் முதன்மை இடத்தில இருப்பது நாம் தமிழர் கட்சி. அடுத்தபடியாக மோடி, அண்ணாமலை கவர்ச்சிக்காக பாஜகவிற்கும் , கமல் ஆதரிப்பதால் திமுகவிற்கும் கணிசமான வாக்குகள் செல்லலாம்.
5. பதில் : இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நகரங்கள் திமுகவிற்கும் கிராமங்கள் அதிமுகவிற்கும் சாதகமாக இருந்துள்ளன. இதை தாண்டி, இங்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று பார்த்தால், அனைத்து இடங்களிலும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அதிகமாக பெறுகின்றனர் நாம் தமிழர். பாஜகவை பொறுத்தவரையில் மாற்றத்தை விரும்பும் மற்றும் இந்திய அளவில் உலக அளவில் யோசிக்க கூடிய படித்த நகர இளைஞர்களின் வாக்குகளையும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பலரது வாக்குகளை பல இடங்களில் இருந்தும் பெற முடிகிறது. நகர்புறத்தில் அதிகம் பெறுகிறது மக்கள் நீதி மையம்.
6. பதில் : தமிழ்நாட்டின் அரசியலை அழுக்காக்கியதில் முக்கிய பங்காற்றியதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம். ஏதோ ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நடைமுறைபடுத்தப்பட்ட இக்கலாச்சாரம் இப்பொழுது காணும் இடங்களில் எல்லாம் கரைபுரண்டோடுகிறது. 2017ஆம் ஆண்டு நடந்த சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு ஆளும்கட்சியான அதிமுகவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சென்னையை தங்கள் கோட்டை என சொல்லும் திமுகவை டெபாசிட் இழக்க செய்தது ஓட்டுக்கு பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உலகத்துக்கே பேருதாரணமாக அமைந்தது. தேர்தல் வந்தால் குதூகலமாகி ஓட்டுக்கு பணம் வரும் என்று மக்களும் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் பணம் வந்தால்தான் ஓட்டே அளிப்போம் என்ற நிலையில் இருக்கின்றார்கள் என்றால் இதை அரசியல் அவலம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல ? தங்களது சக்திக்கேற்ப அனைத்து கட்சிகளும் இதை செய்யும் என்றாலும் கூட அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள கட்சிகளால் இதை திறம்பட செயல்படுத்த முடிகிறது. ஆளும் கட்சியாக இருந்தால் இன்னும் பலம்.
இடைத்தேர்தலுக்கு ஒருகுடும்பத்திற்கு 10000 முதல் 20000 வரையும், சட்டமன்ற தேர்தலெனில் 4000 முதல் 6000 வரையும் நாடாளுமன்ற தேர்தலெனில் இன்னும் கொஞ்சம் குறைவாகவும் கொடுக்கப்படுவதாக செய்தி. யாரை குறிவைத்து பணப்பட்டுவாடா நடக்கிறது என்று பார்த்தால் அன்றாட கூலியை நம்புவர்களையும், வறுமைக்கோட்டில் இருப்பவர்களையும் எளிதாக அணுகி தங்களது கைப்பாவையாக மாற்ற முடியும் என்பதால் அவர்களே முதல்குறி. இவர்களே எந்த கட்சி மாநாடு போட்டாலும் அதனை வெற்றி மாநாடாக மாற்றுபவர்கள். இரண்டாவது, தமது கட்சிக்கு வாக்களிப்பவர்களாக அறியப்படும் வாக்காளர்களை/ குடும்பத்தை கட்சிக்காரர்களின் மூலமாக அறிந்து அவர்களை நோக்கிய பணப்பரிமாற்றம். யார் பணத்தை செலவு செய்வது என்ற கேள்வியை முன்வைத்தால், வெற்றி பெற்றால் யாருக்கு ஆதாயம் கிடைக்கிறதோ அவர்கள் செலவு செய்வர். கட்சி எந்த உதவியும் செய்யாத பட்சத்தில் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு பணபரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் பாஜகவிற்கு முக்கிய தேர்தல் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்தே சில தொகுதிகளை குறி வைத்து செயல்படுவதால் அங்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது கூட நெல்லையில் நான்கு கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. திமுகவினை பொறுத்தவரையில் ஏற்கனவே எம்.பி ஆக இருந்தவர்களும், மத்திய அமைச்சராக இருந்தவர்களும், முக்கிய தலைவர்களின் மகன்களும் போட்டியிடுவதால் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் சொந்த செலவில் பணப்பட்டுவாடா நடக்கலாம். காரணம் என்னவென்றால் ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அதிமுகவினை பொறுத்தவரை இம்முறை செலவு செய்வது வீண். சட்டமன்ற தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கலாம். அதன் காரணமாகவோ என்னவோ முக்கிய தலைவர்கள் பல பேர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை போலும். கட்சித்தலைமைக்கும் இதே எண்ணம் இருக்கலாம். ஆக மொத்தத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வது கடினம் என்றாலும் கூட, எந்த கட்சியால் தொகுதியில் கட்சிக்காரர்களை தாண்டி அனைத்து பகுதிகளுக்கும் பிரச்சினை எதுவும் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்ய முடிகிறதோ அவர்களுக்கே வாக்குகள் செல்லும்.
7. பதில் : நான் முன்னரே சொன்னது போல் கருத்துக்கணிப்பு பல உள்நோக்கங்களை கொண்டு வெளியிடப்படுகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் தென்படும் பல போலி கருத்துக்கணிப்புகள் உள்பட. அதில் முக்கியமான ஒன்று இந்த கட்சிதான் வெற்றி பெரும் என்று திட்டமிடப்பட்டு பரப்பப்படுவது. அதோடு, தன் குடும்பத்தினர் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம் நண்பர்கள் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம்மை சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் எதற்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதன் அடிப்படையிலும் ஒரு தனிமனித ஓட்டு தீர்மானிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தேசிய அளவில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் பெரும்பாலான கருத்துக்கணிப்பில் இருப்பதால் அவர்களே இக்கேள்விக்கான பதிலில் முந்துகின்றனர். சமூக வலைதள பக்கத்தில் ஆதரவுக்கரம் நாம் தமிழர் பக்கமே நீள்கிறது. ஆனால் நகரத்தை தாண்டி முக்கியமாக கடைக்கோடியில் வாழும் மக்களிடத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை இம்முறை ஏற்படுத்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை.
8. பதில் : தேர்தல் காலத்தில் ஊர் ஊராக வரும் பிரச்சார வாகன ஒலிபெருக்கியின் அலறல் கேட்டவுடன் அதன் பின்னால் ஓடி ஓடி ஒவ்வொரு கட்சியினுடைய துண்டு பிரசுரங்களை வாங்கியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படி நடந்த தேர்தல் பிரச்சாரம் இப்பொழுது நவீன காலத்திற்கேற்ப தொலைக்காட்சி விளம்பரங்களிலும், இணையதள பக்க விளம்பரங்களிலும், செய்தித்தாள் விளம்பரங்களிலும், திரையரங்குகளிலும் அமோகமாக நடக்கிறது. அது தவிர பிரச்சார வாகனங்களும் ஊர் ஊரக சென்று கொண்டுதான் உள்ளன. எது எப்படியோ தினமும் ஏதாவது ஒரு வகையில் மக்களின் காதுகளிலும் கண்களில் படும் வகையில் பிரச்சாரத்தை கட்டமைப்பதே ஒவ்வொரு கட்சியினுடைய தகவல் தொழில்நுட்ப பிரிவின் தாரக மந்திரமாக உள்ளது. இதைவிட ஒரு படி மேலே சென்று விளம்பரத்தை வெறும் வெற்று விளம்பரமாக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு கருத்தோடு படத்தை போலவே கதை திரைக்கதையோடு மிகவும் ரசிக்கும்படியாக தமது கட்சியினை போற்றும் வகையிலோ எதிர்கட்சியினரை கிண்டலடிக்கும் வகையியலோ எடுக்கப்படும் ஒரு நிமிட படக்காட்சிகள் விரைவாக பேசுபொருளாகின்றன. ஆனால் இதற்கு பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் சிறிய கட்சிகளுக்கு எப்பொழுதும் ஆட்டோ பிரச்சாரமே கைகொடுக்கின்றன. தேர்தல் அறிவித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரத்தில் முதலில் முந்தியது அதிமுக. அதனால் சுத்தகரித்துக்கொண்ட திமுக, அந்த காலம் முதலே விளம்பரத்திற்கு பெயர் போன திமுக, தற்பொழுதும் பல்வேறு விளம்பர யுக்திகளை பின்பற்றி இணையதள பக்கங்கள் வரை விளம்பரப்படுத்துகின்றனர். பாஜகவும் விடுவதாக இல்லை. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே இதனடிப்படையில் விழும் வாக்குகள் திமுக, அதிமுக, பாஜக விற்கு செல்லலாம். வெளியூர் வேட்பாளரும், அறிமுகமே ஆகாத வேட்பாளரும் வெற்றி பெற முடிகிறது என்று சொன்னால் இந்த கேள்விக்கான பதிலும் ஒரு காரணம்.
இணையத்தில் மட்டும் அரசியல் செய்தால் போதுமா ? என்ற கேள்விக்கு இன்னொரு 40 (அ) 50 வருடங்களுக்கு பிறகு ஆ ம் என்ற பதில் ஒருவேளை போதுமானதாக மாறலாம்.
9. பதில் : இந்த கேள்விக்கான பதில் மிக எளிமையானது. எந்த வேட்பாளர் எளிதில் அணுகக்கூடியவராக இருக்கிறார், எந்த வேட்பாளர் தொகுதிக்காக போராடி திட்டங்களை பெறுவார், எந்த வேட்பாளரின் கட்சி அந்த தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கும் என யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் அத்தொகுதி சார்ந்த வேட்பாளருக்கும், கடந்த கால வரலாற்றில் நல்ல இடம் பிடித்த வேட்பாளருக்கும், அந்த தொகுதியை பற்றி அடிக்கடி பேசி தொகுதிக்கு வருகை தரும் கட்சியின் வேட்பாளருக்கும் செல்லலாம். இது தொகுதி சார்ந்து இருப்பதால் கட்சி சார்ந்து வகைப்படுத்த முடியாது. ஆனால் திமுகவை பொறுத்தவரை ஒரு தொகுதியில் பல முறை போட்டியிட்டு வென்றவர்கள் பலபேர் இம்முறையும் பல தொகுதிகளில் போட்டியிடுவது அவர்களுக்கு சாதகம். பாஜகவை பொறுத்தவரை முன்னணி தலைவர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதனால் வாக்கு சதவிகிதம் சற்று அதிகரிக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சில தொகுதிகளில் வேட்பாளர்களின் தனி செல்வாக்கால் முன்னணி பெறுகின்றனர். (குறிப்பாக கோவை )
10. பதில் : போன கேள்வியும் இந்த கேள்வியும் ஒரே மாதிரி தெரிந்தாலும் இது நேரடியாக கட்சி தலைமையையும் ஆட்சி நடத்தும் திறனையும் சார்ந்துள்ளது. என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தால் ஏதேனும் வகையில் நாம் பயன் அடைந்தோமா ? நடக்கும் ஆட்சி திருப்திகரமாக இருக்கிறதா ? வாழ்வதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? நீண்டகால கோரிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டனவா ? குடும்பத்துக்கான, ஊழலுக்கான ஆட்சியாக இருக்கிறதா இல்லை மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறதா ? இப்படியான பல கேள்விகளுக்கான பதிலை யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் உள்ளபடியே நல்லது செய்யும் கட்சிக்குத்தான் செல்லும். ஆனால் நடைமுறையில் இதற்கு மாறான ஒரு யோசனையும் இருக்கத்தான் செய்கிறது. என்னவென்றால், குறைந்தபட்சம் நல்லவருக்கு வாக்களிப்பது. அதாவது இவருக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை என்ற ரீதியில் வாக்களிப்பது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பெண்களின் வாக்குகளை பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கான மாத உதவித்தொகை ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை பொறுத்து திமுகவிற்கு வாக்குகள் கூடலாம். (வெளியில் இருந்து பார்க்கும்போது நல்ல திட்டங்கள் போல் இருந்தாலும், வாக்குக்காக செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் தேவையா என்பது விவாதத்துக்கு உரியது)
11. பதில் : படித்தவர்களின் வாக்குகள் பலனில்லாத நோட்டாவிற்கும், படிக்காத பாமரனின் வாக்குகள் சுயேட்சைகளுக்கு அதிர்ஷ்டமாகவும் அமைகின்றன.
12. பதில் : மதத்தினை பொறுத்தவரையில், சிறுபான்மையினர் காவலராக தங்களை எப்பொழுதும் காட்டி கொள்ள முற்படும் திமுக கிறித்துவ, இஸ்லாமியர்களின் வாக்குகளை கணிசமாக பெறலாம். பாஜகவில் இருந்து பிரிந்த பின்னர் அதிமுகவிற்கும் சிறுபான்மையினர் வாக்குகள் வர கூடிய சூழல் உள்ளது. அதே சமயம் திமுக செய்த அதே வேலையை தற்போதைய பாஜகவும் செய்வதால், அதாவது இந்துக்களுக்கான கட்சியாக, தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தும் கட்சியாக தங்களை காட்டிக்கொள்வதால் பெரும்பான்மையான இந்துக்களில் குறிப்பிடத்தகுந்த சதவிகிதம் பாஜகவிற்கு வரலாம். பெரும் சதவிகிதம் கட்சி சார்ந்து பிரியலாம். மதத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் அரசியல் சுற்றுவது சாதியை மையத்தில் வைத்தே. பல்வேறு சாதிகள், ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பிரியும் வாக்குகள் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ தொகுதிகளை கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விடுகின்றனர் பெரிய கட்சிகள். தங்களது சாதியை முன்னேற்ற வழிவகை செய்யாமல் சாதியை ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வர நினைப்பவர்களே அதிகம். சாதிப்பிரிவினையை மறைமுகமாக தூண்டி சாதிய பற்றுதலை சாதிய வெறியாக்குகின்றனர் தங்களது சுயநலத்துக்காக. சாதியை பற்றி பேசாமல் இருந்தாலே, சாதிய பற்றுதல் காலப்போக்கில் கழிந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் அதை அப்படியே விட்டால் இவர்களது பலத்தை எப்படி காட்டுவது எப்படி சீட்டுகளை பெறுவது ? அதற்காகவே சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியை போல தெரிந்தோ தெரியாமலோ மனித சமுதாயத்துடன் ஒட்டி வந்த சாதி எனும் தூசியை அவர்களை காக்கும் கவசமாகவும் கௌரவமாகவும் வசதிக்கேற்ப மாற்றிவிட்டனர். ஒரு நல்ல சாதிய தலைவரின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சாதிய நல்லிணக்கத்திற்கு போராடுபவராகவும் தனது சாதியில் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள மனிதர்களை மேலே தூக்கி விடுவதற்க்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும். சாதி ஒழிய வேண்டும், மத சார்பற்ற கூட்டணி, சமூக நீதி என்று பேசுபவர்கள் உட்பட அனைத்து கட்சியினரும் தொகுதிகளில் சாதியை மையப்படுத்தியே வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே சாதி சார்ந்த வாக்குகள் தத்தமது சாதி சார்ந்த கட்சி மற்றும் சாதி சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவாகவும் தத்தமது கட்சிக்கு எதிரான பகைசாதி சார்ந்த கட்சி மற்றும் பகைசாதி சார்ந்த வேட்பாளருக்கு எதிராகவும் செல்கிறது.
அடுத்து நேரடியாக கருத்துக்கணிப்பிற்குள் செல்லலாம். நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புள்ள கூட்டணி எது ?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல் அரசியல் பற்றி
எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment